ஒரு புத்தகத்தை வாசித்தால் அதுபற்றி நிறைகுறைகள் தெரியப்படுத்த வேண்டியது வாசகர்களின் கடமை, அது மற்ற வாசகர்களின் கவனத்திற்கும் ஆசிரியர், பதிப்பகத்தார் கவனத்திற்கு செல்கிறது. நான் நீண்டநாட்களுக்கு முன்பு வாசித்த தோழர்.கு.சின்னப்பபாரதி எழுதிய‘சங்கம்’ நாவல் வாச்சாத்தி வழக்கின் தீர்ப்பு வந்தவுடன் மறுவாசிப்பு செய்தேன். அரசின் காவல்துறையும் வனத்துறையும் வாச்சாத்தியில் மலைவாழ் மக்களுக்கு செய்த கொடுமைகளை தமிழகத்தின் பெரிய அரசியல் கட்சிகள் பெரியார் வழியில் வந்தவர்கள் எல்லாம் வேடிக்கை பார்த்தவேளையில், அந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவும் அவர்களை நிமிர்ந்து நிற்கச்செய்த ஒரே இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே. அந்த வகையில் ‘சங்கம்’ நாவல் கொல்லிமலைப் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் சமவெளி மனிதர்களாலும் அரசு நிர்வாகத்தின் வனத்துறை, காவல்துறை போன்றோர்களாலும் வஞ்சிக்கப்பட்டதை எதிர்த்து அந்த அம்மக்கள் தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக போராட்ட களத்தில் நிற்பது தான் இந்த நாவலின் கரு. இங்கேயும் அந்த மக்களுக்கு பிரதிபலன் எதிர்பராது நிற்பது கம்யூனிஸ்ட்கள் தான். அதர்மம் தலை தூக்குகிற போது தர்மத்தை காக்க கடவுள் அவதாரம் எடுப்பார் என்கிறார்கள். இதுவரை எந்த கடவுளும் அதர்மத்தை எதிர்த்து தோன்றவில்லை, அல்லது இதெல்லாம் அதர்மம் இல்லையோ?
இந்தியாவின் எந்தப்பகுதியிலும் காடுகள்,வனங்கள் அங்கு வசிக்கும் மலைவாழ் மக்களாலும் பழங்குடிகளாலும் அழிக்கப்படவேயில்லை. இந்த நாட்டின் உண்மையான பூர்வகுடிகள் என்றால் அவர்கள் பழங்குடியினர்தான். நாடு சுதந்திரம் அடைந்தது என்பதன் வாசனையை அவர்கள் இன்னும் அறியவேயில்லை. சுதந்திரம் என்பதே வெள்ளைக்காரர்களிடமிருந்து இந்திய பெருமுதலாளிகள் கைகளில் மாறியிருக்கிறது. அப்படி ஏற்பட்ட அந்த மாற்றத்தை சமவெளி மனிதர்கள் அனுபவிக்கிறார்கள். பணம் வசதி படைத்தவனுக்கு அதிக சுதந்திரம் இருக்கிறது. அரசு நிர்வாகமும் வசதி படைத்தவர்களுக்குத்தான் சேவை செய்கிறது, பெரும்பாலான அரசியல் இயக்கங்களும் அதே வழியில்தான் செல்கின்றனர்.
மலைவாழ் மக்கள் இயற்கையோடு வாழ்கிறார்கள், அந்த கானகத்தில் சிறிய பரப்பளவில் சாகுபடி செய்கிறார்கள், விளைந்த பொருட்களை சமவெளியில் சென்று சந்தையில் விற்கிறார்கள். ஒரு பக்கம் அரசு நிர்வாகத்தின் வனத்துறை அதிகாரத்தின் மூலம் அம்மக்களை சாகுபடி செய்கிற நிலத்தை விட்டு விரட்டுகிறது, அதை கெஞ்சல் மூலமாகவும் அதிகாரிகளுக்கு தெண்டணிட்டும் வாழ்க்கை நடத்துகிறார்கள். மறுபுறம் சாகுபடியால் விழைந்த பொருட்களை சந்தையில் வியாபாரிகள் அவர்களிடம் கொள்ளையடிக்கிறார்கள். கடைசியில் கந்துவட்டியில் சிக்குகிறார்கள். வட்டியோ அநியாய வட்டி, அரசு மலைவாழ் மக்களுக்கு கொடுக்கிற சிறிய மானியங்களையும் அதிகாரிகள் ஏப்பம் விடுகிறார்கள். அந்த மக்கள் இதுதான் வாழ்க்கை, மாற்றமேயில்லை நம் முன்னொர் காலத்திலும் இப்படித்தான் வாழ்ந்தார்கள் விதி அவ்வளவுதான் என்று சகித்துக்கொள்கிறார்கள். ஆதிமனிதன் தன்னுடைய நேரத்தை உணவு சேகரிப்பதிலேயெ செலவிட்டான், இவர்களுக்கும் அப்படித்தான். நாவல் முழுக்க சொலவடைகள் அந்த கஷ்டங்களிலிருந்து வருகிறது. நாவலின் ஆசிரியர் அந்த மக்கள் மொழியையும் அவர்கள் வாழ்க்கைமுறைகளை கற்பதற்காக அங்கு அதிககாலம் தங்கியிருந்து இந்த நாவலை எழுதிமுடிக்க ஐந்துஆண்டுகாலம் எடுத்துள்ளார்.
கானகத்தில் அந்த மக்கள் அவர்களுக்குள்ளேயெ கட்டுப்பாடுகள் விதித்துக்கொண்டு வாழ்கிறார்கள், ஆனால் ஒரு கந்துக்காரன் கொடுத்தபணம் திருப்பிச்செலுத்தாதால் பணம் வாங்கிய வெள்ளையன் மனைவியை கந்துக்காரனின் கையால் கொண்டுசெல்கிறான். அதை எதிர்ப்பதற்கு அவர்களிடம் தைரியம் இல்லை. இலங்கை தேயிலை தோட்டத்திலிருந்து வந்த சீரங்கன் தொழிற்சங்கப் போராட்டத்தை அறிந்தவனாக இருக்கிறான். இந்தக் கொடுமையை ஏன் தட்டிக்கேட்கக்கூடாது என்று காவல் நிலையம் செல்கிறான்.அவனுக்கு சாமானியனுக்கு நமது காவல்துறையில் கிடைக்கவேண்டிய மரியாதையாக அடிஉதை கிடைக்கிறது. செங்கொடி ‘சங்கத்தை’ நாடுகிறான். தோழர்கள் கந்துக்காரனிடமிருந்து வெள்ளையன் மனைவியை மீட்கிறார்கள். செங்கொடி மீது மலைமக்களுக்கு நம்பிக்கை பிறக்கிறது. இளம்தலைமுறையினர் செங்கொடி உதவியுடன் மலைமக்களுக்கான சங்கத்தை கட்டுகிறார்கள்.போராடுகிறார்கள், போராட்டத்திலிருந்து அனுபவம் பெறுகிறார்கள். அதுவரை காவல்துறையைக் கண்டும் வனத்துறையைக் கண்டும் பயந்தவர்கள் இப்போது எதிர்த்து கேள்விகேட்கிறார்கள். அவர்களின் அடிப்படைத் தேவையான சந்தையை மலையிலேயெ கூட்டுகிறார்கள். வாழ்விடத்திற்காகவும், சாகுபடி நிலத்திற்காகவும் போராடுகிறார்கள். அவர்களை வழிநடத்துகிற ஒரு இயக்கம் இருப்பதால் தான் வாச்சாத்தி வழக்கு வெற்றியடைந்தது. மீண்டும் மனிதர்களாக அதிகாரத்தைக் கண்டு அஞ்சாமல் எதிர்த்து சமர் புரிகிறார்கள்.
‘நா கேக்குறதுக்காவ கோவுச்சுக்காதீங்க தோழருனாரே அது என்ன உத்தியோகமுங்க! என்று ஒரு மலைவாசி கேட்கிறார். “நீங்க தோழர்னு சொல்லப்படற வார்த்தையை மொதல்ல புரிஞ்சுக்க வேண்டியதுதா. அதப்பத்தி நீங்க கேட்டது நல்லதாப்போச்சு, நாம சொந்தக்காரர்ன்னு சொல்றோம். ஒருத்தர்க்கு சொந்தக்காரர்னா ஊர் ஒலகத்துல பத்தோ இருபதோ பேர்தா இருப்பாங்க. ஒருத்தர்க்கு சினேகிதகாரரோ நண்பரோன்னு சொன்னா மனசுக்கு மனசு அந்தரங்கமா பேசக்கூடியவங்க ஒண்ணு ரெண்டு பேருதா இருப்பாங்க. ஆனா தோழர்னு சொன்னா ஜாதி, மதம் நாடு கடந்து பாடுபட்டு உழச்சுச் சாப்பிடறவங்க எல்லரையும் ஒரு குடும்பமா ஒரே நலன் அடிப்படையிலெ பிணைச்சுப் பார்க்கிறதாகும். அது சொந்தத்துக்கும் நட்புக்கும் மேலான ஒரு உறவு குறிக்கும் உயர்ந்த சொல்லாகும்’
பிரதிபலன் எதிர்பாரமல் செங்கொடி இயக்கம் ஏன் அடித்தட்டு மக்களுக்காகவும் தொழிலாளர்களின் நலனுக்காவும் விவசாயிகளுக்காகவும் போராடுகிறது என்கிற கேள்வி செங்கொடி இயக்கத்தில் சேரும்போது ஒவ்வொருவருக்கும் எழுகிறது. இன்னமும் நடுத்தர மக்களிடம் அந்த ஐயம் இருக்கிறது. எல்லா அரசியல் கட்சிகளும் பதவிகிடைத்தால் காசு பார்க்கிறார்கள், ஆனால் கம்யூனிஸ்ட்கள் பிழைக்கத்தெரியாதவர்களாக இருக்கிறார்களே என்று ஆதங்கப்படுகிறார்கள். கிறிஸ்தவமதம் எளியமக்களுக்கு உணவு, உடை கல்வி என சேவை செய்கிறது, ஆனால் கம்யூனிசம் ஏன் ஏழையாய் இருக்கிறாய்? என்று அவனுக்கு போராடக்கற்றுக் கொடுக்கிறது. அம்மா, அப்பா, நீர் என்ற சொற்கள் மாதிரி உலகெங்கும் வெவ்வேறு மொழியில் உயிர்ப்புடன் பேசப்படுகிற வார்த்தை ‘தோழர்’ என்பது தான்.
5 கருத்துகள்:
அன்பான தோழரே,வணக்கம்.
சங்கம் நாவல் மிக முக்கியமான ஒன்று.பெரும்பாலான முற்போக்கு இலக்கியவாதிகள் இதை குறிப்பிடுவதில்லை.குசிபாவை மட்டுமில்லை மேலாண்மைக்கும் இதே கதிதான்.ஆனால் ஆரம்ப நிலை வாசகர்களிடம் பெரும்தாக்கத்தை உண்டுபண்னுகிற எளிய வீர்யமிக்க எழுத்துக்கள்.எனது கல்யாணம் முடிந்த கையோடு இந்த நாவலை மூன்றுநாளில் படித்துமுடித்த நினைவுகள் நிழலாடுகிறது.
அருமை தோழர் அரிஹரன் அவர்களே! கு.சி.பா எழுத்தாளர் மட்டுமல்ல. 60ம் ஆண்டுகளில் முதன் முதலில் பஞ்சாயத்து தேர்தல் நடந்தபோது நாமக்கல் நகர் கட்சி செயலளராக இருந்தார். கொல்லிமலை மலைவாழ் மக்களின் பஞ்சாயத்து தேர்தலை முன்நின்று நடத்த கட்சி அவரை அனுப்பியது.கந்துவட்டிக்காரர்கள், வியாபாரிகள் ஆகியொரின் தாக்குதலை மீறி தேர்தலை அந்தமக்கள் சந்திக்க தன்னந்தனியாக களத்தில் இறங்கினார்.அவரைக் கொன்றுவிட துப்பாக்கியோடு எதிரிகள் அலைந்தனர்.மலைவாழ்மக்கள் துப்பாக்கியோடு முன்னும் பின்னும் நின்று அவருக்கு பாதுகாப்பு அளிக்க தேர்தலில் பிரச்சாரம் செய்தார்.பஞ்சாயத்து தேர்தலில் அந்த மலைவாழ் மக்கள் வெற்றி பெற்றனர். குசிபா தன் வாழ்க்கை வரலாறை "என் பணியும் போராட்டமும் " என்ற நூலாக எழுதியிருக்கிறார்.நாற்பது ஆண்டுகளாக என் ஆப்த நண்பர் .எல்லாவற்றிற்கும் மேலாக என் உற்ற தோழர்.அன்புடன் ---காஸ்யபன்
அருமை தோழர் அரிஹரன் அவர்களே! கு.சி.பா எழுத்தாளர் மட்டுமல்ல. 60ம் ஆண்டுகளில் முதன் முதலில் பஞ்சாயத்து தேர்தல் நடந்தபோது நாமக்கல் நகர் கட்சி செயலளராக இருந்தார். கொல்லிமலை மலைவாழ் மக்களின் பஞ்சாயத்து தேர்தலை முன்நின்று நடத்த கட்சி அவரை அனுப்பியது.கந்துவட்டிக்காரர்கள், வியாபாரிகள் ஆகியொரின் தாக்குதலை மீறி தேர்தலை அந்தமக்கள் சந்திக்க தன்னந்தனியாக களத்தில் இறங்கினார்.அவரைக் கொன்றுவிட துப்பாக்கியோடு எதிரிகள் அலைந்தனர்.மலைவாழ்மக்கள் துப்பாக்கியோடு முன்னும் பின்னும் நின்று அவருக்கு பாதுகாப்பு அளிக்க தேர்தலில் பிரச்சாரம் செய்தார்.பஞ்சாயத்து தேர்தலில் அந்த மலைவாழ் மக்கள் வெற்றி பெற்றனர். குசிபா தன் வாழ்க்கை வரலாறை "என் பணியும் போராட்டமும் " என்ற நூலாக எழுதியிருக்கிறார்.நாற்பது ஆண்டுகளாக என் ஆப்த நண்பர் .எல்லாவற்றிற்கும் மேலாக என் உற்ற தோழர்.அன்புடன் ---காஸ்யபன்
//என் பணியும் போராட்டமும் "// தோழரே, ஒரு புத்தக மாநாட்டில் பாரதிகிருஷ்ணகுமார் உரையாற்றினார் அதிலிருந்து தான் கு.சி.பா தமுஎசவை ஆரம்பித்த முன்னொடிகளில் ஒருவர் என்று தெரிந்தது. அவருடைய எழுத்துக்களில் ரஷ்ய நாவலில் வரும் நடை தெரிகிறது எப்படி யென்றால் ‘சப்பை மூக்கும் நீண்ட நெற்றியும் கொண்ட ஒருவன் இவ்வாறு கூறினான்’ என்ற வார்த்தைகள்.
தோழர் காமராஜ் அவர்களே, கரிசல் எழுத்துக்களில் வருகிற மண்வாசனை மாதிரி இந்த நாவலில் மலைவாழ் மக்களின் மொழியை நமக்கு தருகிறார். சொலவடைகள் மட்டும் நூற்றுக்கும் மேல யிருக்கும். அடுத்து ‘சர்க்கரை’ நாவ்லை வாசிக்க உள்ளேன்.
கருத்துரையிடுக