வெள்ளி, 17 மே, 2013

ஊர்ப்பொங்கல்

எங்க கிராமத்தில் சித்திரைப் பொங்கல் கொண்டாடுவார்கள், அதை யாரும்கோவில் திருவிழா என்று சொல்லமாட்டார்கள், கோவில்கொடை அல்லது பொங்கல் என்றுதான் சொல்வார்கள். தமிழ்நாட்டுக்கே பொங்கல் என்றால் அது ‘தை’ பொங்கலை மட்டும் தான் குறிக்கும்.  விவசாய சமூகம் என்பதால் ‘தை’ பொங்கலையும் நன்றாக கொண்டாடுவார்கள். அந்த நாளில் விளையாட்டு போட்டிகள் சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் என்று எல்லோரையும் மகிழ்விக்கும் விதமாக நடைபெற்றன, சுமார் இருபது ஆ|ண்டுகளுக்கு முன்பு இளைஞர்கள் விளையாடிய கபடிப்போட்டியில்  ‘கபடி பாடி’ வந்தவரை எதிர் அணியினர் பிடிக்கும்போது கால்முறிவு ஏற்பட்டதால் அதோடு விளையாட்டு நின்றுபோனது, அதற்கு அப்புறம் விவசாயிகள் யாவரும் டிவி பெட்டி முன்னாடி அமர்ந்து சினிமா நடிக நடிகைகளின் பொங்கல் கொண்டாட்டத்தை காண ஆரம்பித்துவிட்டார்கள்.

இப்ப நான் சொல்றது சித்திரைப் பொங்கல்,அது எங்கள் ஊரில் இருக்கிற எல்லா சாமிக்கும் விழா எடுக்குறது. எல்லா சாமீன்னு சொன்னா அது எல்லா சாமியில்ல.  ஊர்ப்பொங்கல் என்று சொன்னால் அது சேரியை சேர்க்காத பொங்கல், சாமிகளும் அப்படித்தான். விநாயகர், மாரியாத்தா, முனீஸ்வரன், அய்யனார் என்று ஒவ்வொரு சாமியையும் பூசை போட்டு விவசாய விளைச்சல், ஊர் அமைதி என்று நன்றி செலுத்துவார்கள். அப்படி ஒரு இருபது வருசத்துக்கு முன்னாடி நடந்த பொங்கலைப்பற்றிதான் சொல்றேன்.

என்ன ரெண்டு மூனு வருசமா மழை தண்ணி இல்லாம விளைச்சல் மோசமா இருந்திச்சு, இந்த வருசம் அந்த முனீஸ்வரன் கருணையில நல்ல விளைச்சல் அதனால பொங்கல் போட்ரவேண்டியதுதான் என்று தெருவில் பேச்சு ஆரம்பிக்கும்.

சரி இன்னும் சித்திரைக்கு 3 செவ்வாய் தான் பாக்கி அதுக்குள்ளே ஊரு கூட்டம் போட்டு முடிவெடுப்போம்.

ஊர் சக்கிலியத்தொழிலாளி ஊர் சாட்டுவார், நாளைக்கு ஊர்க்கூட்டம் சாமியோ, அப்புறம் கூட்டத்துல பொங்கல் சித்திரையிலயா, வைகாசியிலயா எவ்வளவு வரி, எந்த மேளத்தை கூப்பிடுறது, யாரு சாமியாடுறது, என்னன்ன சினிமா, கச்சேரி என்று ஒரு குழு அமைப்பார்கள். அவங்கதான் மேளக்காரங்க, ரேடியோசெட்டு, சினிமா, வரகணி ஆட்டம், வில்லுப்பாட்டு என்று அட்வான்ஸ் கொடுத்துவிட்டு வருவார்கள்.

அப்புறம் ஒரு குழு வரிவசூலில் இறங்குவார்கள், தலக்கட்டு வரி என்பார்கள், அரைத் தலைகட்டு வரியும் உண்டு, கணவனை இழந்தவர்கள், பிள்ளைகள் இல்லாத வயதானவர்களுக்கு பாதிவரி. வீடுவீடா வசூலிப்பார்கள், சிலர் நாளைக்கு வாய்யா, சிலர் எனக்கு அந்த புஞ்சயில பொலி (எல்லை)த்தகராறு இருக்கு, ஊர்க்காரங்க யாருமே பேசல அதனால் நான் வரி கொடுக்கமாட்டேன் என்பார்கள். நகரங்களில் அப்படி யாரும் வரிவசூல் செய்துவிடமுடியாது அது அரசாங்கத்துக்கு மட்டுமே உரிமையுள்ளது, அதனால் கோவில் விசேசங்களில் நனகொடை என்ற பெயரில் எவ்வளவு கொடுக்கிறார்களோ அதை வாங்கிக்கொள்வார்கள். கிராமத்தில் வரிஎன்பது கொடுத்தாகவேண்டும் அதுக்கு ஊர்க்கட்டுப்பாடு என்று பெயர், நாளைக்கு நல்லது கெட்டது என்றால் யாரும் பங்கேற்கமாட்டார்கள் என்று எல்லோரும் கொடுத்துவிடுவார்கள். சிலர் பிடிவாதம் செய்வார்கள்.

பொங்கல் நெருங்கிவர சொந்தங்களை அழைப்பார்கள், எங்களுக்கெல்லாம் அப்பதான் புத்தாடை கிடைக்கும், தீபாவளி, தைப்பொங்கல், பிறந்தநாள் இதுக்கெல்லாம் புத்தாடையெல்லாம் கிடையாது. ஊர்ப்பொங்கலுக்கு மட்டும்தான், மற்றபடி பள்ளிச்சீருடை உண்டு. துணியெடுக்க பெரியவர்கள் தான் போவார்கள், இப்போது உனக்கு என்னமாதிரி டிரஸ் வேண்டும் என்பதெல்லாம் கிடையாது, ரெடிமேட் சட்டை, டிரவுசர் கிடையாது. சட்டைத்துணி, டிரவுசர் துணி கிழிப்பார்கள் நாளுபேர் இருந்தா ஒரே டிசைன் சட்டைதான். அப்புறம் அப்பாவுக்கு வேட்டி சட்டை, துண்டு அம்மாவுக்கு சீல. சட்டை தைக்க அங்க ஒரு பேமசான டெய்லர் கடம்பூர்ல இருப்பாரு, அவருகிட்ட தவமா கிடந்தத்தான் துணி சட்டையா கிடைக்கும்.

ஊரை இணைக்கும் ஒரே சாலை அதுவும் செம்மண் ரோடாக குண்டும் குழியுமா இருக்கும், பேருந்து வசதி அப்பொதான் புதுசா வந்தது ஒரு நாளக்கி இரண்டுவாட்டி கயத்தாரிலிருந்து வரும்.  பெரும்பாலும் அதை நம்பமுடியாது பஞ்சர், பிரேக்டவுன் அல்லது சாதிக்கலவரம் வந்து பஸ் நின்னு போகலாம். ரோடு சரியில்ல வரமுடியாதுன்னு சொல்வாங்க அத ஊர்க்காரங்க சரிபண்ணனும், வைக்கோல்பிரியில் வேப்பிலை சொருகி தோரணம் தெருவெல்லாம் கட்டுவார்கள். மாட்டு வண்டிகளில் ஓடை மணலைசுமந்து விரிப்பார்கள்.  பொங்கல் திங்களன்று தொடங்கும் ஆனால் முந்திய நாளான ஞாயிரன்றே ரேடீயோ எனப்படுகிற குழாய்களை தெருவெங்கும் லைட் போஸ்டில் கட்டுவார்கள். சாமியாடிகள் அப்போ ரெண்டுபேர் ஒருத்தர் வைரசாமி, இன்னொருவர் முனீஸ்வரனுக்கு ஆடுவார். திங்களன்று நடக்கின்ற பிள்ளையார் கோவில் பூசைக்கு வில்லுப்பாட்டு கச்சேரி நடக்கும்.

செவ்வாய் இரவன்று மாரியம்மன்கோவிலில் சாமியாட்டம் தொடங்கும், சாமி அருள் வரவில்லையென்றால் மேளக்காரனுக்கு அடிவேற. அந்த மேள அடிக்க ஆரம்பிக்கும் போது நிறைய பெண்கள் ஆடுவார்கள், ஆனால் ரியல் சாமி ஆட ஆரம்பித்தவுடன் இவர்களை சாட்டையாக் அடிப்பார். சில சமயம் மேளம் எவ்வளவு அடித்தாலும் சாமி அருள்வந்து ஆடமாட்டார், மேளக்காரங்களுக்கு கைவலித்துவிடும். ஊருக்கு கிழக்கே தொலைக்காட்டில் ஒரு ஊருணி இருக்கிறது அங்கெ பெரிய வேப்பமரம் அந்த மரத்தில் சாமியிருக்கு என்?று சொன்னதால் ஆடுமேய்ப்பவர்கள் வேப்பமரத்தை சேதப்படுத்தாமல் வைத்திருக்கிறார்கள், அந்த மரத்திலிருந்து தான் சாமி புறப்பட்டு இங்கே வருமென்பார்கள். ஒருவழியா ஆட ஆரம்பித்தவுடன் கையில் சாட்டை கொடுத்துவிடுவார்கள், இன்னும் கொஞ்சநேரத்தில் ‘நிப்பாட்ர மேளத்த என்பார் ஏதோ அருளோ, அல்லது ஊர்க்காரர்களை எச்சரிக்கை செய்வார் அம்மாவ சரியா கவனிக்கல உங்களுக்கு தண்டனை கொடுத்துறுவா என்பாரு. ஆகட்டும் சாமி செய்யறோம் என்பார்கள், அடுத்து அக்கினி சட்டி எடுத்து  ஊரை வலம் வருவார்.

அன்றிரவும்  திரைகட்டி ஏதோ சினிமாப்படம் ஓடிக்கொண்டிருக்கும், விடியவிடிய படம் பார்ப்பார்கள். மறுநாள் புதன்கிழமை அம்மன் கோவிலுக்கு சிலர் கிடா வெட்டுவார்கள், கோழி அறுப்பார்கள் எல்லா வீட்டிலும் மதியம் கறிசோறு ரெடியாகிவிடும், மத்தியானம் மஞ்சள் நீராட்டம் நடக்கும், சாமியாடுபவருக்கு எல்லாரும் மஞ்சளைக் கலந்த நீரை ஊற்றுவார்கள். இளைஞர்கள் சிலர் தண்ணீ போட்டு ஆடுவார்கள்,  இவர்களோடு சிறுவர்கள் நாங்களும் ஆடுவோம், கீழெ தள்ளுவார்கள் அந்த வெயிலில் ஊத்துற மஞ்சத்தண்ணிக்கு ஓடி தலையை கொடுப்பார்கள். நம்ம மேல மஞ்சத்தண்ணீ விழல பெரிய அவமானப் போயிடும் அதனால வீட்டுப்பக்கம்வந்து அம்மா கொஞ்சம் ஊத்துமா என்று தலைமேல் ஊத்திக்குவோம். அப்படி மாலை 5 மணிவரை ஆடுவார்கள், களைத்து பலர் உறங்கிப்போவார்கள்,  அன்றிரவும் சினிமாவோ அல்லது வரகனி ஆட்டம் என்ற கூத்து நடக்கும். வியாழன் ஓய்வுநாள், வெள்ளியன்று இரவு முனீஸ்வரனுக்கு கொடை நடுச்சாமம் 12 மணிக்குத் தான் சாமியாடும், ஆடிக்கொண்டு தெருவழியா போவார், அன்றைக்கு நிறைய பேர் வருவார்கள், அது துடியான (அருள்மிக்க) சாமீ என்பார்கள். அந்த கோவிலுக்கு நிறைய பேர் கேட் (கிரில்) செய்து வழங்கியிருக்கிறார்கள், நகரங்களில் திருடர்களுக்கு பயந்து வீடுகளுக்குக் கூட மரக்கதவுக்கு முன்னால் ஒரு கிரில்கேட் போட்டிருப்பார்கள். ஆனால் சாமிக்கு கிரிலுக்கு பின்னாடி இன்னொரு கிரில் கேட் உண்டு.

சாமியாடுபவர் யாரையும் பார்த்து சிரிக்கமாட்டார், சிரித்தால் அவர் மனுசனாயிடுவார். ஒருத்தர் அப்படி வைரசாமியாய் ஆடுனாரு, அவர் ஆடும்போது கூட்டத்தில் வெளியூர்க் காரர்களைப் பார்த்த முறை வைத்து மாமா வாங்க, அண்ணே வாங்க என்று சொல்லி ஆடுவார். சாமியாடுபவர் காவு கொடுப்பதற்காக முட்டை வாங்கிக்கொண்டு ஓடுவார், வானத்தைப் பார்த்து வீசிவிட்டு வாங்கிட்டான், வாங்கிட்டான் என்று சொல்லுவார், யார் வாங்குனா என்றால் அது துஷ்ட தெய்வங்கள் வந்து வாங்கிக்கொண்டதாம். நாங்கள் மறுநாள் காலை அவர் வீசுன இடத்துல போய் பார்ப்போம் ஒண்ணும் இருக்காது. சாமியாடும்போது தலைநீட்றவங்களுக்கு திருநீர் பூசுவார். காவுகொடுக்கும் போது யாரும் குறுக்கே போயிரக்கூடாது என்பது விதி.

மறுநாள் காலை முனீஸ்வரனுக்கு கிடாவெட்டு நடக்கும்,அன்றோடு பொங்கல் முடிந்துவிடும் ஆனால் அதற்கடுத்து ரெண்டு நாள் பூரா தூக்கம்தான், தூங்கும்போது அந்த மேளச்சத்தம் கேட்கும், எழுந்து உடனே தெருவைப் பார்த்து போனா மேளக்காரங்க யாரும் இருக்கமாட்டார்கள், அதை அரிச்சல் என்பார்கள். அதற்கடுத்து அந்த கோவிலை பூசாரியைத் தவிற ஒரு வருடத்துக்கு யாரும் சீண்டமாட்டார்கள். மாணவர்கள் யாராவது பரீட்சையில் பாஸானால் பிள்ளையாருக்கு வெடலை (எறி தேங்கய்) போடுவார்கள். பரீட்சைக்கு முன்பு காலையில் குளித்துவிட்டு சில வாரங்களுக்கு அருள் வேண்டி கோவிலை சுற்றுவோம் நல்ல மார்க் வாங்கவேண்டுமென்பதற்காக.

கருத்துகள் இல்லை: