ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

BSNL விற்பனைக்கு!

நமது அரசு புதிய திட்டங்களுக்கும் மக்கள் நல பணிகளுக்கும் நிதியின்றி தவிக்கிறது, தேசத்தை ஆள்பவர்கள் கடன் வாங்கலாம் என யோசிக்கிறார்கள் உடனே நம்மீது அக்கறை கொண்டு உலக வங்கியும் பன்னாட்டு நிதி நிறுவனமும் கடன் தரமுன்வருகிறது ஆனால் நிபந்தனைகளைப் பற்றி கடனாளிகள் யோசிப்பதில்லை நம்மீது ஏன் கருணை காட்டுகிறார்கள் என்றும் எண்ணவில்லை வாங்கு கடனை எல்லாவற்றிலும் கைச்சாத்திடு.

இப்படித்தான் இந்திய அரசு கடன் வாங்கி அதன் நிபந்தனைகளை ஒவ்வொன்றாக செய்து வருகிறது, என்ன நிபந்தனைகள் பொதுத்துறையை தனியார்மயமாக்கு, மக்களுக்கு வழங்கும் மானியங்களை குறை, நிதிமூலதனத்தை தாராளமயமாக்கு,அன்னியமூலதனத்திற்கு அனுமதி என பட்டியல் நீள்கிறது. கடன் கொடுப்பதே வலையில் சிக்கவைப்பதற்குத்தான் என்பது வாங்கியவர்களுக்கும் தெரியும். இப்படி வாங்குவதாலும் சர்வதேச நிதி நிறுவனம் கூறுவதை செயல்படுத்தினாலும் இவர்களுக்கு என்ன லாபம் என்பதை இந்திய கறுப்புப்பணம் சுவிஸ் வங்கிகளில் நிரம்பிவழிவது தான் சாட்சி. இப்போது அரசுத்துறை நிறுவனமான " BSNL" ல் மீது பார்வை.

இந்திய அரசின் முழுக்கட்டுபாட்டில் செயல்பட்டுவரும் BSNL நிறுவனம் 2000ம் ஆண்டு தான் நிறுவனமாக உருப்பெற்றது, அதுவரையில் மத்திய அரசின் வருமான வரித்துறை போன்று அதுவும் ஒரு துறையாகத்தான் இருந்தது. தொலைத்தொடர்பு துறையை தனியார் மயமாக்கவேண்டும் என பிள்ளையார் சுழி போட்டதே அதை நிறுவனப்படுதியதில் ஆரம்பிக்கிறது. அப்போதே தொழிற்சங்கங்கள் அதை எதிர்த்து போராடினர் ஆனால் அரசு கூரிய காரணம் “மதிப்பிட” வேண்டியதற்காகத்தான் என சப்பைகட்டியது. உலகில் நான்காவது பெரிய தொலைதொடர்புத்துறை நிறுவனமான் BSNL ன் சொத்து மதிப்பு சுமார் ரூ.60,000 கோடி. நிறுவனத்தின் ஆண்டிற்கான விற்றுமுதல் ரூ. 35,000 கோடி மறும் நிகர லாபம் சுமார் ரூ.9000 கோடி. பலவேறு வங்கிகளில் ரூ.35,000 கோடிவரை சேமிப்பாக முதலீடு செய்துள்ளது. கிராமம், நகரம் என பார்க்காமல் மக்களுக்கான சேவை என்பதை 5.9லட்சம் இந்திய கிராமங்களில் 5.6 கிராமங்கள் வரை இதன் சேவை பரவியுள்ளது. மேலும் தற்போதைய ஊழியர் எண்ணிக்கை சுமார் 3 லட்சம் பேர் நாட்டின் சமூக நீதியின் அடிப்படையில் பின்தங்கிய பிரிவினருக்கும் வேலைவாய்ப்பை வழங்கிவருகிறது. இதை விட நமது ஆட்சியாளர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்கள் தரும் அறிவுரை தான் பெரிது.

தற்போது பிரதமரின் நேரடிப்பார்வையில் நியமிக்கப்பட்டுள்ள சாம் பிரிட்ராடோ குழு அளித்துள்ள அறிக்கையில் முக்கியமானது 30 சதவீத பங்குகளை விற்கவேண்டும், நிறுவனத்தின் 1/3 அளவு ஊழியர்களை விருப்ப ஓய்வுத்திட்டத்தின் மூலம் வெளியேற்றவேண்டும் மேலும் சில வேலைகளை அவுட்சோர்சிங் மூலம் செய்யவேண்டும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் 60,000 ஊழியர்கள் பணிமூப்பு காரணமாக ஓய்வு பெற உள்ள நிலையில் அறிக்கையின் அவசரம் என்ன? சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய பொதுத்துறை நிறுவங்களில் ஒன்றான “ நவரத்னா” அங்கீகாரம் பெற்ற VSNL நிறுவனத்தின் பங்குகளை டாடா நிறுவனத்திற்கு விற்கும் அதை பங்குதாரராக இணைத்தது முடிவில் அது டாடாவிற்கே சொந்தமாக மாறிவிட்டது, BSNL m அதைப் போல் ஆக்கப்படும் என்பதில் ஐயமில்லை.


கடந்த 15 ஆண்டுகளாக பொதுத்துறை நிறுவனங்கள் நலிவடையச் செய்யப்பட்டன, அதன் பங்குகள் அடிமாட்டு விலைக்கு தனியாருக்கு மாற்றப்பட்டன. இந்த நாட்டின் ஒவ்வொரு பொதுச்சொத்தும் விரைவாக தனியார் , பன்னாட்டு நிறுவனக்களுக்கு மாற்றப்பட்டு வருகிறது இதற்கு ஆட்சியில் பங்கு வகித்த அனைத்து அரசியல் கட்சிகளும் பொறுப்பு. நேரு பொதுத்துறை நிறுவங்களை இந்த நாட்டின் கோவில்கள் என்றார் ஆனால் இன்று ஆட்சியாளர்கள் கோவில் சொத்துக்களை விற்று விட்டு சாப்பிடுகிறார்கள். எங்கே முடியும். இழப்பு விற்கப்படும் ஒவ்வொரு நிறுவனத்தின் ஊழியர்களுக்கு மட்டுமல்ல 120 கோடி இந்தியர்களுக்கும் தான்.

கருத்துகள் இல்லை: