ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

கனிமக்கொள்ளை - விவாதம்

எல்லா இடங்களிலும் இயற்கை வளங்களை கொள்ளையடித்து வருகிறார்கள், அரசாங்கம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. கோதாவரி ஆற்றுப்படுகையில் அரசாங்கத்துக்கு சொந்தமான இயறகை எரிவாயுவை ரிலையான்ஸ் காரனிடம் கொடுத்துவிட்டு அதற்கான விலைகளையும் இரண்டு மடங்காக்கி அம்பானிக்கு சொத்துசேர மத்திய அரசு வழிசெய்கிறது ஒரு புறம், தண்டகாரண்ய வனப்பகுதிகளில் கிடைக்கின்ற இரும்புத்தாது, அலுமினியம் , இன்னபிற தாதுக்களை தங்குதடையின்றி வெட்டியெடுத்து கொண்டிருக்கிறார்கள் கார்ப்பரேட்டுகள், அவர்களுக்கு தடையாக இருக்கின்ற பழங்குடிகளை காட்டைவிட்டு விரட்டிவிடுகிறார்கள். இதுவும் ஒரு பக்கம். கர்நாடாகாவில் பெல்லாரி சகோதரர்கள் பாஜகவின் முன்னாள் முதலமைச்சர் எதியூரப்பா ஆசியோடு இந்திய நாட்டின் இரும்புத்தாதுவை கப்பல்கள் வழியாக வெளிநாட்டிற்கு கடத்தினார்கள், தேசபக்தர்கள் செய்கிற காரியம் தேசவளத்தை கொள்ளையடிப்பது! கையிலிருக்கிற இரும்பைக் (கள்ளத்தனமாக) வெளிநாடுகளுக்கு கொடுத்துவிட்டு எப்படி நாம் வல்லரசாகப் போகிறோமே தெரியவில்லை, தவறு செய்தவர்கள் முற்றிலுமாக சுரண்டிய பின்னர் பிடிபட்டார்கள், அவர்களை என்ன செய்துவிடமுடியும் நமது சட்டத்தால்! இது ஒரு புறமிருக்க, தமிழ்நாட்டில் எத்தனையோ ஆண்டுகளாக கிரானைட்டு கற்களை வெட்டியெடுத்து துறைமுகங்கள் வழியாக ஏற்றுமதி செய்தார்கள், அதை கண்டுபிடித்து ? கண்ணுக்குத்தெரியாத ஒன்றை கண்டுபிடிக்கலாம்! ஆனால் எத்தனையோ லாரிகளில் கண்டென்ர்களில் ஏற்றிச் செல்லும் கிரானைட் கற்கள் அரசு நிர்வாகத்திற்கு தெரியவில்லையா? இப்பொழுது அங்கு செயல்பட்ட நிறுவனக்களை குவாரிகளை இழுத்துமூடியிருகிறார்கள், அந்த சூடு தணிவதற்குள் தூத்துக்குடி பகுதியில் வி.வி.மினரல்ஸ் நிறுவனம் தாதுமணலை அள்ளி ஏற்றுமதி செய்துவருவது இப்போது தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது????. அந்த மணலில் Ilmenite, Rutile, Zircon, Sillimanite, Garnet and Monazite போன்ற முக்கியமான கனிமங்கள் உள்ளன.

மண்ணிற்கு அடியே கிடைக்கும் தாதுக்கள் எல்லாம் அரசாங்கத்திற்கு அதாவது நாட்டு மக்களுக்குச் சொந்தம், அப்படியிருக்க ஆட்சிசெய்யும் அரசியல்வாதிகள், சில அதிகாரிகள் துணையுடன், அவர்களின் பினாமிகளாகவும் இயற்கை வளங்களை மாபியாக்கள் சூறையாடுகிறார்கள். இதன் மூலம் அவர்கள் கோடிக்கணக்காண பணத்தை சம்பாதிக்கிறார்கள், ஆனால் அந்தக் கொள்ளையினால் அரசாங்கத்திற்கு வருமான இழப்பை ஏற்படுத்துவதோடு எதிர்கால தேவையை அழித்துவிடுகிறார்கள். இயற்கை செல்வங்களை அள்ளும்போது பின்பற்ற வேண்டிய எந்த உத்தியையும், சட்டத்தையும் அவர்கள் பின்பற்றுவதில்லை. கிரானைட் கற்கள் தோண்டியெடுக்கும்போது சரி இப்போது தாதுமணலை கடற்கரையில் அள்ளும்போது சரி பாதிக்கப்பட்ட கிராம மக்களை அரசாங்கம் கண்டுகொள்வதில்லை, அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை உயிரோடு விடமாட்டார்கள் என்பது ஆற்றுமணலை அள்ளும் சம்பவத்திலேயே தமிழகம் பார்த்தது. சுற்றுச்சூழல் மாசு, குடிநீர் ஆதாரத்தை அழித்தல், விவசாயநிலங்கள் பயனற்றுப்போதல் என்பது பெரும்பகுதி மக்களின் வாழ்க்கையை குலைத்துவிடுகிறது. ஆனால் அரசு இயந்திரம் பெரும்பகுதி மக்களின் நலனுக்கு அல்லாமல் கோரமான மூலதனத்தின் பக்கம் நிற்கிறது.

இதைப்பற்றிய ‘நேர்படப்பேசு’ நிகழ்ச்சி 14-8-2013 அன்று புதியதலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது, அந்த நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் தோழர். கனகராஜ், திரு. வெங்கட்ராமன் என்ற வேதியியல் பொறியாளர்,திரு. சீனிவாசன் என்பவர் பூவுலகின் நண்பர்கள் மற்றும் திருமதி. எமி என்பவர் தூத்துக்குடி பஞ்சாயத்து அமைப்பிலிருந்து பேச வந்திருந்தார்கள். பூவுலகின் நண்பர்கள் இயற்கை அப்படியே விடவேண்டும், தொந்தரவு செய்யக்கூடாது.சுற்றுச்சூழலை பாதிக்கும் மணற் கொள்ளையை நிறுத்தவேண்டும் என்று வாதிட்டார். மணவாளக்குறிச்சியில் அரசாங்கத்தின் நிறுவனம் தாது மணலை அள்ளுவதால் சுமார் 900 பேருக்கு புற்றுநோயால் முடமாக இருக்கிறார்கள் என்றார்.

திரு.வெங்கட்ராமன் என்ற வேதியல் பொறியாளர், எல்லா நாடுகளிலும்தான் கனிமவளங்களை விற்கிறார்கள் நாம் விற்பதில் தவறேதுமில்லை என்றார். சீனிவாசன் சொன்ன radition காரணமாக புற்றுநோய் ஏற்பட்டது என்பதை மறுத்து நான் அந்த நிறுவனத்தில் 20 ஆண்டுகாலம் பணியாற்றுகிறேன் என்று கையை காமிச்சார். அவர் ஒரு அதிகாரி இதுவரை மண்லை கையினால் கூட தொட்டிருக்கமாட்டார். அந்த வேலைகளை கையாள் அள்ளும் தொழிலாளிகளுக்கு வருகின்ற நோய் இவருக்கு வர வாய்ப்பில்லை. எதற்கெடுத்தாலும் scien technilogy வந்திருச்சு, ஜீரோ effluent discharge தான் தொழிற்சாலைகளெல்லாம் செய்கின்றன என்று ஏனோ தெரியவில்லை எல்லா பெருமுதலாளிகளுக்கும் ஸ்டெர்லைட் உட்பட சர்டிபிகேட் கொடுக்கிறார். இந்தமாதிரி அதிகாரிகள் ஒன்று தனியாரின் துஷ்பிரயோகத்திற்கு அஞ்சுகிறார்கள் அல்லது உடந்தையாக இருக்கிறார்கள். இன்னும் சொன்னார், பூவுலகின் நண்பர்கள் இந்த மாதிரி சுற்றுச்சூழல் கேடுனா கோர்டுக்கு போங்கோ! டிவி ஸ்டேசன் ல சொன்னா நடக்குமா என்கிறார். எல்லாத்தும் இப்பெல்லாம் science technology இருக்குனு சரடு விட்டார். அவர் ஏன் அப்படி பேசுனாரு என்பது புரியவில்லை. இந்தியாவுல எந்த கம்பெனியும் ஜீரோ effluent discharge விதிகளை மீறவில்லை என்று திரும்பத்திரும்ப சர்டிபிகேட் கொடுக்கிறார். ஒரு கம்பெனிய சொல்லுங்கன்னு கனகராஜ் கேட்டார், அது குஜராத்துல இருக்கு என்கிறார். கோர்ட்டுக்கு எத்தனையோ போன ஸ்டெர்லைட் ஆலையை ஒன்னும் செய்யமுடியலை. அதுக்கெல்லாம் தொழிற்சாலையை மூடிடமுடியுமான்னு கேட்குறார். அரசாங்கத்த நம்பனும், கம்பெனிய நம்பனும, கோர்ட்ட நம்பனும் சொல்றாரு. அரசாங்கம் சட்டம் எல்லா நல்லாத்தான் போடுது, அத நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் இருக்கு, சுற்றுச்சூழல் பாதிப்புன்னா pollution control board ஐ கேட்கனும் சொல்லிக்கிட்டே இருந்தார்.

திருமதி.எமி என்கிற பெண்மனி நான் வி.வி.மினரல்ஸ்க்கு எதிரா 1000 மனு போட்டுருக்கேன், தாது மணலை பேசும் போது இந்தியா முழுக்க இருக்கிற எல்லா கொள்ளையையும் நிறுத்தனும்னு நிக்கிறாரு. இந்த மண்லை அள்ளவில்லையென்றால் அது அப்புறம் வேற நாட்டுக்கே போயிடுமாம், கடல்தான.. அந்த கலெக்டர் ரெண்டு வருசமா கோடிக்கணக்க வாங்கிட்டு இப்ப நல்லபேரு வாங்கிட்டாரு, இப்ப ஏதோ தொழில் போட்டியிலதான் இந்த கொள்ளையே வெளியுலகத்து வருதுன்னு சொன்னாரு.

 மா.கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தோழர்.கனகராஜ், இந்த தனியார் அள்ளுகிற மணலால் அந்த அபகுதியில் ஏற்படுகிற சுற்றுச்சூழல் பாதிப்பு, விவசாயம், குடிநீர் கெடுதல், அள்வுக்கு மீறி மண்லை அள்ளியதால் மீனவர்கள் பாதிப்பு பற்றி சொன்னார். தாது வளம் என்பது அள்ளப்படவேண்டும், ஆனால் இது தேச நலனிற்கும் மக்கள் நலனிற்கும் உகந்ததல்ல. ஒரு சில மணல் அள்ளும் மாபியாக்கள் கொள்ளையடிப்பதற்கு எதிர்கால சமூகமும் அந்தப்ப்குதி மக்களும் ஏன் பாதிக்கப்படவேண்டும் என்றார். கலெக்டர் அந்தப் பகுதியில் ஆய்வுசெய்து மணற்கொள்ளை சட்டவிரோதம் என்று அறிவித்தபின்பும் இதுவரை காவல்துறை எப் ஐ ஆர் போடவில்லை என்பது கலெக்டர் சொன்னபடி கேட்காமல் தூத்துக்குடி, திருனெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட வருவாய்த்துறை நிர்வாகம் மாபியாக்கள் சொன்னபடி நடக்கிறது என்பது தான். வேதியியல் பொறியாளர் திரு.வெங்கட்ராமனுக்கு சரியான கேள்விகளை முன்வைத்தார். 100க்கு மேற்பட்ட இடங்களில் மணல் அள்ளும் பணியில் நிறுவனக்கள் செயல்படும்போது வெறுமனே 6 இடங்களில் மட்டும் ஆய்வு செய்து மதிப்பிடுவது என்பது சரியல்ல, அதுவும் மூன்று மாவட்டங்களிலும் பணியிலிருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை அமைக்கப்படவேண்டும் என்றார்.

மீனவர் தரப்பிலிருந்து திரு.அமலன் தொலைபேசி வாயிலாக கருத்து தெரிவிக்கும்போது மணல் அள்ளுவதால் மீன்வர்களின் வாழ்வாதாரம், படகுகளை கரைக்கு கொண்டுவந்து செர்ப்பதில் ஏர்படும் மனிதசக்தி, தாதுக்களை எடுத்துவிட்டு திரும்பக்கொட்டும் மணலால் ஏர்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை விவரித்தார். இந்த மணற்கொள்ளையை எதிர்த்து போராட்டம் நடந்தால் அங்கே திட்டமிட்டு கலவரம் உருவாக்குகிறார்கள் என்றார். விவாதத்தில் பங்கேற்ற திரு.வேதியியல் பொறியாளர் வெங்கட்ராமன் சொல்வதை கேட்கும்போது அவர் தனியார் நிறுவனக்களுக்கும் மாபியாக்களுக்கும் சார்பாக பேசுவது மாதிரி இருந்தது. தோழர்.கனகராஜ் சமீபகாலமாக அடிக்கடி நேர்படப் ப்ச்சு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அவர் பங்கேற்கிற ஒவ்வொரு விவாதத்திலும் கருத்துக்களை ஆணித்தரமாக சொல்கிறார். அந்த கருத்துக்களும் கவலைகளும் மக்கள் சார்பாக இருக்கிறது என்பது தான் ஏற்புடையது.

கருத்துகள் இல்லை: