சனி, 30 ஜூன், 2012

பசுமைப்புரட்சியும் விவசாயிகளும்...



இன்னைக்கு பொதுவா இந்தியாவுல விவசாயம் முன்னேறுனதுக்கு காரணம் பசுமைப்புரட்சி தான் அப்படின்னும் நிறைய பேரு நம்புறாங்க..அதை நம்ப வைக்க பேப்பர்காரர்கள் டிவிகள் பெரும் முயற்சி செய்கிறார்கள், அதை நடைமுறைப் படுத்திய அமைச்சருக்கு பாரத ரத்னா விருதும் வழங்கப்பட்டது. உண்மையில் விவசாயிகளின் இன்றைய நிலை என்ன?

ஒரு விவசாயியும் கரிசல் மண்ணின் எழுத்தாளருமான கி.ரா. விவசாயிகளைப் பத்தி நிறைய சிறுகதைகள், நாவல்கள் எழுதியிருக்கிறார். கொத்தைப் பருத்தி என்கிற சிறுகதை ஒரு கரிசக்காட்டின் விவசாயக் குடும்பத்தை பற்றியது தான். ஒரு பெரிய விவசாயி அவருக்கு நிறைய நிலபுலன்கள், வீடு அரண்மனை மாதிரி, மாட்டுத்தொழுவம் கூட கல் கட்டிடம் ஜோடி ஜோடியா காளமாடுக, பசுமாட்டுக்கு மட்டும் ஒரு தொழுவம் இப்படிப்பட்ட விவசாயி செங்கண்ணாவுக்கு ஏழு பொம்பளபிள்ளைகளும் ஆறு ஆம்பளப்பயல்களும் இருந்தாங்க. அவரோட ஒரு பெண்ணை மாப்பளை வீட்டுக்காரங்க பொண்ணுபாக்க பார்க்கவந்தாங்க , அப்படி வந்தவரு ஒரு ஜில்லா கலெக்டருக்கு அப்பா. வீட்டுக்கு வந்த மாப்பிள்ளையோட அப்பாகிட்ட எல்லாத்தையும் பேசிகிட்டு எம்புட்டு நிலபுலன் இருக்குன்னு கேட்டாரு. கலெக்டரோட அப்பா, ஒரு காலத்துல நிறைய நிலம் இருந்துச்சு பெரிய காரவீடு இருந்துச்சு ஆனா என்மகன் படிக்கிறதுக்காக எல்லாத்தையும் வித்து அவனை சீமையிலபோயி படிக்கவைச்சேன். இப்ப அவன் ஜில்லாவுக்கே கலெக்டர் ஆகப்போறான்னு சொன்னார்.  செங்கண்ணா ஒரேடியா ஒரு ஏக்கர் நிலம் கூட இல்லாதனுக்கு பொண்ணு தரமுடியாதுன்னுட்டாரு. அப்புறம் வருசங்கள் போச்சு அவருக்கும் பேரப்புள்ளைகளுக்கு கல்யாண வயசு வந்துருச்சு.  தன்னோட பேரப்புள்ளையும் ஒரு சம்சாரி, அவனுக்கு பொண்ணு பாக்க ஒரு வீட்டுக்குப் போனாரு. பெண்ணைப் பெத்த தகப்பன் சொன்னாரு “ சம்சாரிகளுக்கு இனிமே நம்ம மொண்ணுங்க வாக்கப்படாது.,வந்து கேக்காதீங்க” அப்படி சொன்னவரு ஒரு சம்சாரிதான். இந்தக்கதய 1982ல எழுதியிருக்காரு. அவரு எழுதுன காலத்திலயே சம்சாரிகளுக்கு பொண்ணு கிடைக்கல. இப்ப நிலமையப் பாருங்க.

எங்க ஊர்ல ஒரு விவசாயம் பார்க்குற பையனுக்கு பொண்ணே கிடைக்கல..  நாலஞ்சு வருசமா அலஞ்சிதிரிஞ்சாங்க, அப்புறம் எங்கயோ ஒரு வீட்ல பொண்ணு குடுக்குறாத தகவல் வந்துச்சு. பொண்ணுக்கு பத்துபவுண் நகை பண்ணி போடுங்க, எங்களுக்கு ஒரு லட்சம் ரூபா கடன் இருக்குது அத அடச்சிடுங்க பொண்ணைத்தாரம் னு சொல்லியிருக்காங்க. இப்படித்தான் அந்த கல்யாணம் நடந்துச்சு. இன்னும் எத்தனையொ இளவட்டங்கள் பொண்ணு கிடைக்காம ஊர்ல இருக்காங்க. ஆனா அவங்க வீட்ல இருக்குற பொண்ணுங்கள சம்சாரிக்கு கொடுக்கமாட்டார்கள்.

ஊருக்கே சோறுபோடுறவன் விவசாயி, உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றவர் எல்லாம் அவங்க பின்னாடிதான் திருவள்ளுவர் சொன்னாரு. காலமாற்றம் எல்லாத்தையும் மாத்துது? ஏன் விவசாயிக்கு இந்த நிலம?

நிரந்தரமா மாச வருமானம் இருக்கா சம்சாரிக்கி? வருசம் பூராவும் கண்ணுங்கருத்துமா பயிரை காப்பாத்தி அறுவடையில ஒரு இயற்கை சீரழிவுவந்தா சம்சாரி அம்புட்டுதான். வருசத்துக்கு வருசம் விவசாயி கிராமத்தை காலிபண்ணி அவங்க வசதிக்கு தகுந்தமாதிரி நகரத்துக்கு போயி சொந்தமா வியாபரமோ இல்ல கூலி வேலைக்கு, சித்தாள் வேலை, ரோடுபோடுற வேலை போயிகிட்டே இருக்காங்க.  கிராமத்துல இப்பதான் கொ/ஞ்சம் ரோடு பொடுறாங்க அதுவும் எல்லா கிராம்த்துக்கும் ரோடு கிடைச்சிருச்சா? குடிதண்ணீ இல்ல, ஆஸ்பத்திரி இல்ல, நல்ல பள்ளிக்கூடம் இல்ல, இப்படி எத்தனையோ இல்லாமைக்காக நகருக்கு இடம்பெயர்கிறார்கள். இப்படி நகர்ந்தவர்களுக்காகத்தான் அது நகரம்னு பேரு வந்துச்சோ! கடந்த பத்தாண்டுல தமிழ்நாட்டோட ஜனத்தொகை 15.6% கூடியிருக்கு. கிராமப்புறங்களில் இது 6.49 சதமும் நகர்ப்புறங்களில் 27.16 சதமானும் கூடியிருக்கு. அதாவது கிராமப்புறத்தில் சில மாவட்டங்களில் மக்கள் தொகைவளர்ச்சி நெகட்டிவா இருக்கு, கன்யாகுமரி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் கிராமப்புறங்களிலிருந்து மக்கள் இடம்பெயர்த்திருக்கிறார்கள்.

விவசாயம் ஒரு கவுரமான தொழிலாக இருந்தது ஒரு காலம், படித்துவிட்டு அரசாங்க வேலைகள் மட்டும் இருந்த காலத்தில்கூட “கூலிவேலைக்கு” யார் போவா என்று இருந்தவர்கள் உண்டு. இன்றைக்கு எங்காயவது ஒரு ப்யூன் வேலை கிடைச்சாப் போதும், வெளிநாட்டுக்கு பணம் கட்டி அங்க அடிக்கிற வெயில்ல எந்த வேலையும் செய்றாங்க. விவசாயிகளுக்கு வழங்கப்படுகிற உரமானியம், விதை மானியத்தை பெரிதாக பேசுகிறார்கள், அதேபோல் கடன் தள்ளுபடியும் அப்படித்தான். இந்தியா முழுவதும் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செஞ்சது ஒரு ல்ட்சம் கோடி இருக்குமா? வசதியான பெரிய ஆலை அதிபர்களின் கடன்களை வாராக்கடன்கள் என்று அறிவிக்கிறார்கள். தொழில்வளர்ச்சிக்கு அது தேவை என்று பிரச்சாரம் செய்கிறார்கள். விவசாயிகள் செய்வது உணவு உற்பத்தி .. அது குறைந்தால் நாட்டில் உணவுப்பற்றாக்குறை ஏற்படும். வளர்ந்த நாடுகளில் பெரிய நிறுவனங்களாக இருக்கிற விவசாயிகளுக்கு அந்த அரசுகள் மானியம் தந்து உற்பத்தியைப் பெருக்கி அதை ஏற்றுமதிக்கு ஊக்குவிக்கிறார்கள். இங்கே வங்கிகளில் கார் லோன் எளிதாக கிடைக்கிறது, விவசாயிக்கு வங்கியில் மரியாதை இல்லை, காத்திருந்து அவமானப்படுகிறார்கள். வட்டியும் அதிகம். கார் லோன்களுக்கு விள்ம்பரம் செய்கிறார்கள். அதனால் கந்துவட்டி வாங்கி பயிர்செய்த விவசாயிகள் விளைச்சல் இல்லாமல் மானம் காக்க தற்கொலை செய்துகொண்டவர்கள் பத்தாண்டுகளில் சுமார் 2,50,000 விவசாயிகள் அதுவும் ஐந்து மாநிலங்களில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 1,22,000 பேர். மான்சாண்டோ போன்ற பன்னாட்டு நிறுவங்களின் விதைகளை பயிர்செய்து அவர்கள் சொன்னமாதிரி மருந்து தெளித்து, உரம் போட்டு மகசூல் இல்லாமல் மஹாராஷ்டிரா, ஆந்திரா, மத்தியப்பிரதேசம், கர்நாடகா மற்றும் சத்தீச்கர் மாநிலங்களில் தான் அதிக விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள்.  இதை ஊடகங்கள் மறைத்துவிடுகின்றன. பெரும்பாலும் பருத்திவிவசாயிகள்.

விவசாயிகளின் வளர்ச்சியைவிட அவர்களை உறிஞ்சிவாழ்கிற விதை உற்பத்தியாளர்கள், ரசாயண உர உற்பத்தியாளர்கள், பன்னாட்டு பூச்சிக்கொல்லி மருந்து நிறுவனக்கள், அவர்களின் டீலர்கள், கொள்முதல் செய்யும் வியாபாரிகள் தான் பசுமைப்புரட்சியால் வளர்ச்சியடைந்திருக்கிறார்கள். பெரிய விவசாயிகள் , பணப்பயிர் உற்பத்தி செய்வோர் முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள். சிறு விவசாயிகள் பிழைப்புக்காக செய்கிறார்கள், அவர்களின் வாரிசுகளை கடன்வாங்கி படிக்கவைத்து விவசாய்த்திலிருந்து தப்பித்து போய்விடு என்று சொல்லாமல் சொல்கிறார்கள். எந்த விவசாயின் வாரிசுகளும் வேளான் விஞ்ஞானத்தை கற்க விரும்புவதில்லை. இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் இருக்கிறது என்றார் மகாத்மா! ஆன்மாவை விற்றுவிட்ட ஆட்சியாளர்களால் கிராமங்களில் ஆன்மா இருக்காது.

கருத்துகள் இல்லை: