ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

காந்திகிராம் பல்கலைக்கழகம் உருவானகதை...
கடந்த நூற்றாண்டிலேயே மதுரையில் பெரிய நிறுவனமான இருந்த இன்றைய டி.வி.எஸ். நிறுவனத்தை உருவாக்கிய டி.வி.சுந்தரம் அய்யங்காரின் மகள் செளந்திரம் இளம் வயதிலேயே கணவரை இழந்துவிட்டார். சிறிதுகாலத்திற்குப் பின்னர் பள்ளியில் படித்து அதன்பின் புதுதில்லி லேடி ஹார்டிஞ் மருத்துவமனை கல்லூரியில் சேர்ந்துபடித்தார். அங்கே அவருக்கு தேசிய இயக்கத்தின் மீது மிகவும் ஈடுபாடு ஏற்பட்டது.அச்சமயத்தில் டெல்லியில் நடைபெற்ற ஹரிஜன் சேவா சங்க மாநாட்டிற்கு வந்த கேரளத்தைச் சேர்ந்த காங்கிரஸ் ஊழியர் ஜி.ராமச்சந்திரனுடன் அவருக்கு பரிச்சயம் ஏற்பட்டது. அவருடைய ஆங்கிலப் புலமையும் சேவை மனப்பான்மையும் செளந்திரத்தை ஈர்த்தது. மருத்துவப்பட்டம் பெற்றபின் செளந்திரம் சென்னைக்கு வந்து ஹரிஜன சேவா சங்கத்தில் ஈடுபட்டுக்கொண்டே மருத்துவராகவும் பணியாற்றி ஏழைகளுக்கு தொண்டாற்றினார். ஜி.ராமச்சந்திரனும் தமிழ்நாடு ஹரிஜனசேவா சங்கத்தின் பொறுப்பாளராக சென்னைக்கு வந்தார். செளந்திரம்- ராமச்சந்திரன் நட்பு தொடர்ந்து திருமணம் செய்வதென்று முடிவுசெய்தனர்.

ஆனால் சுந்தரம் அய்யங்காரும், அவர் குடும்பத்தினரும் இதற்குச் சம்மதிக்கவில்லை ஏனென்றால் ஜி.ராமச்சந்திரன் கேரளத்தின் நலிவுற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்.

எனவே, 1940ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருவரும் வார்தா காந்தி ஆசிரமத்திற்குச் சென்று மகாத்மா காந்தியைச் சந்தித்து தங்கள் திருமணத்தை நடத்திவைக்கும்படி கேட்டுக்கொண்டனர்.இவ்விருவரையும் நீண்டகாலமாக நன்கறிந்த காந்திஜி, காங்கிரஸ் காரியக்குழு கூட்டம் நடைபெற்ற நவம்பர் 2ம்தேதி நாடு முழுவதுமிருந்துவந்த தலைவர்கள் முன்னிலையில் அவர்கள் திருமணத்தை எளிமையாக நடத்திவைத்தார்..இச்செய்தி அடுத்தநாள் காலையில் செய்தித்தாளில் வெளியாகி டி.விஎஸ். குடும்பத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இவ்விருவரின் முன்முயற்சியால் திண்டுக்கல் அருகே ஒரு கிராமத்தில் காந்தியமுறையில் துவங்கப்பட்ட ஆர்மபப்பள்ளி மற்றும் ஆரம்பசுகாதார நிலையம்தான் காலப்போக்கில் பெரும் வளர்ச்சிகண்டு காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகமாக இன்று விளங்கிவருகிறது. இரண்டாயிரத்திற்கு அதிகமான மாணவர்களைக்கொண்ட அந்த பல்கலைக்கழகம்தான் இந்தியாவின் மிகப்பெரிய கிராமியப் பல்கலைக்கழகமாகும். தேசபக்த கலப்புத்திருமணம் என்பது இதன் பின்னணியில் உள்ளது என்பது பலர் அறியாத ஒன்று.ஜி.ராமச்சந்திரன் அந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பல ஆண்டுகள் செயல்பட்டார். செளந்திரம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

(என்.ராமகிருஷ்ணன் எழுதிய “கம்யூனிஸ்ட்களும் கலப்புத்திருமணமும்” புத்தகத்திலிருந்து பெறப்பட்ட தகவல்)

கருத்துகள் இல்லை: