பல நேரங்களில் மனிதர்கள் மனிதன் என்ற நாகரீக அடையாளத்தை விட்டுவிட்டு சாதி, இனம் ,மொழி, மதத்திற்குள் அடைக்கலம் தேடுகிறார்கள். ஒரு விலங்கிடமிருந்து அதே விலங்கு பிறக்கிற மாதிரி தான் மனிதனிடமிருந்து ஒரு குழந்தை பிறக்கிறது. ஆனால் பிறந்தவுடன் தகப்பனின் சாதி, மதக் குறீயிடுகள் வந்துசேர்ந்துவிடுகின்றன. மற்ற உயிரினங்களிடமிருந்து மனித இனம் மேம்பாடு அடைந்தது என்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை, எந்த விலங்கு தன் இனத்தை சாதியின் பெயரால் அடிமைப்படுத்துகிறது, தன்னுடைய மலத்தை அதே விலங்கின் வாயில் திணிக்கிறது. விலங்குகள் பேசாத மொழி நமக்கு பேசத்தெரிந்திருந்தாலும் பேசுகிற மொழியால் பேதமும் சேர்ந்து வளர்ந்திருக்கிறது. 21ம் நூற்றாண்டில் மனிதர்கள் கண்டம் விட்டு கண்டம் சென்று வாழ்ந்து வந்தாலும், பசிஎன்பது வரும்போது நாயைவிட கேவலமாக மொழியின் பெயரால், சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் சகமனிதரை வெறுக்கிறோம்.
சென்ற நூற்றாண்டில் கொடுங்கோலன் ஹிட்லர் தனது நாட்டில் யூதஇனமக்கள் ஜெர்மானியர்களை விடமுன்னேறியது பொறுக்காமல் ‘நானூறு ஆண்டுகால பொய் புரட்டு மோசடிகளை எதிர்த்த என்னுடைய போராட்டம்’ என்ற புத்தகம் எழுதி யூதர்களுக்கு எதிராக ஜெர்மானியர்களிடம் துவேஷத்தை விதைத்து மிகப்பெரிய இனப்படுகொலை நிகழ்த்தினான். ஹிட்லர் மடிந்தாலும் அவனுடைய வாரிசுகள் உலகமெங்கும் பரவி இருக்கிறார்கள். அவர்களின் கையிலுள்ள ஆயுதம் மொழிவெறியாகவும், மதவெறியாகவும், இனவெறியாகவும் இருக்கலாம். ஆனால் கொண்ட கொள்கை ஒன்றுதான். ஒரு நாடு மற்றொரு நாட்டின்மீது வெறுப்புணர்வு தூண்டுகிறது, நாட்டிற்குள்ளேயே மாநிலங்களில் அடுத்த மாநில மக்கள் மீதான வெறுப்பு விதைக்கப்படுகிறது, ஒரே மாநிலத்திலேயே அடுத்த மாவட்ட மக்கள்மீதும், அடுத்தசாதியின் மீதும் வெறுப்புணர்வு தூண்டப்படுகிறது. மும்பையில் பால்தாக்கரே மொழிவெறி, மதவெறி பிரதேசவெறியையும் சேர்த்து விதைக்கிறான். விளைவு அன்று வரை ஒற்றுமையாய் இருந்த மக்கள் சண்டையிட்டு மாய்த்துக்கொள்கின்றனர். தமிழர்களால் மாராட்டியர்கள் பாதிக்கப்படுகிறோம், பிகாரிகளால் நமக்கு வேலைவாய்ப்பு குறைகிறது என்று தூவுகிறான்.அதைப் பார்த்துவிட்டு நாம் எல்லா மாரத்தியனும் பிறமொழி மக்களை வெறுப்பவனாகக் கொள்வது மடமை. தமிழர்கள் இந்தியாவில் எல்லாப் பிராந்தியத்திலும் வசிக்கிறார்கள், ஆனாலும் இங்கே மார்வாடிகளாலும், மலையாளிகளாலும், ஆரியர்களாலும் தமிழன் ஏமாற்றப்படுகிறான் என்ற விஷத்தை பரப்புகிற நாகரீக? மாக்களை நாம் பார்க்கிறோம்.
காவிரி நதிநீர்ப்பிரச்சனையா? சமூக அக்கறையுணர்வோடு மக்களுக்காக திரைப்படங்களை தயாரிக்காத இயக்குனர்கள், நடிகர்கள் போராடுகிறேன் என்று கன்னட மக்களுக்கெதிராக பேசுகிறார்கள். பெங்களூரிலுள்ள தமிழர்கள் வன்முறைக்குப் பயந்து எப்போதும் காவிரிப்படுகையில் நல்ல மழை பெய்யட்டும் என்று வேண்டிக்கொள்கிறார்கள். தமிழ்நாட்டில் பேசுகிற மொழிவெறிக்கு கிடைக்கிற முதல் அடி பெங்களூர் தமிழனுக்கு. எல்லா இடத்திலும் சிறுபான்மையினர் மொழிரீதியாகவும், இனரீதியாகவும், மதரீதியாகவும் சாதிரீதியாகவும் ஒரு அச்ச உணர்வுடனேயே வாழ்ந்துவருகிறார்கள். இலங்கையில் சிறுபான்மையினரான தமிழினத்திற்கு எதிராக நிகழ்த்தப்படுகிற இனப்படுகொலையும் இனவெறுப்பையும் பார்க்கிற நாம், இங்கேயும் அதே துவேஷத்தை வெறுப்பை மற்ற மொழியினர்மீதும், இனம் ஒன்றாலும் சாதி வேறுபாட்டால் தீண்டாமைக் கொடுமைக்கு உள்ளாக்குகிறோம்.
மலையாளிகள் மீதும் பரப்பப்பட்ட துவேஷம் என்பது அங்கே வாழ்கிற தமிழர்களை இவர்கள் பார்ப்பதில்லை. இவர்களையெல்லாம் துரத்திவிட்டால் ‘தமிழன்’ ஒற்றுமையாக வாழ்ந்துவிடுவானா? ஒரு மலையாளி இந்த குழும உறுப்பினராக இருந்தால் அவருடைய மனநிலை என்ன என்பதை வசை பாடுகிறவர்கள் யோசிக்கவேண்டும். எல்லா இனமும் எல்லா இடத்தில் பெரும்பான்மை இன சமூகத்தில் வாழ்ந்துவிடமுடியாது. பாலாற்றில் மணலை கனரக இயந்திரம் மூலமாக வாரியெடுத்து ஒரு நதியை ‘பாழாக்கியவன்’ தமிழன் தானே? காசுக்காக இங்கிருந்த மணல் கடல் தாண்டி விறப்னையாவது தெரியவில்லையா? இங்கே அந்த சமூகவிரோத செயலில் ஈடுபடுபவனின் பூர்வத்தை பார்க்கவில்லை,ஸ்டெர்லைட் என்ற நிறுவனம் காற்றிலும் கடலிலும் இலாப வேட்கையில் அமிலக்களை பரப்பும் போது அதை ‘மார்வாடி’ களின் சதி என்று பார்ப்பதில்லை. அது தனியார் நிறுவனக்களின் இலாப வேட்கையால் தோன்றும் விளைவுகள். மலையாளியை விமர்சிதாலே அது கம்யூனிஸ்ட்களை விமர்சிக்கிறோம் என்று நினைத்துக் கொள்கிறார்கள். இன்னமும் ஒருவர் ‘தமிழ் வெறி’யை எதிர்த்தால் அங்கே பூர்வம் தோண்டப்படுகிறது, நீ தெலுங்கன், அல்லது ஆரியன் நீ அப்படித்தான் பேசுவாய் என்கிறது. எல்லோருடைய பூர்வத்தையும் தோண்டிகொண்டே சென்றால் யாருமெ பூர்வகுடிகள் இல்லை. எல்லாமும் பிழைக்க வந்த கூட்டம்தான். வந்தவர்களிடம் கால அளவுகள் வேறுபடலாம். உலகத்தில் இல்லாத பேதங்கள் மொழியால், மதத்தால், சாதியால், நிறத்தால், உணவால் பேதங்கள் இருக்கின்றன, இந்த பேதங்கள் எப்போதும் நம்மை பிரித்தல் ஆகாது. பஞ்சபூதங்கள் எப்படி ஒன்றுக்கொன்று முரணாக இருந்தாலும் இந்த பிரபஞ்சம் அந்த முரண்பாட்டில்தான் இயங்குகிறது. சிறு கேடு ஏற்பட்டால் அது தான் சுனாமியாகவும், புயலாகவும், பூகம்பமாகவும் காட்டுகிறது. மனித சமூகத்திலும் இணக்கம் கெடும்போதெல்லாம் வன்முறை சிறிய அளவிலும் பெரிய அளவிலும் நடைபெறுவதை காண்கிறோம். நாம் இணக்கம் காணும் வேலையைச் செய்வோம். பேதங்களை ஒரு போதும் ஒழிக்கமுடியாது, இந்த வேற்றுமையில் ஒற்றுமை தான் நமது பலம் என்பதை தெரிவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக