ஞாயிறு, 19 டிசம்பர், 2010

அமெரிக்காவிற்கே பிடிக்காத ‘மூன்றாவது அணி’



2009ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்குப்பின் இந்தியாவில் இடதுசாரிகளின் தலைமையில் மூன்றாவது முண்ணனி ஆட்சியைப் பிடித்துவிடுமோ என்று அமெரிக்கா கவலைப்பட்டதாக விக்கிலீக்ஸ் மூலம் செய்தி வெளியாகியுள்ளது, அதற்கு முந்தைய நாள் தான் கம்யுனிஸ்ட் கட்சியின் செயலர் பிரகாஷ்காரட் காங்கிரஸ் கட்சியை ‘மிரட்டியே’ காரியம் சாதித்தார் என்று அமெரிக்க தூதரகம் தன்னுடைய நாட்டுக்கு தகவல் அனுப்பியுள்ள செய்தியும் வெளியாகியுள்ளது. நிச்சயமாக அமெரிக்காவின் கவலை நியாயமானது தான், ஏனென்றால் 2008ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார தேக்கநிலையால் அவதிப்படும் அமெரிக்காவிற்கு இந்தியாவுடன் செய்துகொண்ட அணுசக்தி ஒப்பந்தம் மூலம் தன்னுடைய நாட்டில் வேலைவாய்ப்பு பெருகுவதுடன் அமெரிக்க நிறுவனங்களுக்கு கிடைக்கயுள்ள வாழ்வு பறிபோகுமே என்ற பயம் தான். இடதுசாரிகள் தலைமையில் அல்லது ஆதரவுடன் ஆட்சி அமைந்தால் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையிலும் கை வைப்பார்கள். அணிசேரா நாடுகளை ஒன்று சேர்ப்பார்கள், தற்போதுள்ள அமெரிக்க சார்பு கொள்கையை தலைகீழாக மாற்றுவார்கள் என்ற பயம் தான்.

இந்தியாவில் அமெரிக்க தூதரக அதிகாரிகள் ஏதாவது விழாக்களில் பங்கேற்கிறார்கள் என்று தினந்தோறும் நாளிதழ்களில் செய்தி வருகிறது. இதிலிருந்து அமெரிக்கா இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவது வெளிச்சமாகிறது. உலகம் முழுவதிலும் கம்யூனிச எதிர்ப்பை கடைபிடித்துவரும் அமெரிக்கா இந்தியாவிலும் கம்யூனிச எதிர்ப்பாளர்களுக்கு ஏன் உதவி புரிந்திருக்க வாய்ப்பில்லை? என்ற கேள்வி வருகிறது. அடுத்தடுத்து வெளிவருகிற விக்கிலீக்ஸ் மூலம் நமக்கு தகவல் கிடைக்கலாம். ஓரிரு மாதங்களுக்கு முன்னர் வெனிசூலாவில் நடைபெற்ற தேர்தலில் சாவேஸூக்கு எதிராக தேர்தல் களத்தில் உள்ள கட்சிக்கு அமெரிக்கத் தூதரகம் பணவுதவி செய்தது வெளிச்சத்திற்கு வந்தது.

மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுசெயலர் பிரகாஷ்காரட் காங்கிரஸ் கட்சியை ‘மிரட்டியே’ காரியம் சாதித்தார் என்ற செய்தியை அமெரிக்க தூதரகம் விரிவாகச் சொன்னால் இந்திய மக்களுக்கு நல்லது, ஏனென்றால் தன்னுடைய சொந்த நலனுக்காகவும் கட்சியின் நலனுக்காகவும் அமைச்சரவையில் பங்கு போட்டு அரசியலை லாப நோக்கத்தில் நடத்துபவர்கள் மத்தியில் 60க்கும் மேற்பட்ட மக்களவை உறுப்பினர்களைக் கொண்ட இடதுசாரிகள் எந்தவித எதிர்பார்ப்புமின்றி நாட்டுமக்கள் நலனே முக்கியம் என்றிருந்தார்கள். அது தான் அமெரிக்கவிற்கே கிலி ஏற்படுத்தியிருக்கிறது.உண்மைகள் வெளிவரும் காலம், உரக்கப்பேசட்டும் விக்கிலீக்ஸ்..

