ஞாயிறு, 19 டிசம்பர், 2010

அமெரிக்காவிற்கே பிடிக்காத ‘மூன்றாவது அணி’2009ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்குப்பின் இந்தியாவில் இடதுசாரிகளின் தலைமையில் மூன்றாவது முண்ணனி ஆட்சியைப் பிடித்துவிடுமோ என்று அமெரிக்கா கவலைப்பட்டதாக விக்கிலீக்ஸ் மூலம் செய்தி வெளியாகியுள்ளது, அதற்கு முந்தைய நாள் தான் கம்யுனிஸ்ட் கட்சியின் செயலர் பிரகாஷ்காரட் காங்கிரஸ் கட்சியை ‘மிரட்டியே’ காரியம் சாதித்தார் என்று அமெரிக்க தூதரகம் தன்னுடைய நாட்டுக்கு தகவல் அனுப்பியுள்ள செய்தியும் வெளியாகியுள்ளது. நிச்சயமாக அமெரிக்காவின் கவலை நியாயமானது தான், ஏனென்றால் 2008ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார தேக்கநிலையால் அவதிப்படும் அமெரிக்காவிற்கு இந்தியாவுடன் செய்துகொண்ட அணுசக்தி ஒப்பந்தம் மூலம் தன்னுடைய நாட்டில் வேலைவாய்ப்பு பெருகுவதுடன் அமெரிக்க நிறுவனங்களுக்கு கிடைக்கயுள்ள வாழ்வு பறிபோகுமே என்ற பயம் தான். இடதுசாரிகள் தலைமையில் அல்லது ஆதரவுடன் ஆட்சி அமைந்தால் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையிலும் கை வைப்பார்கள். அணிசேரா நாடுகளை ஒன்று சேர்ப்பார்கள், தற்போதுள்ள அமெரிக்க சார்பு கொள்கையை தலைகீழாக மாற்றுவார்கள் என்ற பயம் தான்.

இந்தியாவில் அமெரிக்க தூதரக அதிகாரிகள் ஏதாவது விழாக்களில் பங்கேற்கிறார்கள் என்று தினந்தோறும் நாளிதழ்களில் செய்தி வருகிறது. இதிலிருந்து அமெரிக்கா இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவது வெளிச்சமாகிறது. உலகம் முழுவதிலும் கம்யூனிச எதிர்ப்பை கடைபிடித்துவரும் அமெரிக்கா இந்தியாவிலும் கம்யூனிச எதிர்ப்பாளர்களுக்கு ஏன் உதவி புரிந்திருக்க வாய்ப்பில்லை? என்ற கேள்வி வருகிறது. அடுத்தடுத்து வெளிவருகிற விக்கிலீக்ஸ் மூலம் நமக்கு தகவல் கிடைக்கலாம். ஓரிரு மாதங்களுக்கு முன்னர் வெனிசூலாவில் நடைபெற்ற தேர்தலில் சாவேஸூக்கு எதிராக தேர்தல் களத்தில் உள்ள கட்சிக்கு அமெரிக்கத் தூதரகம் பணவுதவி செய்தது வெளிச்சத்திற்கு வந்தது.

மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுசெயலர் பிரகாஷ்காரட் காங்கிரஸ் கட்சியை ‘மிரட்டியே’ காரியம் சாதித்தார் என்ற செய்தியை அமெரிக்க தூதரகம் விரிவாகச் சொன்னால் இந்திய மக்களுக்கு நல்லது, ஏனென்றால் தன்னுடைய சொந்த நலனுக்காகவும் கட்சியின் நலனுக்காகவும் அமைச்சரவையில் பங்கு போட்டு அரசியலை லாப நோக்கத்தில் நடத்துபவர்கள் மத்தியில் 60க்கும் மேற்பட்ட மக்களவை உறுப்பினர்களைக் கொண்ட இடதுசாரிகள் எந்தவித எதிர்பார்ப்புமின்றி நாட்டுமக்கள் நலனே முக்கியம் என்றிருந்தார்கள். அது தான் அமெரிக்கவிற்கே கிலி ஏற்படுத்தியிருக்கிறது.உண்மைகள் வெளிவரும் காலம், உரக்கப்பேசட்டும் விக்கிலீக்ஸ்..

கருத்துகள் இல்லை: