திங்கள், 3 மே, 2010

மக்களை அரசியலற்றவர்களாக ஆக்கும் அரசியல்

மாணவர்களிடம் நீ கல்வி முடித்தவுடன் என்ன உத்தியோகம் பார்க்கப்போகிறாய், என்றால் பொறியாளர்,மருத்துவர்,மென்பொருள் நிபுணன் அல்லது பத்திரிக்கையாளன் ஆவேன் என்பார்கள் ஒருபோதும் அரசியல்வாதியாக ஆவேன் என்று சொல்லமாட்டார்கள். அந்த அளவிற்கு நம் சமூகம் அரசியல் என்பதை மக்களிடமிருந்து ஒதுக்கிவைத்துள்ளது. இதற்குப் பின்னால் மக்களை அரசியலற்றவர்களாக ஆக்கும் அரசியல் உள்ளது.

நம் நாட்டில் மட்டுமல்ல உலகில் எந்த ஒரு மூலையிலும் வாழும் சகல மக்களின் வாழ்க்கையை தீர்மானிப்பது அரசியல் தான். நாம் மீடியாக்களின் வாயிலாக சகல செய்திகளையும் அறிந்து கொள்கிறோம், மீடியாவில் வருபவை எல்லாமே நடு நிலையான செய்திகள் என்று கூறமுடியாது, இப்போது அரசியல் கட்சி சார்பாகவும் ஊடகங்கள் வந்துவிட்டன. எந்த ஊடகமும் நடு நிலை கிடையாது. அது தான் சார்ந்துள்ள வர்க்கத்தைத் தான் பிரதிபலிக்கும். எந்த செய்தியை மக்களுக்கு தெரிவிப்பது அல்லது மறைப்பது அல்லது அந்த செய்தியின் முக்கியத்துவத்தை தடுப்பது எல்லாமே அது தீர்மானிக்கமுடியும். நாட்டு மக்களைப் பாதிக்கின்ற ஒரு மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யும் போது இங்கு நித்தியானந்தாக்கள் வந்து முதல் பக்கத்தில் ஆக்ரமித்துக்கொள்கிறார்கள். கார்கில் போரின் போது எல்லோரையும் தேசபக்தியில் ஆழ்த்திவிட்டு அரசு தவறவிட்ட உளவு விசயத்தை மறைத்துவிட்டது. இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தியின் வளர்ச்சி GDP 8% அல்லது 9% ஆனால் குறிப்பிட்ட பெரும்பணக்காரர்களின் சொத்துமட்டும் பலமடங்குகள் அதிகரித்து வருகிறது. குப்பன்,சுப்பன் முதல் டாடா,பிர்லா,அம்பானி வரை அனைவரின் வாழ்க்கையையும், வளர்ச்சியையும் தீர்மானிப்பது அரசியல் அல்லது அரசு. அரசியல் கல்வியை அல்லது விழிப்புணர்வை மக்கள் அறியவிடாமல் தடுப்பதற்காகவே நாம் காணும் மாஸ் மீடியா பெரிதும் உதவுகிறது. மானாட மயிலாட, நெடுந்தொடர்கள் மற்றும் சினிமா சார்ந்த கவர்ச்சிமய செய்திகள் நம்மை ஆக்ரமித்துவிடுகின்றன.

நம் நாட்டில் மட்டுமல்ல எல்லா நாட்டிலும் அரசியலுக்கும்,ஊடகங்களுக்கும் மற்றும் பெருமுதலாளிகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அந்த தொடர்பை விட ஊடகங்களின் உரிமையாளர்கள் பெருமுதலாளிகள் அவர்களின் கட்டுப்பாட்டில் தான் இயங்குகிறது. அரசியலும் அவர்களின் நலனுக்காகவே இயங்குகிறது. அப்படியும் திருப்தியடையாமல் அனில் அம்பானி, நவீன் ஜிண்டால், M.A.M.ராமசாமி மற்றும் விஜய் மல்லயா போன்றோர் அரசியல் கட்சிகளின் உதவியால் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் இடம் பெற்றிருக்கின்றனர். மேலும் சில அரசியல்வாதிகளே பெரும் தொழிலதிபர்களாகவும் ஆசியப் பணக்காரர்களின் வரிசையிலும் இடம் பெற்றுவிட்டனர்.இப்படி கடின உழைப்பால் மட்டுமே இவர்கள் இந்த இடத்தைப் பிடித்துவிடவில்லை, மாறாக அரசின் கொள்கைகள் மேற்கூறியவர்களின் நலன்களுக்காக அமைக்கப்படுகிறது. அப்படி இல்லையென்றால் உலகின் முதல் பத்து பணக்காரர்களின் வரிசையில் உள்ள இந்தியர்களையும், 30 சதவீதத்திற்கும் மேலான மக்கள் வறுமைக்கோட்டிலும் வாழும் இந்தியர்களையும் ஒரே நாட்டில் காண்கிறோம்.இந்தியாவில் ஒரு பக்கம் பில்லினியர்கள் வேகமாக அதிகரிப்பதும், மற்றொரு புறம் வறுமைக்கோட்டுக் கீழ் வாழும் எண்ணிக்கை அதிகரிப்பதும் நமது பொருளாதாரக் “கொள்கை” யால் ஏற்பட்டது தான், இந்த கொள்கை முடிவே இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது.

Article: 39(c) that the operation of the economic system does not result in the concentration of wealth and means of production to the common detriment

புதிய பொருளாதாரக் கொள்கைகளின் வாயிலாக இந்தியா வளர்ந்துவருகிறது என்று மன்மோகன் சிங்கும் ப.சிதம்பரமும் கூறிவருகிறார்கள் இவர்கள் கூறும் இந்தியர்கள் 5 சதவீத பணக்காரர்கள் மட்டுமே, கடந்த 20 ஆண்டுகளில் தான் இந்திய கோடீஸ்வரர்கள் பில்லினியர்களாக மாறினர். அவர்களின் எண்ணிக்கையும் வேகமாக வளர்ந்து வருகிறது. பெருவாரியான மக்களும் பஞ்சப்பராரிகளாக வைக்கப்பட்டுள்ளனர். ஆகவே எல்லாவற்றிற்கு பின்பும் அரசியல் உள்ளது என்பது தான் உண்மை.



தினமும் மக்கள் பார்க்கும் செய்திகளில் அவர்கள் விவாதிக்கும் போது அரசியல் என்றாலே சாக்கடை தான், அது காசு பணம் சம்பாதிக்கின்ற தொழில் அல்லது தேர்தல் மட்டுமே அரசியல் என்று தான் பார்க்கிறோம். மேலும் அரசியல்வாதியை குறைசொல்லாத நபரே இல்லை, ஒவ்வொருவரும் எல்லாவற்றிற்கும் அரசியல்வாதியை குறைகூறுகிறோம்,ஆனால் நாம் தவறவிட்ட அதிகாரத்தை கேள்வி கேட்கும் தன்மை இங்கு இல்லை. எல்லா அரசியல் வாதியும் ஒண்ணு தான் என்ற ரீதியில் பேசுவோம். ஆனால் மக்களுக்காக அரசியல் நடத்தும் சில இயக்கங்களை காணத்தவருகிறோம். அரசியலில் தலைமையை நோக்கி கேள்வி கேட்கும் ஜனநாயகத் தன்மை இல்லை தான். தமிழ்சினிமாவில் வரும் கதாநாயகனைப் போல் இந்த சமூகத்தை யாராவது வந்து மாற்றிவிடமாட்டார்களா என்று தான் உள்ளோமே தவிர நம்முடைய கடமை / பங்கு என்ன என்பதை நாம் செய்வதில்லை.

மனித சமுதாயத்தில் துன்ப, துயரங்களை பற்றி கவலை கொள்ளாதவர்களை மிருகங் கள் என்றார் மாமேதை மார்க்ஸ். அதையே புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் சொல்லும் பொழுது

“தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு

சம்பாத்யம் இவையுண்டு தானுண் டென்போன்

சின்னதொரு கடுகுபோல் உள்ளங் கொண்டோன்!”


என்று சீறுகிறார்.

அரசியல் என்றால் என்ன? அதில் நம்முடைய பங்கு என்ன? என்பது பற்றி எழுத்தாளரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் மாநில செயலருமான தமிழ்செல்வன் “அரசியல் எனக்குப்பிடிக்கும்” என்ற சிறு புத்தகத்தில் தெளிவாக எழுதியுள்ளார். அவர் எழுதிய புத்தகத்தை அடுத்தடுத்த இடுகையாக வெளியிட முயற்சி செய்கிறேன்.

6 கருத்துகள்:

narayanan சொன்னது…

சம காலத்திற்கு தேவையான கருத்துக்கள். சமுதாய மாற்றம் காண விழையும் ஒவ்வருவரும் தங்கள் பணியை தொடங்க வேண்டிய இடமே இது தான்.

எனக்கு அரசியல் அவாவை உருவாக்கியதே எனது நம்பிகையான "அரசியலால் மட்டும் தான் அனைவருக்கும் நல்லது செய்ய முடியும்"

எனக்கு பிடித்த வரிகள்...
"நம் நாட்டில் மட்டுமல்ல உலகில் எந்த ஒரு மூலையிலும் வாழும் சகல மக்களின் வாழ்க்கையை தீர்மானிப்பது அரசியல் தான்

தமிழ்சினிமாவில் வரும் கதாநாயகனைப் போல் இந்த சமூகத்தை யாராவது வந்து மாற்றிவிடமாட்டார்களா என்று தான் உள்ளோமே தவிர நம்முடைய கடமை / பங்கு என்ன என்பதை நாம் செய்வதில்லை"

அருமையாக எழுதுகிறிர்கள் நல்ல தொடக்கம்... தொடர்ந்து பயணிக்கவும்....

நா.நாராயணன்

hariharan சொன்னது…

அன்பு நாராயணன், உங்கள் வருகைக்கு நன்றி!

Hai சொன்னது…

மாதவராஜின் சிபாரிசில் உங்களது வலைப்பூ எனக்கு அறிமுகமானது.

நல்ல சிந்தனைகளுடன் தெளிவான நடையுடன் வந்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்.

உங்கள் எண்ணங்கள் மற்றும் கருத்துக்கள் மிகவும் சரியே ஆனால் இன்றைய வர்த்தகமயமாக்கப்பட்ட அரசியல் கட்டமைப்பில் அவைகள் நடைமோரை சாத்தியமா என்றெல்லாம் மிகவும் எண்ணியதுண்டு. ஆனால் இவ்வகையில் தற்போது ஜெயப்ரகாஷ் என்றொரு இளைஞர் அவர் ஒரு முன்னாள் IAS அதிகாரியும் கூட மரசியலில் மாற்றம் வேண்டி ஒரு கட்சி ஆரம்பித்து அவர் மட்டும் MLA வாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஆந்திர சட்டமன்றம் சென்றிருக்கிறார்.
நம்மூரில் கூட சிவகாமி IAS அவர்கள் ஒரு கட்சி ஆரம்பித்திருக்கிறார்.
சரத்பாபு என்றொரு இளைஞர் தனித்து சென்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார்.
இவ்வகையில் மாற்றத்தை எதிர்பார்க்கிறோம் ஆனால் அது விரைவில் நடைபெறும் வாய்ப்பு இல்லை.

hariharan சொன்னது…

இப்படி தனி நபர்களால் மாற்றத்தை கொண்டுவரமுடியாது, அப்துல் கலாம் அவரின் ஜனாதிபதி பதவிக்காலத்தில் எண்ணற்ற மாணவ்ர்களை சந்தித்தார் எல்லாரையும் கனவுகாண சொன்னார். நீங்கள் குறிப்பிட்ட சிவகாமி பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்தார்,இப்போது எந்த கட்சியில் இருக்கிறார் என தெரியவில்லை. மாற்றம் நிச்சயம் தேவை ஆனால் அது தனிநபர்களால் சாத்தியமல்ல.

யாசவி சொன்னது…

ஹரி

உன் கருத்துடன் ஒத்துப்போகின்றேன்.

ஆனால் தனிமனிதர்களால் மாற்றம் முழுவதுமாக சாத்தியமில்லை.

அதே வேளையில் அவர்களால் மற்றவர்களின் மன குளத்தில் கல் எறிய முடியும் அதில் தோன்றும் அலைகள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும்

kashyapan சொன்னது…

ஹரிஹரன் ஜி! " singular will become plural and plural will become singular" என்பது தர்க்கவியல் விதி. பனைமரங்களுக்கு நடுவில் பிரும்மாண்டமான வேப்பமரம் இருந்தாலும் அது பனந்தோப்பு என்று தான் அழைக்கப்படும்.பனை பராமரிக்கப்படாமல்,வேப்பம் விதைகளால் புதிய வேப்பங்கன்றுகள் அதிகமானால் தோப்பின் பெயர் மாறி வேப்பம்தோப்பு என்று அழைக்கப்படும்.ஜெயப்ரகாஷ்,சிவகாமி,சரத் பாபு ஆகியோரை வாருங்கள் தோட்டம் போடுவோம் என்று அழிப்போமே! எத்தகைய தோட்டம் என்பதை நாம் தீர்மானிக்க ,நாம் விரும்பும் தோட்டம் பூத்து குலுங்கட்டும்...காஸ்யபன்