சமூக அமைப்பு மாறிக்கொண்டேயிருக்கிறது பழைய சுவடுகளைப் பார்க்கவேண்டுமென்றால் கிராமங்களுக்கு செல்லவேண்டுமென்பார் டி.டி.கோசாம்பி. 1980 களில் இந்திய கிராமங்கள் எப்படி இருந்தது என்றால் நேரில் பார்த்த அனுபவம் இருக்கவேண்டும் அல்லது புத்தகங்கள் தான் அதை நமக்கு நேரில் காட்டுகின்றன. அப்படி கரிசல் மண்சார்ந்த மக்களின் வாழ்க்கையை அந்த மக்கள் பேசும் மொழிவடிவத்திலேயெ பதிவுசெய்தவர் கி.ரா. என்ற கி.ராஜநாராயணன். கி.ராவைப்போல் கரிசலில் அதிக படைப்பாளிகள் இருக்கிறார்கள். சமீபத்தில் நான் வாசித்த பூமணியின் `பிறகு` நாவல் என்னை பால்யத்துக்கே கொண்டுசென்றது. ஒரு படைப்பாளி கற்பனையாக எல்லாவற்றையும் எழுதுவதைவிட அனுபவித்த அல்லது நேரில் பார்த்தவற்றை சிறிது கற்பனை கொண்டு எழுதினால் அது சிறப்பாக அமையும். அந்த வகையில் `பிறகு` நாவல் அழகிரியோடு நேரில் வாழ்ந்த அனுபவம் போல் இருக்கிறது. அந்நாவலில் அழகிரி என்ற சக்கிலி தான் வாழ்ந்த கிராமத்திலிருந்து விவசாயிகளின் தேவைக்காக பக்கத்து ஊரூக்குச்செல்கிறார், அங்கே அவர் எப்படி வாழ்ந்தார் என்பது தான் நாவல். வேறு சில பாத்திரங்கள் வருகிறார்கள், ஊர்க்காரக் கருப்பன் இவன் ஒரு அனாதை ஊரில் எல்லாருடைய மாடுகளை மேய்ப்பவன் , காவல்வேலை செய்யும் கந்தையா என்பவர், சக்கணன் என்கிற வயதான சக்கிலி. அப்புறம் ஒருசில சம்சாரிகள் குறிப்பாக ஊரில் பெரிய மனிதர் வில்லிசேரி முதலாளி. இந்த நாவலை வாசிக்கும்போது எனக்கு ஏதோ இவர்களை நேரில் பார்த்தமாதிரி இருந்தது.
கிராமங்களில் `சோறுபோடுங்க தாயி` என்று இன்றும் துணிவெளுக்கும் வண்ணார்கள், முடிதிருத்தும் நாவிதர்கள் கிராமத்து வீடுகளில் இரவுக்கு பாத்திரம் ஏந்தி பிச்சைவாங்கின்றனர். நகரவாசிகள் இப்படிப்பட்ட காட்சியை பார்த்திருக்கமுடியாது. எத்தனையோ தமிழ் சினிமாக்கள் கிராமத்தை படமாக்கியிருன்றன, ஆனால் இப்படியொரு வழக்கம் இருக்கிறதாக தங்கர் பச்சனின் இயக்கிய `ஒன்பது ரூபா நோட்டு` திரைப்படத்தில் மட்டும் இந்த காட்சி வருகிறது. ஒரு ஊரில் இரண்டு அல்லது மூன்று கிணறுகள் இருக்கும். அந்த கிணற்றுக்கு மிக அருகில் வசிப்பவர்கள் அந்தக் கிணற்றில் தண்ணீர் எடுக்கமுடியாது. இன்னும் சிலர் இந்த இரண்டு கிணற்றிலும் நீரைச்சேந்தி எடுப்பதற்கு அருகதையற்றவர்கள். அவர்கள் தான் சக்கிலியர்கள் என்று சொல்லப்படுகிற அருந்ததியினர். நான் சிறுவயதில் பார்த்த அனுபவம், ஒரு வயதான சக்கிலிய பெண்மணி குடத்துடன் வருகிறார் ஆதிக்கசாதியினரின் கிணற்றருகே அங்கே நிறையப்பேர் நீரை கிணற்றிலிருந்து சேந்திக்கொண்டிருக்கிறார்கள். ஒருவரும் அந்தப் பெண்மணிக்கு தண்ணீர் தரவில்லை கால்கடுக்க காத்திருக்கிறார், சிறிது நேரம் கழித்து ஒருவர் இரக்கம் கொண்டு நீரை சேந்தி கொடுக்கிறார். அந்தப் பெண்மணிக்கு நீரைச்சேந்த வாளியும் 5 மீட்டர் கயிறும் போதும் ஆனால் உரிமையில்லை. அப்படி அவர்கள் தண்ணீர் சேந்தியெடுத்தால் சமூகமீறலாகிவிடும். இன்றைக்கு நிலைமை மாறியிருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இந்த மாற்றம் கல்வியாலும் பொருளாதரத்தாலும் சில சமயங்களில் கலகத்தினாலும் வந்திருக்கிறது. இந்த வழமை நிலவியபோது படித்தவர்கள் இல்லாமல் இல்லை. பள்ளிக்கூடத்தில் பாரதியின் கவிதையை `ஏழையென்று அடிமையென்றும் எவனுமில்லை சாதியில்` என்று கற்றுக்கொடுத்த ஆசிரியர் வீட்டுக்கு வந்தவுடன் சமூகத்தை மீறவில்லை. சில சமயத்தில் கடந்துவந்த வாழ்க்கையை நினைவுபடுத்தும்போது சமூகத்தை விமர்சிக்கவேண்டியுள்ளது. அப்படி ஒரு எழுத்தாளர் தன்சுயவரலாற்றை நாவலாக எழுதியபோது அவர் வாழ்ந்தகிராம மக்கள் அவரிடம் சண்டைக்கு வந்திருக்கிறார்கள், ஏன் நம்ம சாதியை இவ்வளவு இழிவா நீயே எழுதியிருக்க என்று? அந்த நாவல் `கருக்கு` எழுதியவர் பெண் எழுத்தாளர் பாமா. ஒரு தலித் பெண்மணி தான் பிறந்திலிருந்து கல்விக்கு, வேலைக்கு போகும்போது தான் கிறிஸ்தவ மதத்தை தான் ஒழுகியிருந்தபோதும் எப்படி பாதிப்படைந்தார் என்பதை அந்த சுயவரலாற்று நாவல் சொல்கிறது. அந்த எழுத்தின் நடை மிக எளிமையானது, இதெல்லாம் இலக்கியமா என்று விமர்சித்தவர் உண்டு ஆனால் இன்று பல மொழிகளில் மொழிமாற்று செய்யப்பட்டு பாராட்டு பெற்ற நாவல்.
பா.செயப்பிரகாசம் எழுதிய சிறுகதை `தாலியில் பூச்சூடியவர்கள்` அதில் தாழ்த்தப்பட்ட மக்கள் தலையில் பூ வைப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்ட காலத்தை பதிவுசெய்கிறது. வேறு சூழ்நிலையில் வாழ்ந்த பெண் இந்த கிராமத்திற்கு வாக்கப்படுகிறாள், அந்த ஊரின் வழமைகள் இவளுக்கு தெரியவில்லை. தெருவில் செருப்பணிந்து கொண்டு செல்வதால் அந்த ஊரின் மேல்சாதியினரின் கோபத்திற்குள்ளாகிறார். எனது பக்கத்துக்கிராமத்தில் புதிரை வண்ணார் என்ற சாதியினர் இருந்தார்கள். இவர்கள் மேல்சாதியினரின் முகத்தை பார்க்கமாட்டார்கள். தொடுவது தீட்டு என்று கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் பார்ப்பதே தீட்டு என்ற வழக்கம் நம் சமூகத்தில் இருந்திருக்கிறது. இதை மண்டல் கமிசன் அறிக்கையில் திருநெல்வேலி மாவட்டத்தில் நிலவும் சாதிமுறை என்று பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இந்த புதிரை வண்ணார்கள் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு துணி வெளுப்பவர்கள். எனது கிராமத்திலும் பார்த்திருக்கிறேன், மேல் சாதிக்கு முடிதிருக்கிற நாவிதரோ, துணி வெளுக்கும் வண்ணாரோ தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு வேலை செய்யக்கூடாது. ஒரு கிராமத்திற்கு அந்த ஊரின் குடும்ப எண்ணிக்கையைப் பொருத்த அளவில் அங்கே இந்த `தொல்லாளிகளின்` குடும்பம் இருக்கும். ஒரு விவசாயிக்கு இரு மகன்கள் இருந்தால் அவர் இருக்கிற நிலத்தை இரண்டு பங்கு வைப்பார், இந்த தொண்டு வேலை செய்பவர்களுக்கு இரண்டு மகன்கள் இருந்தால் ஊர் மக்களை பங்குபோடுவார்கள். கி.ரா ஒரு கதையில் சொல்லியிருப்பார். ஒரு ஊரில் ரெண்டு மூனு சக்கிலி குடும்பம் இருந்தால் ஒருத்தர் வண்டாரி (நாட்டாமை மாதிரி )யா இருப்பார், அவர்களுக்குள் என்ன பிரச்ச்னை வருமென்றால் பங்குவைப்பதில்தான். இந்த மாதிரி விவகாரங்களை தீர்ப்பதற்கு தொலைகாட்டுக்கு போவார்கள், வண்டாரி அவர்களுக்கு கள்ளூ ஊத்திக்க்கொடுப்பார். ஏனென்றால் ஊர் மக்களை பங்கு வைக்கும்போது அந்தப்பய பிசினாரி, கஞ்சன்,இப்படி ஊர்க்காரகளை ஏசவேண்டியிருக்கும், அது அவர்கள் காதுக்குப்போச்சுன்னா அப்புறம் அந்த ஊர்லயே இருக்கமுடியாது அதுக்குத்தான் தொலைக்காட்டுக்குப் போயி பங்கு விவகாரம் பேசுறது` என்று குறிப்பிடுகிறார். ஊர்க்காரர்கள் எல்லோரும் சம்சாரி (விவசாயி)யாகத்தான் இருப்பார்கள். சக்கிலி, நாவிதர், வண்ணார், ஆசாரி போன்றோருக்கு கூலி என்பது வருசக்கூலி தான். அதை `கொத்து` என்பார்கள். எங்க ஊர்ல அப்போது கம்பு தான் முக்கியப்பயிர் அதனால் இத்தனை படி கம்மம்புல் என்று இருக்கும். ஊரில் வெட்டியான் வேலையை செய்யும்போது நாவிதருக்கு சம்பளமாக பணம் கிடைக்கும். இந்த கொத்தாக கிடைக்கும் தவசத்தை (தானியம்) கடையில் அப்படியே பண்டமாற்று செய்யலாம். இல்லையென்றால் விலைக்கும் போடுவார்கள். கல்யாணம், காதுகுத்து, மொட்டையடிப்பது, சடங்கு, எழவு, ஏதாவது விசேச வேலைகளுக்கு சம்பளப்பணம் கிடைக்கும். 1990களில் கம்புக்குப் பதிலாக உளுந்து அதிகமாக பயிரிட்டார்கள், உளுந்தின் சந்தை விலை கம்பு வைவிட அதிகம், அதனால் கூலி `கொத்திலிருந்து` சம்பளப்பணமாக மாறிவிட்டது. ஆனால் இன்றும் வருடக்கூலிதான். 1990களுக்குப் பின்னால் அவர்கள் சிறிது நிலத்தையும் சொந்தமாக வாங்கி பயிரிட்டு சுயமாகவும் சிலர் வாழ்கிறார்கள். அவர்களின் வாரிசுகள் விவசாயிகளின் வாரிசுகளைபோல கல்விபெற்று வேலைக்குச்சென்று நகரவாசிகளாக மாறியிருக்கிறார்கள்.
சிறு வயதில் கண்ட கிராம வாழ்க்கை புலம் பெயர்ந்ததில் அந்த வட்டார மொழியும் மறைந்துபோய்விட்டன, அதை மீட்சிசெய்ய கரிசல் மண்ணின் இலக்கிய கர்த்தாக்கள் எழுதிய புத்தகங்களை வாசிக்கும்போது புத்துயிர்ப்பும் கடந்துகால வரலாறும் கூட கிடைக்கிறது. இந்த வாசிப்பு அனுபவங்களினூடெ கிடைப்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
5 கருத்துகள்:
ஹரிஹரன் அவர்களே !பாமாவின்ன "கருக்கு",இமயத்தின் "கோவேறு
கழுதைகள்",டி.செல்வராஜின் "தேநீர்" படித்து அனுபவிக்க வேண்டிய படைப்புகளாகும் .---காஸ்யபன்
17 01 2012
ஹரிஹரன் அவர்களே,
வணக்கம்,
எழுத்தாளர் காஸ்யபன் தங்களை அறிமுகம் செய்தார்.
பசு வதை பற்றிய எனது பதிவிற்கு தாங்கள் தந்துள்ள கருத்துப் பதிவை காஸ்யபன் அவர்கள் ப்ளாக்கில் பார்த்தேன். மிக்க நன்றி.
அதையடுத்து தங்களது வலைப்பதிவையும் பார்த்தேன். மிகவும் சுவையாக பல பயனுள்ள தகவல்களை பதிவு செய்துள்ளீர்கள். கரிசல் காட்டு எழுத்துக்களைப்பற்றி ரசித்து எழுதியுள்ளீர்கள். சுவையாக இருந்தது.
நெல்லையை அடுத்த சேரை யில் நானும் சிறுவயதில் பார்த்திருக்கிறேன். அருந்ததியர் ஊருக்கு வெளியே வாழ்வர். அவர்கள் குடுபத்தினர் நகர சுகாதாரத்திற்கு பொருப்பாளிகள். ஒரிரு நாட்கள் அவர்கள் வராவிட்டால் ஊரே நாரிவிடும். அவர்களை அழைக்க அப்படி நேரங்களிலும், ஆடுமாடு செத்துப்போனாலும் மட்டுமே அவர்கள் குடியிருப்புக்குப் (சிறிது குமட்டலுடன்) போகும் ஊர்மக்கள் அவர்களது வாழ்க்கையை சிறிதும் புரிந்து கொள்ளாமலே இருந்தார்கள், இன்னும் இருக்கிறார்கள்.
ஊரே தெப்பக்குளத்தில் நீர் இறைக்கும் சமயம், இவர்கள் மட்டும் ஊருக்கு வெளியே கால்வாயினுள் தோண்டப்பட்ட கிணற்றில் நீர் இறைப்பார்கள்.
அவர்கள் காலனி ஊருக்கு வெளியே என்றாலும், அதுதான் கன்னடியன் கால்வாய் எங்கள் ஊருக்குள் நுளையும் பகுதி. நாம் குடித்து/குளித்துவிட்ட தண்ணிதான் ஊரே குடிக்குதுன்னு அவர்களுக்கு ஒரு பெருமிதம்.
நினைவை தூசித்த்ட்டி எழுப்பும் வகையில் நன்றாக எழுதியுள்ளீர்கள்
நன்றி.
பரணிக்காதலர் எனும் தலைப்பில் தாமிரபரணி பற்றிய எனது கட்டுரை யை தங்கள் பார்வைக்கு வைக்கிறேன்
http://johnchelladurai.blogspot.com/2012/01/blog-post.html
அன்புடன்
தேஜா
ஹரிஹரன் அவர்களே,
வணக்கம்,
எழுத்தாளர் காஸ்யபன் தங்களை அறிமுகம் செய்தார்.
பசு வதை பற்றிய எனது பதிவிற்கு தாங்கள் தந்துள்ள கருத்துப் பதிவை காஸ்யபன் அவர்கள் ப்ளாக்கில் பார்த்தேன். மிக்க நன்றி.
அதையடுத்து தங்களது வலைப்பதிவையும் பார்த்தேன். மிகவும் சுவையாக பல பயனுள்ள தகவல்களை பதிவு செய்துள்ளீர்கள். கரிசல் காட்டு எழுத்துக்களைப்பற்றி ரசித்து எழுதியுள்ளீர்கள். சுவையாக இருந்தது.
நெல்லையை அடுத்த சேரை யில் நானும் சிறுவயதில் பார்த்திருக்கிறேன். அருந்ததியர் ஊருக்கு வெளியே வாழ்வார்கள். அவர்கள் குடுபத்தினர் நகர சுகாதாரத்திற்கு பொருப்பாளிகள். ஒரிரு நாட்கள் அவர்கள் வராவிட்டால் ஊரே நாரிவிடும். அவர்களை அழைக்க அப்படி நேரங்களிலும், ஆடுமாடு செத்துப்போனாலும் மட்டுமே அவர்கள் குடியிருப்புக்குப் (சிறிது குமட்டலுடன்) போகும் ஊர்மக்கள் அவர்களது வாழ்க்கையை சிறிதும் புரிந்து கொள்ளாமலே இருந்தார்கள், இன்னும் இருக்கிறார்கள்.
ஊரே தெப்பக்குளத்தில் நீர் இறைக்கும் சமயம், இவர்கள் மட்டும் ஊருக்கு வெளியே கால்வாயினுள் தோண்டப்பட்ட கிணற்றில் நீர் இறைப்பார்கள்.
அவர்கள் காலனி ஊருக்கு வெளியே என்றாலும், அதுதான் கன்னடியன் கால்வாய் எங்கள் ஊருக்குள் நுளையும் பகுதி. நாம் குடித்து/குளித்துவிட்ட தண்ணிதான் ஊரே குடிக்குதுன்னு அவர்களுக்கு ஒரு பெருமிதம்.
நினைவை தூசித்த்ட்டி எழுப்பும் வகையில் நன்றாக எழுதியுள்ளீர்கள்
நன்றி.
பரணிக்காதலர் எனும் தலைப்பில் தாமிரபரணி பற்றிய எனது கட்டுரை யை தங்கள் பார்வைக்கு வைக்கிறேன்
http://johnchelladurai.blogspot.com/2012/01/blog-post.html
அன்புடன்
தேஜா
வணக்கம் தேஜா அவர்களே, உங்கள் வலைப்பூவை இன்று தரிசித்தேன். தாமிரபரணியைப் பற்றி கவிதை நடையில் அவளின் தீரவாசம் அருமை. வாழ்த்துக்களுடன்........
ஹரிகரன்
Thank you for the succinct comment
in peace
deja
கருத்துரையிடுக