சனி, 6 பிப்ரவரி, 2016

தமிழகத்தில் அடிமைமுறை-1

பேரா.ஆ.சிவப்பிரமணியன் எழுதிய ஆய்வு நூலிலிருந்து...


நூல் வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
விலை :ரூ120


முந்தைய பதிவில் மன்னர்களின் ஆட்சிகாலத்தில் அடிமைமுறை நிடித்திருந்தது என்பதை பார்த்தொம். சோழர்கள் காலத்தில் நிலவுடமைமுறை சங்ககாலத்தைவிட வளர்ச்சியடைந்திருந்தது. சோழர்கள் காலத்தில் கோவில்கள் என்பது வெறும் வழிபடும் இடம் மட்டுமல்ல, அதிகாரம் சார்ந்த இடமாகவும் பொருள் உற்பத்தியில் முக்கிய பங்கும் வகித்தது. பொ.வேல்சாமி அவர்கள் எழுதிய நூலில் மன்னர்கள் என்பவர்கள் இன்றைய ராணுவ ஜெனரல்கள் போல் விளங்கினார்கள், சிவில், குற்றம், பொருளாதாரம் போன்றவை கோவிலின் நிர்வாகத்துடன் சேர்ந்திருந்து என்று விளக்கியிருந்தார். கொவில் நிலத்தின்மீது பிராமணர்களும் படிப்படியாக வேளாளர்களும் அதிக்கம் செலுத்தி வந்தனர். எண்ணற்ற நிலமற்ற மக்கள் கோவிலடிமைகளாகி விவசாயஉற்பத்தியில் ஈடுபட்டிருந்தார்கள். விவசாய நிலத்தை வைத்திருந்த பிராமணர்கள், வேளாளர்கள் அடிமைகளை வைத்திருக்கலாம். ஆனால் உவச்சர், நெசவாளர், நாவிதர் ஆகியோர் அடிமைகளை வைத்துக்கொள்ளக்கூடாது என்ற கட்டுப்பாட்டை இரண்டாம் ராஜராஜனின் கல்வெட்டு தெரிவிக்கிறது. குயவர், நெசவாளர் என்பவர்கள் பொருள் உற்பத்தியில் ஈடுபடுப்வர்கள் இவர்கள் கிராமத்தின் தேவைக்கதிகமாக உபரி உற்பத்தி செய்யவிடாமல் ஊர்சபை பார்த்துக்கொண்டது.
கிரேக்க, ரோம் நாடுகளில் உற்பத்தியில் அடிமைகளின் பங்களிப்பு பிரதானமாக இருந்தது, இந்தியாவில் பொருள் உற்பத்தியில் அடிமைகளின் பொருள் உற்பத்தி என்பது பிரதானமாக இல்லை, வெறும்  உடலுழைப்புக்கூலி வேலை, வீட்டுவேலை என்றளவில்தான் இருந்துள்ளது.


தேவரடியார் அடிமைமுறை.
-----------------------------------
பிற்காலச் சோழர்கள் காலத்தில் கோவில் வேலைகளுக்கென்று ‘தேவரடியார் முறை’ ஏற்படுத்தப்பட்டது நிலச்சுவானதார்கள் பெண்களை விலைக்கு வாங்கி கோவிலுக்கு வழங்கினார்கள். தேவரடியார்கள் கோவிலில் அதிகாரிகளால் தண்டிக்கப்பட்ட செய்தியும் உ.வே.சா நூலில் எழுதியுள்ளார். ஆலய வாசலின் ஒரு பக்கத்தில் பெண்ணை குனியவைத்து கழுத்தில் கயிறுமாட்டி அதை கால்விரல்களுடன் சேர்த்துக்கட்டி முதுகில் கல்லை ஏற்றி தண்டனை கொடுத்திருக்கிறார்கள்.கடன்காரர்களின் தொல்லைக்காட்பட்ட தாயும் மகளும் கோவிலில் தஞ்சம் புகுந்து அடிமையானார்கள், அடிமையாக ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக அவர்கள் பாதத்தில் கோவில் சின்னம் பொறிக்கப்பட்டது.


பொட்டுக்கட்டுதல் என்பது சமயம் சார்ந்த கோவில் சடங்கு, இச்சடங்கின் வாயிலாக ஒரு சிறுமி அல்லது இளம்பெண் அக்கோயிலின் தேவரடியாராக மாறுகிறார். ‘பதியிலார்’, ‘நித்தியசுமங்கலி’ என திருநாமங்கள் சூட்டப்பட்டன. மேட்டிமையோர் தம் மேலாணமையை நிலைநாட்டவும் ஒடுக்கப்பட்ட மக்கள் எதிர்ப்பின்றித் தம் மேலாண்மையை ஏற்றுக்கொள்ளவும் செய்யும் வழிமுறைகளில் ஒன்றுதான் சமயசடங்கு. பாலியல், சாதி, பொருளியல் என்ற தன்மைகளால் அடித்தளத்திலிருக்கும் பெண்ணைப் பொதுமகளிராக மாற்றும் புனிதச்சடங்கே பொட்டுக்கட்டுதல். சமயமுத்திரையின் வாயிலாக வரைமுறையற்ற பாலுறவு புனிதமாக்கப்படுகிறது. தேவடிமையின் வாழ்வியல் தேவைகளான உணவு, இருப்பிடம் ஆகியன கோவிலால் உறுதிசெய்யப்பட்டுவிட, மேட்டிமையோரின் குறிப்பாக புரோகித, நிலவுடமையாளர்களின் பாலியல் தேவைகளை நிறைவடையச் செய்வது அவளது பணியாகிவிடுகிறது.
கோவில் வழிபாடு, திருவிழா போன்றவற்றில் நடன்மாடுவது, பூக்கட்டுவது, கோலமிடுவது அவர்களது  அவல்வாழ்வை மறைக்கும் புனிதத்திரைகளாக மட்டுமே அமைந்தன.


தஞ்சை மராத்திய மன்னர்கள் ஏராளமான மனைவிகளுடன், வைப்பாட்டிகளுடன் வாழ்ந்த்தனர். வைப்பாட்டிகளுக்கென்று ‘கல்யாண மஹால்’ என்ற பெயரில் அரண்மனை இருந்துள்ளது.பருவம் அடைவதற்கு முன்பே சிறுமிகளை இங்கு வளர்த்துத் தம் பாலியல் வேட்கைக்குப் பயன்படுத்தி கொள்ளும் நோக்கில் சிறுமிகளை விலைக்கு வாங்கியுள்ளார்கள். மக்களைக் காப்பாற்ற வேண்டிய அரசாங்கமே பெண்கள் மற்றும் சிறுமிகளின் விற்பனையில் ஈடுபட்டிருந்தது.


நாஞ்சில்நாட்டு நிலைமை குறித்து 1881ம் ஆண்டு வெளியான ஓர் அறிக்கையில் தோவாளை அருகே தாழக்குடி கிராமத்தில் மாடத்தி என்ற நிறைமாத கர்ப்பிணி, பட்டினியாலும், உடல்நலமில்லாமலும் வேலைக்குச் செல்லவில்லை. அவளின் உரிமையாளரான நிலவுடமையாளன் அவளை இழுத்துவரச்செய்து எருமை  மாட்டுக்கிணையாகக் கலப்பையில் பூட்டி, சேற்று வயலில் உழும்படி செய்திருக்கிறான், மாட்டின் வேகத்திற்கு ஈடுகொடுக்கமுடியாமல் போனபோது தார்க்குச்சியால் குத்தப்பட்டு கலப்பையில் பூட்டியநிலையில் இறந்துபோனாள். எவ்வளவு கொடுமை!
இன்னொரு அறிக்கையில் , ஒரு குளத்தில் அல்லது ஆற்றில் கரை உடைந்துவிட்டால் அதற்குத் தெய்வத்தின் அல்லது பிசாசின் கோபமே காரணம், அதற்கு ஓர் அடிமையை உடைப்பில் உயிரோடு உள்ளே தள்ளி  மண்ணைப்போட்டு மூடியிருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: