புதுச்சேரி பிரெஞ்ச் காலனியாதிக்கத்தில் இருந்த காலம் அது, 1873ம் ஆண்டு ஜனவரி16ம் தேதி தமிழர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய நாளில் பொன்னுத்தம்பிபிள்ளை என்பவர் புதுச்சேரியில் சட்டம் படித்துவிட்டு நீதிமன்றத்திற்கு வழக்கறிராக செல்கிறார். உத்தியோகத்தின் முதல் நாள், நீதிமன்றத்தின் படிகளில் ஏறி வாசலில் நின்று கனம் நீதிபதிக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு உள்ளே நுழைகிறார். உடனே நீதிபதி ‘முசே பொன்னுத்தம்பிபிள்ளை’ இது என்ன காலில் என்கிறார். வழக்கறிஞர்களும் தாங்களும் அணிகிற சப்பாத்து (ஷூ) க்களைத்தான் தாம் அணிந்துள்ளோம் என்கிறார் பொன்னுத்தம்பி.
அது தெரிகிறது, இந்தியர்கள் சப்பாத்து அணிய அனுமதியில்லையே, பிரெஞ்சுக்காரர்கள் மட்டும் அணிய உரிமை பெற்ற சப்பாத்துக்களை இந்தியர் அணிவது அழகல்லவே“ என்கிறார் நீதிபதி.
மதிப்பிற்குரிய நீதிபதி அவர்களே நான் நீதிமன்றத்திற்குள் ஒரு வழக்கறிஞராகவே வந்துள்ளோம் இந்தியனா ,பிரெஞ்சியனா என்கிற பகுப்பு எழவில்லையே என்றார் பொன்னுத்தம்பி.
ஏனைய இந்தியர்களைப் போல் வெறும் காலுடன் நீதிமன்றத்திற்குள் வாரும் இல்லையென்றால் வெளியேரும் என்கிறார் நீதிபதி.
வழக்கறிஞர்களின் உடைகளுடன் சப்பாத்துகளை அணிந்து நீதிமன்றத்திற்குள் பிரவேசிப்பேன் இல்லையென்றால் இந்த வழக்கறிஞர் பணியை துறப்பென் என்று பிரான்ஸ் தேசத்திலிருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிக்கு கடிதம் எழுதுகிறார். பாரீசில் பொன்னுத்தம்பிபிள்ளையின் நண்பரும் பிரெஞ்சு தேசத்து வழக்கறிஞரான முய்ல் கோதேன் இந்த வழக்கை நடத்தி வெற்றி பெறுகிறார்.
சில மாதங்களுக்குப்பின்னர் சப்பாத்து அணிந்து நீதிமன்றத்திற்கு செல்கிறார், அதற்குள் பல நீதிபதிகள் மாறிவிட்டார்கள். புதிய நீதிபதி தன்னுடைய இருக்கையிலிருந்து எழுந்து வந்து ‘முசே பொன்னுத்தம்பிபிள்ளை’ வாரும் என்று வரவேற்று, வழக்குறைஞர் இருக்கையில் அமரவைக்கிறார். இந்தச் சம்பவம் புதுச்சேரியில் பிரெஞ்சு ஆட்சிக்கெதிரான விடுதலை வேட்கையில் ஒரு மைல்கல்லாக இருந்திருக்கிறது. ‘ல போர்த்’ என்னும் பிரெஞ்சு சொல்லுக்கு கதவு என்று பொருள். பிரெஞ்சுக்காரர்களை எப்படி காலனிஅரசு நடத்துகிறதோ அதே வழியில் இந்தியர்களை நடத்த வழிகோலியதால் பொன்னுத்தம்பிபிள்ளையை ‘ல போர்த்’ என்றழைத்தார்கள். தெருக்களின் பெயர்களை முக்கியப் பிரமுகர்களின் பெயர்சூட்டும் வழக்கத்தில் ஒரு தெருவிற்கு ‘பொன்னுத்தம்பி லப்போர்த் தெரு’ என்று பெயரிடப்பட்டது.
தகவல் - பிரபஞ்சன் அவர்கள் எழுதிய சிறுகதைகளிலும் கட்டுரைகளிளிருந்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக