வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

தமிழகத்தில் அடிமை முறை

அடிமைமுறை என்பது இன்றைக்கு இருக்கிறதா? எங்கே? எந்த இடத்தில் இருக்கிறது? இப்படி ஆராய்ந்தால் செய்திகளின் ஊடாக ‘கொத்தடிமை’கள் இத்தனைபேர் ஆந்திராவிலிருந்து கர்நாடகாவிலிருந்து மீட்கப்பட்டனர் என்பதைக் காண்கிறோம். அவர்கள் எந்த தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள் என்றால் செங்கல்சூலை, அரிசியாலைகள், கல்குவாரி போன்ற இடங்களிலிருந்து மீட்கப்பட்டார்கள் என்று செய்திகளின் ஊடே பார்க்கிறோம்.


கிராமங்களில் பெரிய பண்ணைவீடுகளில் மாடுமேய்க்கும் சிறுவர்களை பார்த்திருக்கிறேன், அவர்கள் அனாதையாக இருப்பார்கள் அல்லது இவ்வளவு பணத்திற்கென்று சிறுவனை அவனது பெற்றோர்கள் / உறவினர்கள் விற்றிருப்பார்கள். அந்த சிறுவர்கள் அதிகாலையிலிருந்து வேலைசெய்வார்கள், மாடுகளின் சாணியை அள்ளியெடுத்து குப்பையில் சேர்ப்பார்கள், தொழுவத்தை சுத்தம் செய்வார்கள் கூளம் போடுவார்கள், பிறகு மேய்ச்சலுக்கு கூட்டிக்கொண்டுபோவார்கள் மேய்ச்சலிலிருந்து வந்தவுடன் வேறு வேலைகள் இருந்துகொண்டேயிருக்கும். இப்படி சிறுவனாக இருந்தபோது ஆரம்பித்த வேலை இளவட்டம் ஆகும்வரை அவனுடை சொந்த ஊருக்கு ஒருமுறை கூட போகாமல் இருந்ததை நான் நேரில் பார்த்திருக்கிறேன், கல்வி, பள்ளிக்கூடம் வாசனையே கிடையாது, வருடத்திற்கொருமுறை இரண் டு செட் புதுத்துணி கிடைக்கும், மீதி நேரங்களில் பண்ணையில் உடுத்திய பழய துணிகள் அவனுக்கு பாத்தியதை உண்டு. கூலி என்பதே கிடையாது மூனு நேரம் சோறு, தங்குவதற்கு தொழுவத்தில் இடம். இது அடிமை முறையில் ஒன்று தானே.


இன்றைக்கும் தமிழகத்தின் சில கிராமங்களில் சலவை செய்தல், முடிவெட்டுதல், தொழிலுக்கு வருடத்திற்கொருமுறை தானியமாக கூலி தரப்படுகிறது. என்னுடைய கிராமத்தில் 10 ஆண்டுகள் முன்புவரை இந்த நிலை இருந்தது. இந்தத் தொழில்கள் நகரமயத்தில் அதிக வருமானத்தை ஈட்டுவதால் புலம்பெயர்ந்தார்கள். ஊர் என்கிற சபை அவர்களுக்கு தங்குவதற்கான குடிசையை ஏற்பாடு செய்வார்கள், அழைத்து வரும்போது கொஞ்சம் பணம் கொடுத்திருப்பார்கள். அவன் ஊரை விட்டு செல்லவேண்டுமென்றால் பணத்தை திருப்பித் தந்திருக்கவேண்டும். நிறைய சாதிக்கட்டுப்பாடுகளும் உண்டு, கூலி கொடுக்கப்படாத சில வேலைகளும் செய்யவேண்டும். விவசாயத்திற்கு துணையாக இருந்த கொல்லர்கள், தச்சர்கள், தோல் தொழில் செய்யும் அருந்ததியர்கள் கிராமத்திற்கென இருந்தார்கள் அவர்களை குடியானவர்கள் என்பார்கள். மாடு செத்துப்போனால் அருந்ததியர்கள் செத்த மாட்டை தூக்கிப்போவார்கள், கிராமத்தில் யாராவது இறந்துபோனால் அவர்களுடைய வெளியூர் சொந்தங்களுக்கு தகவல் சொல்வது பகடையின் வேலை. கால்நடையாக நடந்துசென்று அவர்களின் உறவினர்களிடம் தகவல் சொல்லவேண்டும், அங்கே அவர்களுக்கு ‘சன்மான’மாக தானியக் கூலி தருவார்கள். மயானத்திற்கு செய்யும் வேலைகள் எல்லாம் ‘வெட்டி வேலை’தான். கருமாதி எனப்படும் சடங்கில் நீர் சடங்கு செய்ய குளத்திற்கு போவார்கள் அதற்கு தரையில் சேலைகள் விரிப்பார்கள், அது வண்ணார்களின் ‘உரிமை’ வேலை. இப்படியெல்லாம் ஓர் அடிமை முறையின் வடிவம் நீடித்திருந்தது.
சே, இதெல்லாம் அடிமைத்தனம் இல்லை, செழுமையான கிராமிய வாழ்க்கைமுறை என்று சொல்வோர்களும் இருப்பார்கள் அந்த முறை தன்னைப் பாதித்திருக்காதவரை.
                                          ------------------------------
நூலிலிருந்து......


இன்னமும் நூலுக்குள் போகவில்லை, வரலாற்றில் அடிமைச்சமுதாயம் இருந்திருக்கிறது. அடிமை முறை இல்லையென்றால் பிரமிடுகள், சீனப்பெருஞ்சுவர், தஞ்சைப் பெரியகோவில் என்கிற அதிசியங்களை செய்திருக்கமுடியாது. எப்போது உபரி ஏற்பட்டதோ அப்போதே அடிமைமுறை வந்துவிட்டது.காட்டுமிராண்டிகள் காலத்தில் போரில் தோற்றவர்களைக் கொன்றார்கள், ‘உபரி’ மதிப்பு தோன்றிய காலத்தில் போரில் தோற்றவர்களை கொல்லாமல் அவர்களை அடிமைகளாக்கினார்கள். ஆடு, மாடு, உழைப்புக்கருவிகள் போன்றது அவர்களின் மதிப்பு. அவர்கள் கைதிகள் அவர்களுக்கு உழைப்பின் பயன்மதிப்பின்மீது எந்தப் பங்கும் கிடையாது, அவர்கள் உயிர்வாழ்வதற்கு தேவையான அளவிற்கு மட்டும் உணவு வழங்கப்பட்டது. அவர்களுடைய வாழ்க்கைத் தேவைகளுக்காக உழைக்கவில்லை,எஜமானனுக்கு உபரி உற்பத்தியினை அளிப்பதற்காகவே உழைத்தார்கள். கிரேக்கம், ரோம், எகிப்து பாபிலோன் போன்ற தொன்மைவாய்ந்த நாகரீக நாடுகளில் அடிமைமுறை இருந்தது.


ரோம் நாட்டில் வலிமையுடைய அடிமைகளை வைத்து போர்கருவி பயிற்சிகள் தரப்பட்டு gladiators என்றழைக்கப்பட்டனர். மன்னர்கள், நிலப்பிரபுகளின் பொழுதுபோக்கிற்காக மாபெரும் அரங்கங்கள் கட்டப்பட்டு அங்கே அடிமைகள் சண்டையிட்டார்கள். தோற்பவன் கொல்லப்படும்வரை மூர்க்கச்சண்டை நடைபெறும், சிங்கம் புலி போன்ற விலங்குகளுடன் போரிடச்செய்து அந்த அடிமை வீரர்கள் கொல்லப்படுவதை வேடிக்கை பார்த்து கைகொட்டி சிரித்தார்கள். ரோம் நகரத்தில் கி.மு முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த வார்ரொ என்ற எழுத்தாளர் அடிமைகளை உற்பத்தி கருவிகளாகவே வகைப்படுத்தினார்.
1. பேசுகின்றவகை - அடிமைகள்
2.தெளிவற்ற ஒலிகளை எழுப்பும் வகை -மாடுகள் மற்றும் விலங்குகள்
3.பேசாவகை - வண்டிகள், ஏர், கருவிகள்
கி.மு. 1792-1750 வரை ஆண்ட ஹெமுராபி என்ற மன்னனின் சட்டத்தில் அடிமைகளைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.
                                          -----------------
தமிழகத்தில் சங்ககாலத்தில் அடிமைமுறை இருந்துள்ளது என்பதை ‘பட்டினப்பாலை’யில் ‘கொண்டிமகளிர்’ என்ற குறிப்பு உள்ளது. மதுரையில் யவனர்கள் காவலர்களாகப் பணிபுரிந்ததைக் ‘கடிமதில் வாயில் காவலிற் சிறந்த அடல்வாள்யவனர்’ என்று சிலப்பதிகாரம், குறிப்பிடுகிறது. பண்டைய தமிழகத்தில் ஒரே காலகட்டத்தில் இனக்குழு வாழ்க்கைமுறை- குறிஞ்சி, மேய்ச்சல் நில வாழ்க்கைமுறை- முல்லை, உணவு உற்பத்தி செய்யும் நிலைத்த வாழ்க்கை-மருதம்,இதனை எதனையும் செய்ய இயலாத பாலைநிலப்பகுதியில் வழிப்பறி செய்து வாழ்க்கை நடத்தும் சூழல் இருந்துள்ளது.
இதை அசமத்துவ வளர்ச்சி என்று கா.சிவத்தம்பி குறிப்பிடுகிறார். தமிழகத்தின் குறுகிய நிலப்பகுதியே பொருள் உற்பத்தி செய்யும் நிலையிலிருந்தது அதாவது மருதநிலத்தில் உணவு உற்பத்தி.இதன் காரணமாக அதிக எண்ணிக்கையில் அடிமைகளைப் பயன்படுத்தும் வாய்ப்பு சங்ககாலத்தில் ஏற்பட வழியில்லாமல் போனது.
                          
