புதன், 25 ஏப்ரல், 2012

வீட்டுக்கு ஒரு நூலகம்


வெடிகுண்டு ஒருமுறைதான் வெடிக்கும்
புத்தகங்கள் திறக்கும் போதெல்லாம் வெடிக்கும் - ஜெயகாந்தன்


முன்னெல்லாம் இப்படி உலகப்புத்தக தினத்தை கொண்டாடினார்களா என்பது தெரியவில்லை, தமிழ்நாட்டில் வாசிப்பை ஒரு இயக்கமாக நடத்திவருகிறார்கள் என்பது ஆரோக்கியமான சூழல். புத்தகங்களைக் கண்டால் காததூரம் ஓடும் அளவுக்கு நமது கல்விமுறை அமைந்துவிட்டது. ௨௦ கிலோ எடையுள்ள மாணவன் அல்லது சிறுவர் சிறுமிகள் அதே எடையுள்ள புத்தகங்களை பள்ளிகளுக்கு சுமக்கிறார்கள். வீட்டுக்கும் வந்து அதே புத்தகங்கள் வீட்டுப்பாடம் என்ற பெயரில் துரத்துகிறது. எல்கேஜி யிலிருந்து டியூசன் ஆரம்பமாகிறது என்றால் எந்த அளவிற்கு கல்வி வர்த்தகமாகிப் போனது. சிறுவர்கள் எப்படா இந்த பள்ளிக்கூடத்திலிருந்து விடுதலை கிடைக்கும் என்று ஏங்க ஆரம்பிக்கிறார்கள். பெற்றோர்கள் ஏதோ பந்தயத்திற்கு அனுப்புவது போல குழந்தைகளை தயார் செய்கிறோம். பாடப்புத்தகத்தைத் தவிற வேறெந்த புத்தகத்தையும் பார்த்திருத மாணவ /மாணவிகள் வளர்கிறார்கள். புத்தகம் என்றாலே சிறுவயதிலேயே வெறுப்பாகிவிடுகிறது. புத்தகம் வாசிப்பதற்கும் கல்விமுறைக்கும் தொடர்பு இருக்கிறது. இந்த முறை மாற்றப்படவேண்டுமானால் கல்வியில் சீர்திருத்தம் செய்யப்படவேண்டும், அதற்கு ஒரு படியாக தமிழகத்தில் `சமச்சீர்கல்வி`யை எப்படி ஒழிப்பது என்று பார்க்கிறார்கள் கல்விவர்த்தகர்களும் அவர்களுக்கு துணைபோகும் அரசும்.

ஒருமுறை எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் சிங்கப்பூர் அனுபவத்தை பகிர்ந்தார். அங்கே அரசாங்கம் “வாசியுங்கள் சிங்கப்பூர்” என்ற இயக்கம் நடத்தி உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு மொழிகளில் எழுதுகிறவர்களை அழைத்து இவர்களெல்லாம் படைப்பாளிகள் இவர்களை வாசியுங்கள் என்று கோடிக்கணக்கில் புத்தகங்களை வாங்கி நூலகத்திற்கு மக்களை செல்லுங்கள் என்று அரசாங்கமே செய்கிறது. இந்தியாவில் சமீபத்தில் பார்த்தோம், மேற்குவங்கத்தில் நூலகங்களில் புத்தகங்கள் வாங்குவதற்கும், சில நாளிதழ்களை வாங்குவதற்கும் தடை செய்த மம்தாபானர்ஜி கம்யூனிசத்தை எதிர்க்கிறேன் பேர்வழி என்று உலகம் கொண்டாடுகிற மார்க்ஸ், ஏங்கெல்ஸ் போன்ற மேதைகளின் சிந்தனைகளை பாடப்புத்தகத்திலிருந்து நீக்கினார். வாசியுங்கள் விருப்பமுள்ளதை எதைவேண்டுமானாலும் என்பது சுதந்திரம். இதைவாசிக்காதே என்பது பாசிசம். அவரவர் விருப்பமுள்ளதை அவரவர் வாசிக்கட்டும். தமிழகத்தில் இடதுசாரிகள் நடத்துகிற புத்தகத்திருவிழாவில் ஜோதிடம், மதம் பற்றிய புத்தகங்கள் விற்காமல் இருக்கிறார்களா? ஒவ்வொருவருக்கும் தனித்தனி பாதைகள் இருக்கும். மதம் என்பதும் ஒரு புத்தகம் தானே, கிறிஸ்தவர்களுக்கு பைபிள், இஸ்லாமியர்களுக்கு குரான்,இந்துக்களுக்கு பகவத்கீதை மட்டுமல்ல் எத்தனையோ நூல்கள் எல்லாமே புத்தகங்கள் தான். இன்று உலகத்தை வழிநடத்துவது பொருளாதாரம் என்றால் அதுவும் புத்தகம் தான். ஆடம்ஸ்மித் எழுதிய welath of nation அல்லது கார்ல்மார்க்ஸ் ஏங்கெல்ஸ் எழுதிய Das capital அல்லது இரண்டையும் கலந்து அமல்படுத்துகிற நாடுகளைப் பார்க்கின்றோம்.

ஜான்பெர்க்கின்ஸ் எழுதிய Confessions of an Economic Hit Man பற்றி ஒரு இந்தோனேசிய சகஊழியரிடம் பேசினேன், அவர் இந்தோனேசியாவைப் பற்றி ஒரு அத்தியாயம் முழுவதும் எழுதிய்ருக்கிறார். அது உண்மைதானா என அவரிடம் கேட்டேன். ஆம் இன்றும் எங்கள் நாட்டில் துரப்பணம் செய்யப்படும் கச்சா எண்ணெய் பன்னாட்டு எண்ணெய் கம்பெனிகளுக்கு மிகக்குறைந்த விலைக்கு விற்கப்பட்டுவருகிறது என்றார். இதைக் கேட்ட மற்றொருவர் தயவுசெய்து இதைப்பற்றி பேசாதீர்கள் என் ரத்தம் கொதிக்கிறது என்றார். இந்த உண்மைகளை தவிர்த்துவிட்டு ஆன்மிகம் நோக்கி செல்லவும்,வெறும் பொழுதுபோக்கு சாதனங்களை நாடவும் நாம் சென்றுவிடலாம். அதைத்தான் அரசாங்கம் எதிர்பார்க்கிறது. அறியாமை நம்மை அமைதியாக இருக்கச்செய்யும்,அறிவுபெற்று சிந்திப்பவர்கள் கவலைப்படுகிறார்கள்.அந்த அறிவை புத்தகங்கள் தான் தருகின்றன.

உலகப்புத்தக தினத்திற்காக எழுதவேண்டியதை முழுசா எழுதமுடியல..

1 கருத்து:

vasan சொன்னது…

பொது நூல‌க‌ங்க‌ள் மூட‌ப்ப‌ட்டு, டாஸ்மாக் அதிக‌மாய் திறக்க‌ இதுவும் ஒரு காரண‌ம்.
வாசிப்பில் ம‌க்க‌ளின் கோப‌ம் வ‌ள‌ரும், டாஸ்மாக்கில் கோப‌ம் வ‌டியும். சீனாவில் அபின் அதைத்தான் அப்போது செய்து கொண்டிருந்த‌து. ம‌க்க‌ள் கூடி விவாதித்து த‌ங்க‌ளுக்கு எதிரான‌ அரசை விம‌ர்சித்து எழுச்சி பெறாம‌ல், அர‌சை ம‌துவ‌றைக‌ளில் விம‌ர்சித்து கோப‌ம் நீர்த்து வ‌டிந்து விடுகிற‌து. ஒவ்வோரு அக்கினி குஞ்சுக‌ளும் ம‌ரப்பொந்திடை போகாது ம‌துக்கூவ‌த்தில் வீழ்ந்து வீணாகிற‌து அர‌சின் தந்திர‌ சூழ்ச்சியால்.