வெள்ளி, 24 செப்டம்பர், 2010

நெஞ்சு பொறுக்குதில்லையே....காமன்வெல்த் போட்டி நடைபெற இன்னும் ஒரு வார கால இடைவெளிதான் உள்ளது, தினமும் ஏதாவது பாலம் உடைந்துவிழுவது,கூரை சரிந்து விழுவது இன்னமும் விளையாட்டு அரங்குகளை கட்டிக்கொண்டேயிருப்பது என இருக்கிறது. ஒவ்வொரு செங்கலிலும் ஊழல் செய்திருக்கிறார்கள் அதனால் தான் விழா தொடங்குவதற்கு முன்பே இடிந்து விழ ஆரம்பிக்கிறது. ரூ 70,000 கோடி செலவில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிகள் தோல்வியடைய வேண்டும் என்று அரசின் செயல்பாடுகளை கண்டு மனம் நொந்து காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மணிசங்கர் ஐயர் கருத்து தெரிவித்தார். உடனே பாஜகவும் காமன்வெல்த் அமைப்பாளர்களும் கொதித்தார்கள். அவர் உண்மையைத்தான் கூறியிருக்கிறார். நாட்டின் மக்களில் 70 சதவீதத்திற்கும் மேல் வறுமையால் வாடிக்கொண்டிருக்கும் வேளையில் நமக்கு இந்த தம்பட்டம் தேவைதானா. இந்த காமன்வெல்த் போட்டியால் இந்தியாவிற்கே தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறார்கள் அதன் அமைப்பாளர்கள். அதன் தலைவர் சுரேஷ் கல்மாதியிடம் ஏன் பாலம் இடிந்து விழுகிறது என்று கேட்டால் இதெல்லாம் எல்லா நாட்டிலும் விளையாட்டு அரங்கு அமைக்கும்போது நடப்பது தான் என்று கூசாமல் சொல்கிறார். எனக்கு நினைவு தெரிந்தவரை இவர்தான் ஒலிம்பிக் கமிட்டியில் தலைவராக இருக்கிறார். இவர்கள் ஊழல் செய்து சொத்து சேர்ப்பதற்காகவே இந்த காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகள் என்பது தெளிவு. அதற்கு மக்களின் வரிப்பணம் வீண் செய்யப்படுகிறது. முதலில் இந்தியாவில் விளையாட்டு வீரர்களை உருவாக்கவேண்டும், வெள்ளைக்காரர்களின் விளையாட்டான கிரிக்கெட்டை பெப்சி,கோக்,வில்ஸ் நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்து அவர்களின் வியாபாரத்தை இந்தியாவில் பெருக்கினார்கள். ஆனாலும் இப்போது அந்த “தேசிய” கிரிக்கெட் வீரர்கள் தனியார் நிறுவனத்திற்கு விலைபோக ஆரம்பித்து விட்டார்கள். ஏற்கனவே பொய்கள் கூறும் விளம்பரங்களில் வந்து மக்களை ஏமாற்றினார்கள். உலக அரங்கில் விளையாட்டு என்றால் அது ஒலிம்பிக் தான், அதில் ஒரு நாடு எத்தனை தங்கம் பெற்றது என்பதை வைத்து தான் அந்த நாட்டின் Human Development Index வெளிப்படுகிறது. ஒரு மத்திய அமைச்சர் அதுவும் உணவு மற்றும் விவசாயத்துறைக்கு பொறுப்பு வகிப்பவர், நாட்டின் உணவு தானியக்கிடங்குகளில் புழுத்துப் போகும் அரசியை, கோதுமையை பட்டினியி வாடும் மக்களுக்கு இலவசமாக தரவேண்டும் என்று சுப்ரீம் உத்திரவிட்டும் அதை அரசின் “பாலிஸி” மேட்டரில் கோர்ட் தலையிடக்கூடாது என்று பிரதமர் சொல்கிறார். இன்னும் அந்தத் துறை அமைச்சர் சரத்பவார் வெளியிலேயெ தலைகாட்டவில்லை காரணம் ICC யிலும் BCCI யிலும் ரொம்ப பிஸி, இதில் பிரதமருக்கு என்னுடைய “வேலைப்பளு” அதிகம் என்று கடிதம் எழுதுகிறார். உடல்நலக்குறைவால் அவதிப்படும் ஒருவரை ஏன் மன்மோகன்சிங் விடாப்பிடியாக உட்காரவைத்து அமைச்சர் வேலை கொடுக்கறார் என்று தெரியவில்லை.

சரத்பவார் பணம் தரும் விளையாட்டில் கவனம் செலுத்துவது போல இன்னொரு மத்திய அமைச்சர் மம்தா பானர்ஜி மேற்குவங்க அரசியலுக்காக ரயில்வே அமைச்சத்தின் தலைமையகத்தையே கல்கத்தாவிற்கு மாற்றிவிட்டார். இவர் பதவியேற்றதிலிருந்து ரயில் விபத்துக்களால் இதுவரை 270 பேர் பலியாகியிருக்கிறார்கள். ஒவ்வொரு விபத்திற்கும் மார்க்சிஸ்ட் கட்சியே காரணம் என்று கூசாமல் குற்றம் சாட்டுகிறார். பிரதமர் மன்மோகன்சிங், மாவோயிஸ்ட்கள் தான் தேசபாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று அறிக்கை விடுக்கிறார். ஆனால் மந்திரிசபையில் இடம்பெற்றுள்ள மம்தா பானர்ஜி மாவோயிஸ்ட்களை ஆதரிக்கிறார். சென்ற மக்களவை தேர்தலிருந்து இதுவரை மேற்குவங்க மாநிலத்தில் மாவோயிஸ்ட்களால் 280க்கும் அதிகமான மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள், ஆதரவாளர்கள், பழங்குடியினர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆயுத உதவியும் கூட மம்தாவின் கட்சியான திருணாமூல் காங்கிரஸ் அளித்து வருகிறது. அரசியல் ரீதியாக ஆளும் இடதுசாரிகளை எதிர்கொள்ளமுடியாமல் மாவோயிஸ்ட்கள் என்ற சீரழிவு சக்திகளை “இறக்குமதி” செய்து வன்முறையின் மூலம் சாதிக்கலாம் என்று நினைக்கிறார். மம்தாபான்ர்ஜி யின் கட்சிக்கும் மாவோயிஸ்ட்களுக்கும் உள்ள தொடர்பை ஆதாரங்களுடன் பலமுறை பிரதமரிடமும் உள்துறை அமைச்சருடனும் முறையிட்டும் பலனில்லை.காங்கிரஸ் கட்சிக்கும் இடதுசாரிகளை முக்கியமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஒழித்துவிட்டால் பாராளுமன்றத்தில் பொருளாதார சீர்திருத்தத்திற்கு எந்த எதிர்ப்பும் இருக்காது என்று கள்ள மெளனம் காக்கிறார்கள்.

அமெரிக்க கார்ப்பரேட் நலன்களுக்கு நன்மை தரும் அணுசக்தி இழப்பீட்டு மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறவில்லையென்றால் பதவி துறப்பேன் என்று கூறும் பிரதமர், சக நாட்டு விவசாயி வாழ்வாதாரம் இல்லாமல் தற்கொலை செய்வதைக் கண்டு எப்போதாவது மனம் வருந்தினாரா? காமன்வெல்த் விளையாட்டில் ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல், மருத்துவத்துறை அதிகாரி கேதன் தேசாய் செய்த ஊழல், இந்த நாட்டின் இயற்கை கனிம வளங்கள் அனுமதியில்லாமல் கொள்ளையடித்து செல்லப்படுகின்றன அதை குறித்து கவலைப் படுகிறாரா? இந்த தேசத்தை கொஞ்ச கொஞ்சமாக பெருமுதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவங்களுக்கும் விற்று வருகிறார். நாட்டின் GDP 8 முதல் 9 சதம் உயர்கிறது என்று அறிக்கைவிட்டால் போதுமா? யாருக்கான வளர்ச்சி. குறிப்பிட்ட சில கார்ப்பரேட் நிறுவனங்கள் அதீத வளர்ச்சியடைந்தால் அது அரசாங்கத்தின் “பாலிஸி” யால் தானே?

ஐக்கியமுண்ணனியின் கூட்டாளிகள் திமுக உட்பட யாரும் காங்கிரஸின் மக்கள் விரோத கொள்கைகளை கேள்வி கேட்பது கிடையாது,ஏனென்றால் இவர்களுக்கும் அந்த “பாலிஸி” யில் பங்கு தானே! இதையெல்லாம் மக்கள் எப்போதும் சகித்துக்கொண்டேயிருக்கமாட்டார்கள்.

4 கருத்துகள்:

kashyapan சொன்னது…

தோழர்! பள்ளிக்கூடவாசலில் சவ்வுமிட்டாய் விற்பவர்கூட "முதலாளி" என்று அழைத்தால் மகிழ்கிறார்.அவரின் அந்த மகிழ்ச்சிதான் மன மோகன சிங், லால் கிஷ்ன் அத்வானி ஆகியோரின் பாதுகாப்பு கவசம். கடுமையான பணி நமக்கு.
"போற்றுபவர் போற்றட்டும்; புழுதிவாரித்
தூற்றுபவர் தூற்றட்டும்; ஏற்றது என் மனம்
ஒரு கருத்தையெனில் எவர் வரினும் நில்லேன்;
அஞ்சேன்"
என்பது கவி வாக்கு. செயல் படுவோம்.வாழ்த்துக்கள்---காஸ்யபன்.

hariharan சொன்னது…

தோழர்.காஸ்யபன், வருகைக்கு நன்றி!

Unknown சொன்னது…

அற்புதமான கட்டுரைகள்....உங்கள் பதிவுகளை தமிழ்மணத்திலோ அல்லது தமிழிஷ் தளங்களிலோ வெளியிடுவதில்லையா? வெளியிட்டால் ஒரு வெகுஜன வாசிப்பிற்கு வழிசெய்யுமே...தொடர்ந்து எழுதுங்கள் தோழர்! வாழ்த்துக்கள்!!!
(அடிக்கடி நம்ம ”கடை” பக்கமும் வந்து போங்க)

hariharan சொன்னது…

வருகைக்கு நன்றி anto அவர்களே.

உங்களின் கருத்து ஊக்கமளிக்கிறது.