சனி, 11 டிசம்பர், 2010

அமெரிக்க ஆணவம்

அமெரிக்காவிற்கான இந்திய தூதரான மீரா சங்கர் அமெரிக்க உள்நாட்டு பயணத்தின் போது விமானநிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகளால் சோதனை என்ற பேரில் அவமானப்படுத்தப்படுள்ளார். தான் அமெரிக்காவிற்கான இந்திய தூதர் என்ற அடையாள அட்டையை காண்பித்த பின்னரும் அவர்கள் சட்டை செய்யவில்லை. இது போன்று இந்திய அதிகாரிகள், அமைச்சர்கள் அவமரியாதைக்குள்ளாவது இது முதல் முறையல்ல. அமெரிக்கப் பயணத்தின் போது முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்ணாண்டஸின் ஆடைகளை கழைந்து சோதனைக்கு உள்ளானதை நீண்ட நாட்கள் கழித்து வெளியில் சொன்னார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் ஷூ வைக் கழட்டச் சொல்லி சோதனைக்கு உள்ளாக்கினார்கள். வழக்கமாக இந்தியத் தரப்பில் கண்டன அறிக்கை வாசித்தபின்பு ஏதோ தெரியாமல் நடந்துவிட்டதாக வருத்தம் தெரிவிப்பது வாடிக்கையாகிவிட்டது. இது போன்ற சோதனைகள் மூலம் அமெரிக்க-இந்திய உறவு பற்றி அவர்களின் எண்ணமும் நமது எண்ணமும் வெவ்வேறாக இருக்கிறது. நாம் தோழமையாக பார்க்கிறோம் ஆனால் அவர்கள் இந்தியாவை ஒரு அடிமை நாடாக ஏகாதிபத்திய நோக்கில் பார்க்கிறார்கள்.இது போன்ற செயல்களுக்கு பதில் நடவடிக்கை தேவை, இந்தியாவும் அமெரிக்க அமைச்சர்களை விமானநிலையத்தில் பாதுகாப்பு சோதனைக்குள்ளாக்கவேண்டும். இந்தியாவில் உள்நாட்டு பயணம் மேற்கொள்ளும் அமெரிக்கத் தூதர்களை இதே போன்ற சோதனைக்கு உள்ளாக்கவேண்டும்.



அவர்கள் கொடுக்கும் நிலையிலும் இந்திய அரசு பெற்றுக்கொள்ளும் நிலையிலும் ஏதும் இல்லை,பரஸ்பர உறவு தான் தேவை. மாறாக இப்போது அமெரிக்க பொருளாதாரத்தையும் வேலைவாய்ப்பை உருவாக்காவும் இந்திய ஒப்பந்தங்கள் அவர்களுக்கு தேவை. மன்மோகன் சிங் இந்தியாவை தலைநிமிர வைப்பாரா?

மகாகவிக்கு 128வது பிறந்தநாள்



வாழ்க நின்புகழ் வாழிய வாழியவே!!!

வெள்ளி, 10 டிசம்பர், 2010

விக்கிலீக்ஸூம் ஜனநாயகமும்..



அமெரிக்கா ஈராக்கிலும் ஆப்கனிலும் நடத்திய போர்க்குற்றங்களை அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ், ஓவ்வொரு நாட்டிலும் உள்ள அமெரிக்க தூதரங்கள் அமெரிக்க அரசுக்கு அனுப்பும் ரகசிய அறிக்கைகளையும் இப்போது வெளியிட்டுவிட்டது.திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்திய செய்திகளை மறுக்கமுடியவில்லை என்னசெய்வது பழிவாங்கல் தான். விக்கிலீக்ஸின் தலைவர் ஜூலியன் அசாங்கே பாலியல் வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ளார். உலகத்திற்கே ஜனநாயகம் பற்றி டியூசன் எடுக்கும் அமெரிக்கா உண்மைச்செய்திகளை வெளியிட்ட விக்கிலீக்ஸின் இணையதளத்தை தடை செய்துள்ளது. எப்படியும் உண்மைகளை மறைக்கமுடியாது. அமெரிக்கா உலகின் பிற நாடுகளில் தூதரகத்தை ஏற்படுத்திக்கொண்டு அதன் மூலம் அந்த நாடுகளின் அந்தரங்க விஷயங்களில் தலையிடுவதும் விக்கிலீக்ஸ் வெளிப்படுத்தியுள்ளது. மத்தியகிழக்கில் ஒரு நாடு தீவிரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கிறது என்று தெரிந்திருந்தும் அந்த நாட்டுடன் ராணுவதளவாடங்கள் விற்பதற்கு 60பில்லியன் டாலர் அளவிற்கு ஓப்பந்தம் போட்டுள்ளது. அந்த நாடு ஈரானை அமெரிக்கா தாக்கவேண்டும் என திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டுள்ளது. மத்தியகிழக்கில் பல நாடுகளின் முகமூடியையும் கிழித்துவிட்டது விக்கிலீக்ஸ்.உண்மைகளை வெளிக்கொணர்ந்த விக்கிலீக்ஸை ஆதரிப்போம்.



விக்கிலீக்ஸ் விவகாரம் பற்றி ஒவ்வொரு நாடும் வெவ்வேறு அணுகுமுறையை கையாண்டுள்ளன. தென் அமெரிக்க நாடான ஈக்வடார் விக்கிலீக்ஸிற்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளது, விக்கிலீக்ஸை நடத்துபவர்களுக்கு அடைக்கலம் தரவும் தயாராக உள்ளது. வெனிசூலா அதிபர் ஹூகோ சாவேஸ், அமெரிக்கா பிற நாடுகளில் செய்துள்ள உளவு வேலைகளுக்கு பொறுப்பேற்று ஹிலாரி கிளிண்டன் பதவி விலகவேண்டும் என அறிக்கை விட்டுள்ளார்.இந்தியா அமைதிகாத்து வருகிறது, மன்மோகன் சிங்கிற்கு உள்ளூர பயம் இருக்கத்தான் செய்யும். இப்பதான் ஸ்பெக்ட்ரம், நீரா ராடியா விவகாரம் பிடித்து ஆட்டிவருகிறது அதுக்குள்ள இன்னொரு பூதம் என்னைக்கு கிளம்புதோ தெரியலையே...