பல்லவர்கள் ஆட்சிகாலம் , சோழர்களின் ஆட்சிகாலம், விஜயநகரப்பேரரசு காலம், தஞ்சை மராத்தியர் ஆண்டகாலம், என வரிசையாக எல்லா ஆட்சிகளிலும்  அடிமைமுறை நிலவில் இருந்தது.
  • ‘ஆள்’ என்ற சொல் அடிமையைக்குறிப்பதாக 9ம் நூற்றாண்டு திவாகர நிகண்டு கூறுகிறது.
  • பிற்கால்ச்சோழர் ஆட்சியில் கொலிலடிமை மீது திரிசூலச்சின்னம் பதிப்பது வழக்கத்திலிருந்தது.
  • சோழமன்னர்கள் நிகழ்த்திய போரில் தோற்ற மன்னர்களின் மனைவியர்கள் அடிமைகளாக பிடித்துவரப்பட்டனர்.
  • திருமண மான பெண்ணுடன் ‘வெள்ளாட்டியை’ சீதனமாக அனுப்பும் பழக்கம் சோழர் காலத்தில் இருந்துள்ளது.
  • கோவில்களில் மட அடிமைகள் என்ப்பொர்கள் இருந்தார்கள், இவர்களை தானமாக கொடுத்துள்ளார்கள்.
  • பஞ்சத்தின் காரணமாக தன்னையும் தன் பெண்மக்களையும் கோவில் மடத்திற்கு விற்றுக்கொண்டடார்கள்.
  • ஆண் அடிமைகள் வேளாண்மையிலும் ஆநிரை மேய்ச்சலிலும் ஈடுபட்டார்கள், உவச்சர்கள் பறை கொட்டும் பணியினைச் செய்தார்கள்.
  • 13ம் நூற்றாண்டில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்த இபின் பதுதா அடிமை வாணிபம் இருந்துஅள்ளதாக குறிப்புகளில் எழுதியுள்ளார்.
  • 1659-1682 சொக்கநாதர் ஆட்சிகாலத்தில் பஞ்சமும் யுத்தமும் மக்க்ளை கடுமையாக பாதித்தன, உயிருள்ள எலும்பும் தோலுமாக மக்கள் நடமாடினார்கள். அப்போது டச்சுக்காரர்கள் அவர்களுக்கு உணவளித்தார்கள், போதிய அளவு பலம் பெற்றவுடன் அவர்களை கப்பல்களில் ஏஏரிச்சென்று அயல்நாடுகளில் அடிமைகளாக விற்றார்கள்.
  • கோவிலுக்கு நிலம் வழங்கு போது நிலத்துடன் ஒடுக்கப்பட்ட மக்களை அடிமைகளாக சேர்த்து தான்மாக வழங்கப்பட்டதை 17,18ம் நூற்ற்ஆண்டு செப்பேடுகள் தெரிவிக்கின்றன.
இன்னும் அடிமைமுறை ஆங்கிலேய ஆட்சியிலும் நாடு விடுதலை பெற்ற நீடித்த வரலாற்றை அடுத்த தனிதனிப்பதிவுகளாக எழுதுகிறேன்.


       கருத்துகள் இல்லை: