செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

எனக்கு இல்லையா கல்வி?

ஒரு பொதுப்பாடத்திட்டத்தை சமச்சீர்கல்வி என்ற பெயரில் அமல்படுத்துவதற்கு தமிழகத்தில் ஆட்சி செய்கிற அரசும் தனியார் கல்வி நிறுவனங்களும் நடத்திய கூத்தை பெருவாரியான மக்களின் விருப்பத்தை நல்லவேளையாக உச்சநீதிமன்றம் செயல்படுத்த ஆணையிட்டிருக்கிறது. இன்றைய சமூகத்தில் கல்வி என்பது கடைச்சரக்காகிவிட்ட வேளையில் சாதாரண மக்களின் குழந்தைகளின் ஏக்கமாக “எனக்கு இல்லையா கல்வி?” என்ற ஆவணப்படம் தமிழக்த்தில் ஆரம்பக்கல்வி குறித்து நமக்குத் தெரியாத பல உண்மைகளை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது.

புதிதாக பொறுப்பேற்ற அரசு சமச்சீர் கல்வியின் ஒரு பகுதியான பொதுப்பாடத்திட்டத்தைக் கூட அமலப்டுத்த மனமில்லாமல், ஆலோசனை கூறுவதற்கு கல்வியாளர்கள் என்ற பெயரில் கல்விக் கடைகளை நடத்துவோரை நியமித்தது. அந்த வகையில் இந்த அரசுக்கு யாரெல்லாம் கல்வியாளர்கள், எதிர்காலதலைமுறையினர் மீது அக்கறை கொண்டவர் யார் என்பது கூட தெரியவில்லை அல்லது வேண்டுமென்றே சிறந்த கல்வியாளர்களின் குரலை கேட்பதற்கு தயாராக இல்லை. திரு.பாரதிகிருஷ்ணகுமார் அவர்கள் அடிப்படையில் ஒரு இலக்கியவாதியாக இருந்தாலும் அவருடைய இந்த ஆவணப்படத்தை பார்த்த பின்பு சிறந்த கல்வியாளராக அறியப்படுகிறார். கும்பகோணத்தில் நடந்த தீ விபத்தில் பள்ளியில் 94 குழந்தைகள் பலியாயினர், அந்த கோர சம்பவத்தை ஒரு ஆவணப்படமா எடுத்திருந்தார். கல்வியை வணிகமாக மாற்றியதன் விளைவாக நடந்த கோர நிகழ்ச்சி அது. அந்த ஆவணப்படத்தை பார்த்த பாதிப்பு என்பது ஒவ்வொரு ஜூலை 16ம் தேதியும் இருக்கிறது. இந்த சமூகத்தில் “தனக்கு நேர்ந்தால் பாதிப்பு, அடுத்தவருக்கு நிகழ்ந்தால் செய்தி” என்ற வரிகள் எவ்வளவு உண்மையானவை.

ஏன் அரசுப்பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க சாதாரண மக்கள் கூட தயங்குகிறார்கள் என்றால் அது தான் அரசின் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி எனலாம். எப்படி ஒரு பொதுத்துறையை திட்டமிட்டு சீர்குலைக்கிறார்களோ அதே மாதிரி தான் அடிப்படை கல்வியையும் அடிப்படை மருத்துவத்தையும் சீரழிக்கிறார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் ஆரம்பப் பள்ளிகள் இருக்கின்றன. அங்கெல்லாம் ஐந்து வகுப்புகளுக்கு ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட்டால் பெற்றோர்கள் எப்படி அந்தப் பள்ளிக்கு தன் குழந்தையை அனுப்புவார்கள். இன்னொன்று இந்த சமூகத்தில் அதிக கட்டணம் செலுத்தினால் அது தரமானது என்ற சிந்தனைவேறு நிலவுகிறது. இப்படி ஆசிரியர்களை குறைத்ததினால் மாணவர்கள் அங்கு சேர்க்கப் படவில்லை, எத்தனை விலை கொடுத்தாவது சிறந்த கல்வி வேண்டும் என்று பெற்றோர் ஆசைப்படுகிறார்கள். மாணவர்கள் குறைந்ததால் அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. சாதரணமக்கள் படிக்கிற அடிப்படை ஆரம்ப கல்விக்கு செலவு செய்வதை விட இந்த அரசு வசதிபடைத்தவர்கள் அல்லது ஏற்றுமதியாகப் போகிற ஆற்றலை உருவாக்குகிற உயர்கல்விக்கு அதிக நிதி ஒதுக்குகிறது.

14 வயதுவரை எல்லோருக்கும் கட்டாய ஆரம்பக் கல்வி என்பதை சட்டமாக்கினால் போதும் என்று அரசு நினைக்கிறது. அப்படி ஒரு சட்டமே சர்வதேச சந்தையில் குழந்தைத் தொழிலாளர்களால் உற்பத்தி செய்யப்படுகிற உற்பத்திப் பண்டங்களை வாங்க மறுக்கும் சர்வ தேச சமூகத்திற்காக சட்டம் போடப்பட்டது என்று கல்வியாளர்கள் கூறுவது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது. அரசு ஏன இன்னும் ஆதிதிராவிடர்கள் மட்டும் படிப்பதற்கு பள்ளிகளை நடத்தவேண்டும். அவர்கள் மற்ற மாணவர்களுடன் படித்தால் என்ன? ஆதிதிராவிட நல்த்துறையின் கீழ் நடத்தப்படும் பள்ளிகள் மற்றும் விடுதிகள் மிகவும் மோசமானவை. அங்கே தான் அதிகமான ஊழல் நடைபெறுகிறது. சமூகத்தின் கடைக்கோடி மக்களுக்கு சேரவேண்டியதை சேரவிடாமல் வைப்பதற்கு ஒரு அமைச்சகமே செயல்படுகிறது. பள்ளிகளில் தீண்டாமையை ஆசிரியர்கள் கடைபிடிப்பதால் அந்த மாணவர்கள் உளவியல் ரீதியாக பாதிப்படைகின்றனர். அருந்ததிய குழந்தைகளை வைத்து பள்ளிகளின் கழிப்பறையை சுத்தம் செய்ய வைப்பதை ஒரு ஆசிரியரே செய்தால் என்ன சமூகம் இது.அந்தக் குழந்தைகள் என்ன பிறக்கும்போதே கக்கூஸ் கழுவும் கருவியோடா பிறக்கிறார்கள்?

நாடு 8 சதவீதம் வளர்ச்சியடைகிறது என்று சொன்னால் மட்டும் போதுமா? அந்த வளர்ச்சி சாமான்யனுக்கு அரசு தரமான கல்வி அளிப்பதன் மூலமும் சிறந்த மருத்துவசதியை அளிப்பதன் மூலமும் காட்டவேண்டாமா? பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி இல்லை,குழந்தைகள் எங்கே செல்வார்கள். கட்டிடங்கள் இல்லாத பள்ளிகள்,கூரை இல்லாத பள்ளிகள், மரத்தடி பள்ளிகள், ஆசிரியர் இல்லாத பள்ளிகள், அடிப்படை வசதிகளற்ற பள்ளிகள் இன்னும் எத்தனையோ இல்லாமை அரசுப்பள்ளிகளில் நிலவிக்கொண்டிருக்கிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உறப்த்தியில் 6 சதவீதம் கல்விக்கு ஒதுக்கமுடியவில்லை. ராணுவத்திற்கு பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கிவிட்டு இந்தியாவின் எதிர்காலமாம் குழந்தைகள், அவர்களின் ஆரம்பக்கல்விக்கு நிதி ஒதுக்கவில்லை. இப்படி வசதி படைத்தவர்களின் குழந்தைகள் நல்ல பள்ளிகளில் பெறுகிற கல்வியும் ஏழைஎளியமக்களின் குழந்தைகள் பெறுகிற கல்வியும் எப்படி சமச்சீர் கல்வியாக மாறும். அதைத்தான் ஒரு கல்வியாளர் சொல்கிறார் இரண்டு தரப்பட்ட குழந்தைகளுக்கும் போட்டி நடக்கிறது, யானை பொம்மை செய்யவேண்டும் ஒருகுழந்தையிடம் மணலையும் மற்றொரு குழந்தையிடம் களிமண்ணையும் கொடுக்கிறோம். எப்படி சமவாய்ப்புகள் இல்லாமல் இங்கே அசமத்துவத்தை குறைக்கமுடியும்.

இந்த ஆவணப்படம் சிறந்த கல்வியாளர்களை நமக்கு அறிமுகப்படுத்துவதோடு அவர்களில் சிலர் தான் இந்த சமச்சீர் கல்விக்காகப் போராடியவர்கள். ஆவணப்படத்தை இயக்கிய திரு.பாரதிகிருஷ்ணகுமார் அவர்கள் ஒரு சமூகக்கடமையாற்றி இருக்கிறார் என்று தான் நன்றி சொல்லமுடியும்.

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Excellent!

Vijayan

hariharan சொன்னது…

வருகைக்கு நன்றி தோழரே!