செவ்வாய், 7 ஜூன், 2011

அழகர்சாமியின் குதிரை.


முன்பெல்லாம் சினிமாவை விமர்சனம் செய்வது என்பது பத்திரிக்கைகள், தொலைக்காட்சி செய்கிற வேலையில் ஒன்றாக இருந்தது, இப்போது இணையத்தில்,வலைப்பூக்களில் யார் வேண்டுமானாலும் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கலாம். பத்திரிக்கைகள் அல்லது தொலைக்காட்சி ஊடகங்களே சினிமாவை தயாரித்து வெளியிடுகிற சூழ்நிலையில் நம்பகத்தன்மையான விமர்சனங்களை அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. வலைப்பதிவர்கள் அப்படியல்ல, வணிகத்திற்காக எழுதுவதில்லை. தான் ரசித்ததை தனக்குப் பிடித்ததை மற்றவர்களுக்கு பரிந்துரை செய்கிறார்கள். அப்படித்தான் ‘தமிழ்வீதி’யில் வந்த அழகிரிசாமியின் குதிரை விமர்சனத்தை படித்தபின்பு அப்படத்தை பார்த்தேன். சமீபத்தில் பார்த்த சிறந்த படங்களில் இதுவும் ஒன்று. ஹீரோயிசமில்லாத, அதிக பட்ஜெட் இல்லாத, ஆபாசக்காட்சிகள் இல்லாத படங்கள் முன்பு அரிதாக இருந்தது. இயக்குனர் இமயம் என்று கிராமப்பிண்ணனியிலிருந்து சினிமாவிற்கு வந்தவர்கள் கூட இப்படி சாமானியர்களின் கதையை படமாக்கவில்லை. ஆரம்பகாலத்தில் அப்படி சில படம் அவர்கள் எடுத்திருந்தாலும் கடைசியில் சாதிப்பெருமைகளை கொண்டாடும் பழம்பெருமைகள் பேசும் தனிநபர்களை சுற்றியே படமாக்கினர்.

இலக்கியங்களை சினிமாவாக ஆக்கும் பணியில் தமிழ் சினிமா சற்று தாமதமாக இருந்தாலும் அப்படி உருவாக்கப்பட்ட பூ, ஒன்பது ரூபா நோட்டு, சொல்லமறந்தகதை என எல்லாப் படங்களும் தரமானதாக இருந்தது, அதே வரிசையில் அழகிரிசாமியின் குதிரையும் பாஸ்கர் சக்தி எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டது. கிராமத்து மக்களின் தெய்வ நம்பிக்கையை நல்ல முறையில் பகடி செய்திருக்கிறது. படத்தில் யார் கதாநாயகன் என்பது முக்கியமில்லை, கதாநாயகன் பத்துபேரை புரட்டிஎடுக்கும் வலிமை தேவையில்லை, வசீகரிக்கும் அழகு தேவையில்லை. அழகர் ஆற்றில் இறங்கினால் மழை பெய்யும் என்ற நம்பிக்கை மதுரை வட்டாரத்தில் இன்னும் சில கிராமங்களில் இருக்கிறது. கிராமத்து மக்களின் அளவு கடந்த நம்பிக்கைகள் அவர்களின் வாழ்வில் ஏற்படுகிற துன்பங்களின் அடிப்படையில் வருகிறது. இதை செய்தாலாவது நல்லது நடக்கதா? என்ற ஏக்கம். என்னுடைய கிராமத்திலும் மழைக்காக மக்கள் செய்த வேடிக்கைகள் நிறைய இருக்கிறது. ஒரு மலைமீதுள்ள கடவுளுக்கு ஆயிரக்கணக்கான குடம் நீரை சுமந்து சென்று சிலைக்கு ஊற்றுவார்கள், அப்படியாவது தெய்வத்தின் உள்ளம் குளிராதா? ஊரின் எல்லைக்குச் சென்று பொங்கல் வைப்பார்கள் அதற்கு எல்லைப்பொங்கல் என்றே பெயர். இன்னும் சில கிராமங்களில் மழைக்காக கழுதைகளுக்கு கல்யாணம் செய்விப்பது இன்றும் நடக்கிறது.

30 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிராமம் எப்படியிருந்தது என்பதை காஸ்ட்யூம்கள் இல்லாமல் கதை நகர்கிறது. ஒரு குதிரையை வைத்து பிழைப்பை ஓட்டும் அழகர்சாமி தன்னுடைய குதிரையை மீட்க கிராமத்து இளைஞர்கள் ஊர்திருவிழாவிற்கு முன்பே உதவுவதை ஏற்க மறுத்து, திருவிழாவின் மூலம் வேலைவாய்ப்பு பெற்ற ரேடியோசெட்காரன், மேளக்காரன், பந்தல்காரன் போன்றோரின் வருவாயைப்பற்றியும் கவலைப்படுகிறான். குதிரை இல்லாவிட்டால் திருவிழா நிச்சயம் நடக்காது, சந்தோசமாக திருவிழாவிற்காக காத்திருக்கிற மக்களின் முகங்களை நினைக்கிறான். ஊர்க்காரர்கள் குதிரைக்காரனை அடித்துப்போட்டு சென்றவுடன் ஒரு விதவைத்தாய் அவனுக்கு ஆறுதல் கூறி உணவளிக்கிறாள், அதேபோன்று ஏழ்மையில் திருடுபவனை ஊர்க்காரகள் போட்டு அடித்து கட்டிவைக்கிறார்கள்.திருடனையும் மனிதனாக மதிக்கவேண்டும் நேசிக்கவேண்டும் என்பதை கற்றுக்கொடுத்திருக்கிறது.மலையாள மாந்திரீகன் செய்யும் ஏமாற்று வேலைகளையும் சினிமா பகடி செய்கிறது. வில்லனின் ஆட்கள் குதிரைக்காரனை அடித்தபோது எஜமானனுக்காக குதிரை கயிற்றை முறித்துக்கொண்ட எதிரிகளை துவம்செய்வது கொஞ்சம் நம்பும்படியாக இல்லையென்றாலும், அது மைனரை ‘குறி’வைத்து மிதிப்பது நகைச்சுவைக்காக. இதுவரை போலீஸ்காரர்களை சமூகவிரோதிகளுக்கு துணைபோவர்களாகவே காண்பித்த தமிழ்சினிமாவில் இப்படியும் சில சப் இன்ஸ்பெக்ட்ர்கள் இருக்கிறார்கள் என்பதை பதிவுசெய்திருக்கிறது. கிராமத்தில் பள்ளிக்கு செல்லவேண்டிய பெண்குழந்தைகள் குடும்பச்சூழ்நிலைக்காக திருப்பூர் பனியன் கம்பெனிக்கு வேலைக்கு அனுப்புவது இன்றும் கிராமப்புறங்களில் ‘சுமங்கலித்திட்டம்` என்ற பெயரால் கொத்தடிமையாக வேலைக்குச் செல்வது நடப்பிலுள்ளது. திருமணத்தில் சாதி என்பது கிராம நகர வேறுபாடு இல்லாமல் எங்கும் நிலவுகிறது. ஊர்த்தலைவரின் மகன் தாழ்த்தப்பட்ட சாதிப்பெண்ணை திருமணம் செய்ததால் இனி இந்த ஊரில் மழையே பெய்யாது என்ற ஊர்த்தலைவரின் சாபம் ‘சாமியாலேயெ’ மறுக்கப்பட்டு உடனே கொட்டோகொட்ட்டென்று மழை பெய்கிறது.

இயக்குனர் சுதீந்திரனின் முதல் படமான வெண்ணிலா கபடிக்குழு வை அடுத்து அழகர்சாமியின் குதிரையும் சிறந்த படம்.நல்ல தமிழ்சினிமாக்கள் இன்னும் வளரவேண்டும், அதற்காக இந்தப் படம் வெற்றியடையவேண்டும்.

1 கருத்து:

பாரதசாரி சொன்னது…

ஆழ்ந்த விமர்சனத்திற்கு நன்றி தோழரே.நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி.
இதைப் பார்க்கும்போது "The man who saved pumplesdrop" என்ற கதை -நியாபகத்துக்கு வந்தது.