வியாழன், 2 பிப்ரவரி, 2012

புராதனப்பொருட்கள்

சில தினங்களுக்கு முன்னர் பாக்தாத் மியூசியத்திலிருந்து காணாமல் போன 6500 ஆண்டு தொன்மைவாய்ந்த ‘தங்க ஜாடி’ கிடைத்துள்ளதாக செய்திவந்தது. ஈராக்கின் தேசிய அருங்காட்சியத்திலிருந்த பொருட்கள் எப்படி காணாமல் போனது? அது சதாம் ஆட்சியை ஒழிக்க 2003 ஆண்டு ஈராக் மீது அமெரிக்க கூட்டுப்படைகள் படையெடுத்தபோதுதான். எல்லா போர்களிலும் வெற்றிபெற்ற நாடுகள் தோற்றவர்களின் புராதனச் சின்னங்களை உடைப்பார்கள், சிதைப்பார்கள் தங்கமாகவோ, ஆபரணங்களாவோ இருந்தால் கொள்ளையடிப்பார்கள். இதே போன்றுசென்ற ஆண்டு எகிப்தில் ஆட்சிமாற்றத்திற்கான கிளர்ச்சியில் ஈடுபட்ட மக்கள் எகிப்தின் அருங்காட்சியகத்திலுள்ள பொருடகளை சேதப்படுத்தியுள்ளனர். உலகத்தின் தொன்மையான நாகரீகங்களின் நிலைமை இது தான். இப்போது பாக்தாத் மியூசியத்திலிருந்து காணாமல் போன தொல்பொருட்களை மீட்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளதாக செய்திவருகிறது. எங்கே போயிருக்கும் நேட்டோ படையினர் கொண்டு போயிருப்பார்கள். அது ஜெனரல்களின் மேசையை அழகுபடுத்தும் பொருளாக மாறியிருக்கும்.

மேற்கூறிய இரு நாகரீகங்களில் ஆட்சிசெய்தவர்கள் பற்றிய விபரம் கிடைக்கிறது, ஆனால் சிந்துவெளியில் இருந்த ஹரப்பா நாகரீகத்தில் கிடைத்த தொல்பொருட்கள் மிகவும் குறைவு என்கிறார்கள் வரலாற்றியலாளர்கள். ஹரப்பாவை பற்றி உலகம் அறிந்தது பிரிட்டிஷ் காலனி அரசு இருப்புப்பாதை அமைத்தபோது பூமியைத்தோண்டும் போது கிடைத்த இடிபாடுகள், செங்கற்கள் ஆகியவை. ஹரப்பா நகரகத்தின் ஊடாகவே ரயில்பாதை செல்கிறது. அங்கிருந்த செங்கற்களை புதிய கட்டிடங்கள் கட்டுவதற்காக மக்கள் எடுத்துச்சென்று விட்டார்கள், அதில் பெரும்பகுதி மலிவுஜல்லிகளாக இருப்பாத்தை அமைப்பதற்கு போடப்பட்டுவிட்டது.

சில நாட்களுக்கு முன்பு நண்பர் சீரிகாந்த் தென் அமெரிகாவில் ஒரு நாட்டில் சூரியனின் வட ஓட்டம், தென் ஓட்டத்தை பூமியில் கற்கள் நட்டு பதிவு செய்திருப்பதாக தகவல் சொன்னார். அதைப்போல இந்தியாவிலும் அந்த சான்று கிடைத்துள்ளது. கர்நாடகத்தில் அநேகமாக பெல்காம் மாவட்டத்தில் அப்படி வறண்ட பிரதேசத்தில் சுமார் 2500 கற்கள் நடப்பட்டு இருந்திருக்கிறது, தொல்லியல் ஆய்வில் அது ஒரு வானவியல் ஆய்வுக்கூடம், சூரியனின் வட ஓட்டம், தென் ஒட்டத்தை அளப்பதற்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலன கற்கள் மாயமாகிவிட்டன. அது எத்தனை வீடுகளில் துணை துவைக்கும் கல்லாகவோ மாறிவிட்டது. இந்தத் தகவல் தில்லியின் விஞ்ஞான் பிரச்சாரில் பணியாற்றும் தமிழர் த.வே.வெங்கடேஷ்வரன் சொன்ன தகவல். கடிகாரத்தின் முள் ஏன் வலப்புறமாக சுற்றுகிறது என்பதை தொல்லியல் ஆய்விலிருந்து கண்டுபிடித்திருக்கிறார்கள். வட்ட வடிவ ஒரு கல்லின் நடுவில் ஒரு குழி இருக்கிறது, அதில் ஒரு கம்பை நட்டு பகல்பொழுதின் நேரத்தை கணக்கிட்டிருக்கிறார்கள். இந்தச் சான்று சிந்துவெளியில் கிடைத்திருக்கிறது.

