ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

கூட்டுப்பொருளாதாரம்...

தினமணி ஆசிரியர் திரு.வைத்தியநாதன் ஒரு விழாவில் பேசியதைக்கேட்டேன், இந்தியாவிற்கு ஏற்றது “கூட்டுப்பொருளாதாரம்” தான் என்று பேசினார். எல்லாமே தனியார்மயமாக இருந்தால் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி நடக்கும் அப்புறம் மக்களின் பணத்தை ‘பெயில் அவுட்’ என்ற பெயரில் அரசு அவர்களுக்கு அளிக்கவேண்டிய நிலைமை வரும். மறுபுறத்தில் எல்லாமே அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால் சோவியத்துக்கு ஏற்பட்ட நிலை ஏற்பட்டுவிடும் என்று பேசினார். இந்தக் “கூட்டுப்பொருளாதாரம்” இந்தியாவிற்கு நல்லது தான் ஆனால் அரசியலில் ஆதிக்கம் செலுத்துகிற பெருமுதலாளிகள் அதற்கு அனுமதிப்பார்களா? என்பதற்கு இந்தியப்பொருளாதாரம் ஒரு சாட்சியாகவே இருக்கிறது. எல்லா அதிகாரத்தையும் தன்னிடம் குவித்துவைத்துள்ள ஒரு மத்திய அரசு ‘கார்ப்பரேட்டுகளின்’ நலனிற்காக பொதுத்துறை நிறுவனக்களை காவுகொடுப்பதை நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். தினமணி ஆசிரியர் எழுதுகிற தலையங்கம் எல்லாம் சிறப்பாகத்தான் இருக்கிறது. பொதுதுறையை தனியார் மயமாக்கினால் அரசை விமர்சிக்கிறது. உலகமயமாக்கல் கொள்கையை இப்போது விமர்சிக்கிற அளவிற்கு அது அமல்படுத்தப்பட்ட போது விமர்சித்தார்களா? எந்த அரசியல் இயக்கங்களை அவர்கள் மறைமுகமாக ஆதரித்தார்கள்? மக்களை யாருக்காக அணிதிரட்டினார்கள் என்ற கேள்விகள் எழுகின்றன.

பணம் வைத்திருப்பவன் எப்போதுமே அதிகாரம் செலுத்துவதற்கு முயற்சிப்பான், என்பதற்கு கு.அழகிரிசாமி எழுதிய ‘இரு சகோதரர்கள்’ சிறுகதையை எஸ்.ரா சொல்லக்கேட்டேன். அக்கதையில் தம்பி சம்பாதித்து தனது அண்ணனின் குடும்பத்தையும் வாழவைக்கிறான். தன் அண்ணனே ஆனாலும் தன்னுடைய வருமானத்தை நம்பி வாழ்கிறவர்களை ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கிறான். சொத்துடைமை எப்போதுமே ஆதிக்கம் செலுத்துகிறது, மற்றவர்கள் மீது அதிகாரம் செலுத்துகிறது அது எளிய மனிதர்கள்மீதும், அரசு இயந்திரத்தின் மீதும் பெரும்பாலான அரசியல்வாதிகள் மீதும் அதிகாரம் செலுத்துகிறது. வளைகுடா நாடுகளில் எந்த குடும்பம் அதிகமாக சொத்துடையதாக இருக்கிறதோ அதுதான் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறது. நமது கிராமங்களில் ஆலயங்களில் சொத்துடையவர்களுக்குத்தான் பூரணகும்ப மரியாதை கிடைக்கிறது. அவர்கள் ஆதிக்கம் செய்வதை மற்றவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். ஒற்றை இலக்க எண்ணிக்கையில் இருக்கிற இந்தியாவின் பெரும் முதலாளிகள் இந்திய அரசின் நிர்வாகத்தின் மீதும், அரசியல்கட்சிகள் மீதும் அதிகாரம் செலுத்துவதை நாம் பார்த்துவருகிறோம்.

