புதன், 15 செப்டம்பர், 2010

தலித் மக்கள் வீட்டில் ராகுல் காந்தியும் மகாத்மா காந்தியும்



சமீபகாலமாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும் நேருவின் குடும்ப வாரிசான ராகுல் காந்தி எல்லா மாநிலங்களையும் சுற்றிவருகிறார். “தலித்” மக்களுக்கு நெருக்கமாக தான் இருக்கின்ற மாதிரி அவர்கள் வீடுகளில் தங்கவும் அம்மக்களுடன் சேர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுப்பது என்று “வாக்குகளை” மையமாக கொண்டு விளம்பரம் தேடிவருகிறார். இந்தியாவில் தீண்டாமை நெடுங்காலமாக நிலவி வருவதன் காரணமாக அம்மக்களுக்கு கோவிலில் வழிபாட்டு உரிமையில்லை,பொதுமயானம் பயன்படுத்த ஆதிக்க சாதிகள் தடுப்பது, சில கிராமங்களில் பொது கிணற்றில் தண்ணீர் எடுக்க மறுப்பு, தடுப்புச்சுவர் மூலம் அம்மக்களை பிரித்துவைப்பது (உத்தபுரம் சாட்சி) என்பதெல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு தெரியவில்லையா என்ன? வரலாற்றில் மகாத்மா காந்திக்கே அல்வா கொடுத்திருக்கிறார்கள்.

இந்திய சுதந்திரப்போராட்டம் நடக்கும்போது அதன் ஒருபகுதியாக காந்திஜி தீண்டமைக் கொடுமைக்கெதிராக போராடினார். சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகாலம் ஆகியபின்பும் கிராமங்களில் நிலமில்லா விவசாயக் கூலிகளாக பெருமளவு “தலித்” மக்கள் தான் இருக்கிறார்கள், அன்றைய நிலையை யோசித்துப் பார்த்தால் சமூகத்தில் எவ்வளவு கொடுமைகளை அனுபவித்திருப்பார்கள். காந்திஜியின் இந்த முயற்சிகளை காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் விரும்பவில்லை. காந்தி தாமாகவே வறுமை வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து அதில் உறுதியாக இருக்கும் நிலையில் அவரை காங்கிரஸ் கட்சியால் உண்மையில் பாதுகாத்திட முடியுமா என்று இந்தியாவுக்கு கடைசி வைஸ்ராயாக பொறுப்பேற்றிருந்த மெளண்ட்பேட்டன் பிரபு கவிக்குயில் சரோஜினிநாயுடுவிடம் கேட்டார். ‘ஓ..’ ‘அவருக்குப் பொருத்தமான மக்கள் கூட்டம் நிறைந்த மூன்றாம் வகுப்பு ரயில் பெட்டியைத்தேடி கல்கத்தா ரயில் நிலைய பிளாட்பாரத்தில் அவர் தனியாக நடந்து செல்வதாக நீங்களும்(மெளண்ட்பேடன்) காந்தியும் வேண்டுமானால் கற்பனை செய்து கொள்ளலாம். அல்லது தீண்டத்தகாதோரின் காலனியின் குடிசையில் காந்தி தங்கியிருக்கும்போது பாதுகாப்பின்றி அவர் இருப்பதாகவும் நினைக்கலாம்.

தீண்டத்தகாதவர் போல உடையணிந்து காங்கிரஸ்காரர்கள் பலர் அவர் பின்னால் நடந்து செல்வதையும் மூன்றாம் வகுப்பு ரயிபெட்டியில் அவருடன் பயணம் செய்வதையும் காந்திஜி அறியமாட்டார். டில்லியின் பங்கி காலனிக்குள் போது ஹரிஜன்கள் போலவே உடை உடுத்தி அவரைச்சுற்றியுள்ள குடில்களில் காங்கிரஸ்காரர்கள் பலர் குடியிருந்தனர் என்று விளக்கியிருக்கிறார். மேலும், அந்த வயதான மனிதரை வறுமையில் வாழ வைப்பதற்கு காங்கிரஸ் கட்சி எவ்வளவு தொகையை செலவிடுகிறது என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள்’ என்று கூறி சரோஜினி நாயுடு விளக்கத்தை முடித்தார்.

இந்தக் கொள்கையும் நடைமுறையும் தான் அவர்களின் யோக்கியதை, இன்றில்லாவிட்டாலும் ஒருநாள் அம்மக்கள் தங்களது அனுபத்தில் தங்களுக்காக யார் போராடுகிறார்கள் என்று புரிந்துகொள்வார்கள்.

சனி, 11 செப்டம்பர், 2010

A Cabinet of crorepatis



மத்திய அமைச்சரவையில் “பில்லினியர்கள்” யார் யார், அவர்களுக்கு எவ்வள்வு சொத்து மதிப்பு உள்ளது என தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலமாக திரு.S.C.அகர்வால் கேட்டப்போது கிடைத்த விபரங்கள், யாரும் உண்மையான “ரியல்” சொத்து மதிப்பை வெளியிடவில்லை என்பது மட்டும் தெளிவாகிறது. இந்திய பாராளுமன்றத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களில் கிட்டத்தட்ட 60 சதமானத்திற்கும் மேலானவர்கள் “பில்லினியர்களாக” உள்ளனர். அந்த விவரங்கள் எல்லாம் அவர்கள் தேர்தலில் போட்டியிட்ட போது தாக்கல் செய்த சொத்து மதிப்பு தான்.அமெரிக்க நலன்களுக்காகவே அதிகமாக உழைக்கின்ற நமது பாரதப் பிரதமர் திருவாளர். மன்மோகன் சிங் அவர்களுக்கு ரூ 4.3 கோடி தான், அதிகபட்சமாக சொத்து வைத்திருக்கும் அமைச்சர் பிரபுல் படேல், அவருடைய சொத்து மதிப்பு 35 கோடிதானாம், பெரும்பாலான அமைச்சர்களின் சொத்துமதிப்பை விட அவர்களின் மனைவிமார்களின் சொத்து அதிகமாக உள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் பினாமிகளின் பேரில் உள்ள சொத்துமதிப்பை எப்படி கணக்கெடுப்பது. அமைச்சரவையிலும் சில ஏழை அமைச்சர்கள் இருக்கிறார்களாம், அதுவும் பாதுகாப்பு அமைச்சர் அந்தோனி அவர்களின் மொத்த சொத்து மதிப்பு ஒரு இலட்சம். வேடிக்கையாக நமது ஸ்பெக்டரம் புகழ் ராசா அவர்களுக்கு ரூ88 இலட்சம் மட்டுமே உள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. எல்லாரும் தங்களுடைய இந்திய முதலீடுகளை மட்டும் தான் சொல்லியிருக்கிறார்களோ என்னவோ? இது குறித்த செய்தி இன்றைய “ஹிந்து” வில் வந்துள்ளது.

பிரதமர் மற்றும் சில அமைச்சரவை சகாக்களின் சொத்துமதிப்பைப் பார்ப்போம்..

பிரதமர் மன்மோகன் சிங் : 4.3 கோடி

பிரணாப் முகர்ஜி : 1 கோடி மனைவிக்கு 1.5கோடி

S.M.கிருஷ்ணா : 1 கோடி (மனைவி பேரில் உள்ள சொத்து)

சரத்பவார் : 3.9 கோடி மனைவியின் பேரில் 2.16 கோடி

கபில் சிபல் : 14 கோடி மனைவியின் சொத்து மதிப்பு 7 கோடி

ப.சிதம்பரம் : 5 கோடி மனைவியின் சொத்து மதிப்பு 7 கோடி

முரளி தியோரா : 15 கோடி மனைவியின் பேரில் 31 கோடி

ஆனந்த் சர்மா : 2.5 கோடி

கமல் நாத் : 3 கோடி மனைவியின் சொத்து 1.5 கோடி

மு.க.அழகிரி : 9 கோடி மனைவி,மகன் பேரில் 6 கோடி

பிரபுல் படேல் : 35 கோடி மனைவி வர்ஷாவின் பேரில் 40 கோடி

ஜோதிர்தயா சிந்தியா : 30 கோடி (ராயல் குடும்ப சொத்து தவிர்த்து)

அ.ராசா : 88 இலட்சம்

மம்தா பானர்ஜி : 6 இலட்சம்

A.K.அந்தோணி : 1 இலட்சம்

குறிப்பு: உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் 2009ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டபோது தேர்தல் கமிசனுக்கு அளித்த விபரத்தின் படி அவருடைய அசையும்,அசையா சொத்துமதிப்பு 27 கோடியே 51 இலட்சம். http://www.elections.tn.gov.in/ECI/Affidavits/S22/GE/31/CHIDAMBARAM%20P/chidambaram_SC7.jpg

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

FCI குடோன்களில் வீணாகும் உணவு தானியம்

இந்திய உணவு தானிய கிடங்குகளில் (FCI) கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 10 இலட்சம் டன்கள் அளவிற்கு உணவுதானியங்கள் வீணாக்கப்பட்டுள்ளன. வறுமைக்கோட்டிற்கு கீழும் மேலும் வாழும் கோடிக்கணக்கான் மக்கள் உணவின்றி பட்டினியாகி கிடக்க, அம்மக்களுக்கு அளிக்க வேண்டிய உணவு தானியத்தை அரசு புழுக்கச்செய்திருக்கிறது. ஐநா வின் சமீபத்திய அறிக்கையின் படி 63 சதவீத இந்தியக் குழந்தைகள் ஒருவேளை உணவின்றி படுக்கைக்கு செல்கின்றன. இந்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் வறுமையைப் போக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன, ஆனால் மக்களின் பசி, பட்டினி தான் இன்னும் தீர்ந்தபாடில்லை.


courtesy: "The Hindu"

தில்லியைச் சேர்ந்த திரு.ஆசிஸ் தேவ் பட்டாசார்யா தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் இந்திய உணவுக் கழகத்திடம் உணவு தானிய இருப்புகளையும் வீணாண விபரத்தையும் கேட்டதன் வாயிலாகவே இச்செய்தியை அறியமுடிகிறது. உச்சநீதிமன்றமும் மத்திய அரசை பட்டினியால் வாழும் மக்களுக்கு வீணாவதற்கு முன்பே உணவு தானியங்களை இலவசமாக மக்களுக்கு வழங்க அறிவுறுத்திய பின்பும் மைய அரசு செயல்படாமல் உள்ளது.

உணவுக்கிடங்குகளை சரியாக நிர்வகித்தாதன் விளைவாக ஒவ்வொரு வருடமும் இலட்சக்கணக்கான அரிசி, கோதுமை, மக்காச்சோளம் மற்றும் நெல் வீணாகிவந்துள்ளது. FCI-யின் அறிக்கையின்படி 1997-2007 க்கும் இடைப்பட்ட காலத்தில் 183,000 டன் கோதுமையும், 395,000 டன் அரிசியும், 22,000 டன் நெல் மற்றும் 110 டன் அளவிற்கு மக்காச்சோளமும் வீணடிக்கப்பட்டுள்ளது. எலிகள் தின்கிற தானியத்தைக் கூட மக்களின் பட்டினியைப் போக்க தர அரசு மறுக்கிறது. உணவுப் பஞ்சம் உற்பத்தி குறைவால் ஏற்பட்டதல்ல மாறாக விநியோக முறையின் கோளாறால் தான்.



இந்தியமக்களின் சராசரி தனிமனிதன் உட்கொள்ளும் உணவுதானியத்தின் அளவு (2005-2008 வரை) 436 கிராம், 1955-1958 க்கும் இடைப்பட்ட காலத்தில் இது 440 கிராமாக இருந்துள்ளது. இது தான் வளர்ச்சியா? இந்திய உணவுக்கழகத்தை நிர்வகிக்கும் விவசாயத்துறை அமைச்சர் தனது துறையைக் கவனிக்காமல் கிரிக்கெட் நிர்வாகத்தை கவனித்துக் கொண்டிருக்கிறார். இப்படிப் பட்ட அமைச்சரவை சகாக்களை இன்னும் நிர்வாகத்தில் வைத்துக்கொண்டு அழகு பார்க்கிறார் தன்னிச்சையாக இயங்கமுடியாத பிரதமர் மன்மோகன்சிங்.

திங்கள், 30 ஆகஸ்ட், 2010

வாழ்க இந்திய ஜனநாயகம்

இந்தியாவில் தங்களுக்கு தாங்களே சம்பளத்தை நிர்ணயிக்கின்ற உரிமை நமது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் தான் இருக்கிறது. ஆளும்கட்சி எதிர்கட்சி என்றபேதம் இல்லாமல் கொஞ்சமும் கூச்சமில்லாமல் 5 மடங்கு சம்பள உயர்வு வேண்டுமாம். அதுவும் அரசுச்செயலாளர்களை விட 1 ரூபாய் அதிகமாக சம்பளம் வேண்டுமாம். மக்களுக்கு பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்காமல் தங்களது சம்பளத்தை விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். 543 உறுப்பினர்கள் உள்ள மக்களவையில் இதை இடதுசாரி உறுப்பினர்களைத்தவிர யாரும் எதிர்க்கவில்லை என்பது வியப்பளிக்கவில்லை. பாராளுமன்றத்தில் முதன்முறையாக சம்பளம் ரூ 350 லிருந்து ரூ 400க்கு உயர்த்தப்பட்ட போது AKG என்படுகிற தோழர் A.K.கோபாலன் “நம்மை இதற்காக மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை” என்று சொன்னதோடு உயர்த்தப்பட்ட சம்பளத்தை ஏற்க மறுத்தார்.


courtesy: "The Hindu"

ஆனால் இன்றைய எம்பிக்களின் நிலைமை வேறு, மக்களவையில் 543 உறுப்பினர்களில் 300 எம்பிக்கள் கோடீஸ்வரர்கள்.சென்ற மக்களவையில் 154 உறுப்பினர்கள் கோடீஸ்வரர்களாக இருந்திருக்கிறார்கள், நல்ல வளர்ச்சி தான். நாட்டிலுள்ள தொழிலபதிர்கள், கோடீஸ்வரர்கள் மக்களாலேயே தேர்ந்தெடுக்கப்பட்டு பாராளுமன்றத்திற்கு செல்கிறார்கள். அப்படிப்பட்ட வாய்ப்புகளை நமது நாட்டில் காங்கிரஸ் கட்சியிலிருந்து புதிதாக முளைக்கின்ற கட்சிகள் வரை தருவதற்கு தயாராக உள்ளனர். ஏனென்றால் முதலீடு இல்லாமல் தொழில் இல்லை. பெருமுதலாளிகளின் தொழில் வளர்வதற்கு பாராளுமன்றமும், சட்டத்தை இயற்றுவதற்கும், மாற்றுவதற்கும் அப்பதவி தேவைப்படுகிறது. விஜய்மல்லயா, எம் ஏஎம் ராமசாமி, அம்பானி, நவீன் ஜிண்டால் போன்றோர் பாராளுமன்றத்தில் யாருக்காக பேசுவார்கள். கோடீஸ்வர எம்பிக்களில் முதலிடம் பெறுவது காங்கிரஸ் கட்சி தான் 203 உறுப்பினர்களில் 138 பேரும், இரண்டாவதாக பாஜகவில் 58 உறுப்பினர்களும் கோடீஸ்வரர்களாக உள்ளனர். தேர்தல் காலத்தில் மொத்த எம்பிக்களும் தங்களுடைய சொத்து பற்றிய விபரம் வெளியிட்டபோது அதன் மதிப்பு ரூ3075 கோடி. ஆனால் உண்மையில் இதன் மதிப்பு பல மடங்கு இருக்கும்.

மக்களிடையே இந்த சம்பள உயர்வு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தாலும் இந்திய பத்திரிகைகள் விமர்சித்து தலையங்கம் எழுதவில்லை, மாறாக “டைம்ஸ் ஆப் இந்தியா” வில் இந்திய எம்பிக்களின் சம்பளம் அமெரிக்க செனட்டர்களைவிட 13 மடங்கு குறைவு என செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க செனட்டர்களின் மாத சம்பளம் இந்திய ரூபாயில் 675,203ம், கனடாவில் எம்பிக்கள் இந்திய எம்பிக்களை விட 11 மடங்கு அதிகமாகவும் வாங்குகிறார்கள்.

இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதம் ரூ399,941ம், ஆஸ்திரிலேயாவில் எம்பிக்களுக்கு ரூ442,485ம் வழங்கப்படுகிறது. ஜப்பானில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ரூ684,000ம் சிங்கப்பூர் எம்பிக்கள் ரூ471,364ம் மாத சம்பளமாக வாங்குகிறார்கள்.

பிரான்ஸ் , இத்தாலி, ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் பாராளுமன்ற உறுப்பினர்கள் முறையே ரூ420,000,ரூ329,220,ரூ461,280 மற்றும் ரூ187,560ம் மாத ஊதியமாக பெறுகிறார்கள்.

அமெரிக்க செனட்டர்களின் சம்பளத்தையும் இந்திய எம்பிக்களின் சம்பளத்தையும் பற்றி எழுதிய பத்திரிக்கை சாதாரண அமெரிக்க பிரஜையின் வாழ்க்கைத்தரத்தையும் இந்திய குப்பன் சுப்பனின் வாழ்க்கைத் தரத்தையும் ஒப்பிடவேண்டும். ஒருவேளை இது முதல்வர் கருணாநிதியின் யோசனையாக இருக்கலாம். அவரும் தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஊதிய உயர்வையும் சென்னைக்கு அடுத்தபடியாக முக்கிய இடத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வீட்டுமனை வழங்க ஏற்பாடுசெய்தவர் தானே. மக்கள் பணத்தை தன் பெயரால் இலவசத்திட்டம் என்று அறிவிக்கிற முறை மன்னராட்சி காலத்தில் கூட இருந்ததில்லை. கொஞ்ச நாட்களில் தமிழ்நாடே கலைஞர் மாநிலம் என்று சூட்டபட்டால் வியப்பில்லை.வாழ்க இந்திய ஜனநாயகம்!!!