ஒவ்வொரு வீட்டிலும் புராதானப்பொருடகள் இருந்திருக்கின்றன, அவற்றின் மதிப்பைவிட பசி அதிமாக இருந்ததால் அது அப்போதே பழய்ய இரும்புக்கடைக்கு சென்றுவிட்டது.நிறைய வீட்டுகளிலிருந்த காளைகளின் கழுத்துமணிகள், வெண்கலகும்பாக்கள், வெண்கலப் பாத்திரங்கள், சில விவசாயக்கருவிகள் எல்லாம் விற்றுத்தின்றாகி விட்டது. வடிவேலு ஒரு சினிமாவில் வீடுகளை வெள்ளையடிக்கும் காண்டிராக்ட் எடுத்திருப்பார், ஒரு பெரிய அரண்மணை போலிருக்கிற வீட்டில் பொருட்களை ஒதுங்கவைப்பார்கள். அப்போது அந்தவீட்டிலிருந்து பழங்காலத்து கடிகாரத்தை உடைத்துவிடுவார்கள். எங்க தாத்தா காலத்துல இருந்து வச்சிருந்த கடிகாரத்தை உடைச்சீட்டிங்க பாவிகளா என்பார் ராதாரவி. வடிவேலு அதுக்கு, நான் என்னமோ புதுதுன்னு நினைச்சி பயந்துட்டேன்னு சொல்வார்.
அந்தமாதிரி தான் நாமளும்.

சுமேரிய, பாபிலோனிய நாகரீகங்கள் போல இந்தியத்துணைக் கண்டத்தி்ல் இருந்த சிந்துவெளிவெளி நாகரீகமும் பாலை நிலத்தில் ஏன் தோன்றின? கங்கைச்சமவெளியிலோ அல்லது உலகின் மிகப்பெரிய ஆறுகளான அமேசன், மிஸிஸிபி போன்றவற்றின் கரையோரங்களில் ஏன் தோன்றவில்லை என்ற கேள்வியை உங்கள் ஆராய்ச்சிக்கு விட்டுவிடுகிறேன்.

2 கருத்துகள்:

kashyapan சொன்னது…

அரிஹரன் அவர்களே! நதிக்கரை நாகரீகம் என்று ர.பி.சேதுப்பிள்ளை கட்டுரை எழுதியுள்ளார்.சீனதேசத்தில் யாங்க்ட்சி நதியும். மத்திய ஆசியாவில் டைகரீஸ் நதியும், இந்தியாவில் சிந்து நதியும் மனித நாகரீகத்தின் தொட்டில்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். தமிழ் நாட்டில் காவிரியும்,தாமிரபரணியும் கலை இலக்கிய தொட்டில்களாக விள்ங்குகின்றன. Culture (நாகரிகம்) என்பதின் தொடர்ச்சிதான் Agriculture (விவசாயநாகரிகம்) என்பார்கள். உழப்பின் மிகுதி தான் கலை இலக்கியமாகமாற முடியும்.---காஸ்யபன்

Vetirmagal சொன்னது…

Fantastic . History is fascinating to read.

Nowadays, the old stuff is also thrown off , due to "cleaning and " discarding stuff from home. Unless the importance is taught or realized , nothing will be preserved.