இந்தியாவிற்குத்தேவை பொதுத்துறையா, தனியார்துறையா என்பது ஒருபக்கம் இருக்கட்டும். விலைவாசியை அரசு எப்படி கட்டுப்படுத்துகிறது, தனியார் உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்கின்ற பொருளுக்கு வைக்கிற விலை அரசின் அதிகாரத்திற்கு உடபடுத்தப்பட்டிருக்கிறதா? அதிகமாக ஈட்டப்பட்ட ‘உபரி’ மதிப்பு தானே லாபம், அப்படி ஈட்டுகிற உபரிகளுக்கு அரசின் கொள்கை எவ்வளவு பாரபட்சமாக நடந்துகொள்கிறது என்பதை ஆராயவேண்டும். கடந்த மாதம் அன்னா ஹசாரே நடத்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் மிகவும் பிரபலமடைந்தது, அது அரசியல்வாதிகள், அதிகாரிகள் செய்கிற ஊழலை மட்டும் விமர்சித்தது ஊழலின் முக்கியமான பிறப்பிடம் பற்றியோ கார்ப்பரேட்டுகள் அதில் பலனடைந்தது பற்றியோ குறிப்பிடவில்லை. அப்படி அவர் போராடினால் இந்த கார்ப்பரேட் மீடியாக்கள் அவரின் போராட்டத்தை இருட்டடிப்பு செய்திருப்பார்கள். பத்திர்க்கையாளர் சாய்நாத் அன்னா ஹசாரே போராட்டத்தைப் பற்றி சொல்லும்போது, ராம்லீலா மைதானத்தில் கூடுபவர்கள் டாடா, அம்பானி, மிட்டல் போன்றோர்களின் பங்குகளை புறக்கணித்தால், கார்ப்பரேட்டுகள் ஈட்டிய கொள்ளையை திரும்பவும் அரசின் கஜானாவிற்கு கொண்டுவர கோரிக்கை வைத்தால் தானும் போராட்டத்தில் கல்ந்துகொள்வேன் என்றார். இங்கு Structural adjustments என்று சொல்லக்கூடிய திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு ஒரு சிலர்கையில் செல்வம் குவிக்கச்செய்வதை அரசு ஊக்குவிக்கிறது. சமூகத்தில் யார் எவ்வளவு வரி கட்டவேண்டும் என்பதை பட்ஜெட் கலந்தாய்வில் பெரு முதலாளிகளின் ஆலோசனையைத்தான் அரசு கேட்கிறது. அவர்களுக்கு சிறப்பு ஊக்கமும் வரியில் தள்ளுபடியும் செய்கிறது. இப்படித்தானே சிறுவியாபாரிகளாக இருந்த அம்பானிகள் இன்று நாட்டில் முதல் பணக்காரன் அந்தஸ்து பெற்றது.

ஒருவருக்கு தெரியாமல் அவர் பொருளை பணத்தை பறிப்பது ‘திருட்டு’ என்கிறது சட்டம். ஆனால் பிறர் உழைப்பை திருடுகிறவர்கள் பற்றி சட்டம் ஒன்றும் சொல்லவில்லை. ஒரு வியாபாரி 100 ரூபாய்க்கு பொருளைவாங்கி 200 ரூபாய்க்கு விற்பனை செய்வதை இந்த சமூகம் ‘திறமை’ என்று அங்கீகரிக்கிறது. இது திருட்டு தானே. இப்படியே பிறர் உழைப்பில் வாழ்வதை சமுதாயம் அதை நியாயப்படுத்துகிறது.யார் அதிகமாக ‘உபரி’ யை ஈட்டுகிறார்களோ அவர்கள் அடுத்தவர்களின் உழைப்பை திருடுகிறார்கள். நடைபாதிக்கடையில் வாங்குகிற பொருளுக்கு பேரம் பேசும்கிற நாம் அலங்காரமாக கடைவைத்து நடத்துபவர்களிடம் வாங்குகிற பொருளுக்கு அவர் சொன்னவிலையை கொடுத்துவிட்டு வருகிறோம். சமூகம் எளியமனிதர்கள் மீது அதிகாரம் செய்வதற்கு கற்றுக்கொடுக்கிறது. நாம் எந்த ஒரு பொருளை வாங்கினாலும் அத்னுடைய உறபத்திவிலை தெரியவில்லை. ஒரு அரசுக்கு பொருள் உற்பத்தியாளர் அதன் மீது வைக்கிற லாபம், அதற்கு செய்கிற விளம்பரம் எல்லாம் தெரியவேண்டும். அதோடு கட்டுப்படுத்தும் அதிகாரம் இருக்கவேண்டும். அரசிடம் இன்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் அரசின் நிர்வாகத்தை தெரிந்து கொள்ளலாம், இது தனியார் நிறுவனக்களுக்கும் பொருந்தவேண்டும். இப்படி மக்கள் வாங்குகிற விற்கிற பொருட்களின் உற்பத்திவிலை விற்பனைவிலைக்கும் உள்ள இடைவெளி அல்லது சதவீதத்தை ஒரு அரசு கட்டுப்படுத்தினால் அப்போது ‘கூட்டுப்பொருளாதாரம்’ இந்தியாவில் சாத்தியமாகும்.

இந்த விவாதத்தை நம்முடையா மீடியாக்கள் மக்களிடம் கொண்டுசெல்வார்களா என்ன?

கருத்துகள் இல்லை: